அதிமுக எடப்பாடி அணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
எடப்பாடி அணியின் வேட்பாளர் யார் என்ற கேள்வி இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேராவின் மறைவினால் அங்கு இடைத் தேர்தல் வந்திருக்கிறது.
இடைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தையு காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
மற்றக் கட்சிகளை முந்திக் கொண்டு திமுக கூட்டணி வேட்பாளரை அறிவித்தது. 12 அமைச்சர்கள் 19 மாவட்டச் செயலாளர்கள் அடங்கிய தேர்தல் பணிக் குழுவையும் வேகமாக அமைத்து தேர்தல் பணிகளை துவக்கிவிட்டது.
திமுகவைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை அறிவித்தது. அந்தக் கட்சியின் சார்பில் மேனகா போட்டியிடுகிறார்.
அடுத்து தினகரனின் அமமுகவும் வேட்பாளரை அறிவித்தது. அமமுக சார்பாக சிவபிரசாத் போட்டியிடுகிறார்.
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக தனித்து போட்டியிடுவதாக கூறி ஆனந்த் என்பவரை வேட்பாளாராக அறிவித்தது.
அதிமுக கூட்டணியின் மற்றொரு கட்சியான பாமக போட்டியிடவும் இல்லை, ஆதரவும் யாருக்கும் இல்லை என்று அறிவித்தது.
இப்படி கட்சிகள் வேட்பாளர்களையும் நிலைப்பாடுகளையும் அறிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியில் குழப்பங்கள் நீடித்தது.
அதிமுக கூட்டணி சார்பாக பாஜக போட்டியிட வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பட்டது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி அணி முந்திக் கொண்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் போட்டியிடுவோம் என்று அறிவித்தது.
உடனே ஓ.பன்னீர்செல்வமும் தாங்கள்தான் உண்மையான அதிமுக, எங்கள் சார்பாக வேட்பாளரை நிறுத்துவோம் என்று அறிவித்தார்.
இப்படி அதிமுகவின் இரண்டு அணிகள் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.
உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது எடப்பாடி தரப்பு. அந்த வழக்கு பிப்ரவரி 3-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையில் பாஜகவின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை என்று அறிவித்தார்.
இப்படி குழப்பங்களுடன் அதிமுக – பாஜக கூட்டணி சென்றுக் கொண்டிருக்க, இன்று எடப்பாடி தரப்பு தங்கள் வேட்பாளராக தென்னரசுவை அறிவித்திருக்கிறது.
யார் இந்த தென்னரசு?
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் எடப்பாடி தரப்பு வேட்பாளாராக போட்டியிடும் தென்னரசு ஏற்கனவே அந்தத் தொகுதியில் 2001, 2016 தேர்தல்களில் வெற்றிப் பெற்றவர். 2021 ஆண்டில் இந்த தொகுதி தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால் இங்கு அதிமுக போட்டியிடவில்லை.
இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்ததால் கே.எஸ்.தென்னரசு தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர். நீண்ட காலமாக அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறார். தீவிர எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்.
65 வயதாகும் தென்னரசு அதிமுகவில் 1988லிருந்து கட்சிப் பதவிகளில் இருக்கிறார்.
முதலில் ஈரோடு நகரச் செயலாளராக இருந்தார்.
1999ல் ஈரோடு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பதவி பெற்றார்.
ஈரோடு தொகுதி முதலில் ஒரே தொகுதியாகதான் இருந்தது. 2001ல் இந்தத் தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்டு ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என்று பிரிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு என்ற தொகுதி உருவான பிறகு அதில் வெற்றிப் பெற்ற முதல் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுதான்.
தென்னரசுவின் மனைவி பெயர் பத்மினி. இந்த தம்பதிக்கு மகள், மகன் என்று இரண்டு பிள்ளைகள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
இப்போது ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் பார்வையும் ஈரோடு கிழக்குப் பக்கம் திரும்பியிருக்கிறது.
இந்தத் தேர்தலில் எந்த அதிமுக பிரிவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கப் போகிறது?
அல்லது எதற்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காமலே போய்விடுமா?
இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் அதிமுகவின் வெற்றி வாய்ப்புகள் குறையுமா?
பாஜகவின் நிலைப்பாடு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்குமா அல்லது ஒ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருக்குமா?
பாமக, தேமுதிக அதிமுக கூட்டணியைவிட்டு விலகி நிற்கின்றன. இந்த நிலைப்பாடு தொடருமா? அல்லது மீண்டும் ஒன்று சேர்வார்களா?
அதிமுக கூட்டணியில் நிறைய குழப்பங்கள் இருப்பதால் திமுக கூட்டணியின் வெற்றி நிச்சயமா?
இப்படி பல கேள்விகள்.