’பறவைக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது’ (the bird is freed) – இதுதான் ட்விட்டர் இணையதளத்தை வாங்கிய பிறகு எலன் மஸ்க்கின் முதல் ட்விட்.
அந்த ட்விட் வெளிவந்த 2 மணி நேரத்தில் 50 ஆயிரம் எதிவினைகள். 5.5 லட்சம் லைக்குகள். 1.5 லட்சம் ரீட்வீட்டுகள். இன்னும் அதன் வேகம் ஏறிக் கொண்டே இருக்கிறது.
எலன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதும் செய்த முதல் காரியம், அதன் தலைமை அதிகாரியான இந்திய வம்சாவளியைச் சார்ந்த பராக் அகர்வாலை பதவி நீக்கம் செய்தது. அடுத்து சட்டம் மற்றும் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுத்துக் கொண்டிருந்த விஜயா காடே என்ற பெண்மணியை நீக்கினார்.
பராக் அகர்வாலை திடீரென்று நீக்கியதால் அவருக்கு 66 மில்லியன் டாலர்களை ட்விட்டர் கொடுக்க வேண்டியிருக்கும். அதே போல் விஜயா காடே நீக்கப்பட்டதற்கு ட்விட்டர் 72 மில்லியன் டாலர்களை தர வேண்டும். இவர்கள் இருவரை நீக்கியதால் மட்டுமே சுமார் 1,100 கோடி ரூபாயை இழப்பீடாக தருகிறது. மிகப் பெரிய தொகையாக நமக்குத் தோன்றும். ஆனால் 44 பில்லியனுக்கு அதாவது சுமார் 3 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து ட்விட்டரை வாங்கியிருக்கும் எலன் மஸ்க்குக்கு இது பெரிய தொகை இல்லை.
எலன் மஸ்க் ட்விட்டரை நடத்துவதால் என்ன நடக்கும்? இதுதான் இப்போதுள்ள மிகப் பெரிய கேள்வி.
ட்விட்டரின் கொள்கை சார்ந்த விஷயங்களைக் கவனித்துக் கொண்டிருந்த விஜயா காடே நீக்கப்பட்டிருப்பதால் ட்விட்டரின் கொள்கைகள் மாறப் போகின்றன என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது.
’ட்விட்டர் இப்போது அறிவுள்ளவர்களின் கைகளுக்கு சென்றிருக்கிறது ‘ என்று எலன் மஸ்க் ட்விட்டரை வாங்கியிருப்பதைக் குறித்து டோனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார். ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது அவர் வன்முறைகளை தூண்டும் செய்திகளை பதிவிடுகிறார் என்று ட்விட்டரிலிருந்து அவர் நீக்கப்பட்டார். நினைவிருக்கலாம். இப்போது அவர் எலன் மஸ்க்கை வரவேற்றிருக்கிறார். ட்விட்டரும் மீண்டும் டோனால்ட் ட்ரம்பை வரவேற்கலாம்.
ட்விட்டரில் இனி வலதுசாரி சிந்தனைகளுக்கு அதிக இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்விட்டரில் எந்த நபரும் நிரந்தரமாக தடை செய்யப்படக் கூடாது என்பது மஸ்க்கின் கருத்து.
ஒரு பதிவை நீக்குவதோ அல்லது பதிவரை நீக்குவதோ போன்ற முடிவுகள் உடனடியாக எடுக்கப்படாது .ஒரு நடுநிலையாளர் குழு அமைக்கப்பட்டு அவர்களின் கருத்துக்களுக்குப் பிறகே முடிவெடுக்கப்படும் என்று எலன் மஸ்க் கூறியிருக்கிறார். இதுவரை ட்விட்டர் கொள்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால் இப்போதுள்ள ட்விட்டர் கொள்கைகளில் மஸ்க்குக்கு சம்மதமில்லை என்பது மட்டும் தெரிகிறது. அதனால் ட்விட்டர் கொள்கைகள் விரைவில் மாறும் என்பது உறுதி.
இந்த நடுநிலையாளர் குழு எந்த அடிப்படையில் அமைக்கப்படும், அந்தக் குழுவில் யாரெல்லாம் இருப்பார்கள், அந்தக் குழு ஒருமித்த முடிவை எடுக்கவில்லையென்றால் என்னவாகும்.. என்பது குறித்தெல்லாம் இதுவரை தகவல் இல்லை.
ட்விட்டரில் இருக்கும் போலி அக்கவுண்டுகளைக் கண்டுபிடித்து நீக்க வேண்டும் என்றும் எலன் மஸ்க் கூறி வருகிறார். இதுவும் முக்கியமாக கவனிக்கப்படுகிறது.
ட்விட்டர் ஒரு சமூக ஊடக தளம். அதை ஒருவர் விற்கிறார். ஒருவர் வாங்குகிறார். இதற்கு ஏன் இத்தனை பரபரப்பு..இத்தனை செய்திகள்? காரணம் இருக்கிறது.
இன்று மேடைகளிலும் பொதுக் கூட்டங்களிலும் அரசியல் நடத்தப்படுவதில்லை. பொதுமக்களிடம் நிலைப்பாடுகளை தலைவர்களின் பேச்சுக்கள் உருவாக்குவதில்லை. இன்றைய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக சமூக ஊடகங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் 2014-ல் பாஜகவும் மோடியும் வென்றதற்கு முக்கிய காரணமாக சமூக ஊடகங்களை குறிப்பிட்டார்கள். அதன்பின் பல அரசியல் கட்சிகள் சமூக ஊடகப் பிரிவுகளை துவக்கி அதன் மூலம் அரசியல் செய்ய ஆரம்பித்தன. அரசியல் கட்சிகளின் சமூக ஊடகப் பிரிவுகள் நூற்றுக் கணக்கானோர் பணியாற்றும் அலுவலகங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன.
அரசியல் மட்டுமல்ல பல துறைகளிலும் சமூக ஊடகங்களின் பங்களிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் மிகப் பெரிய சமூக ஊடகங்களில் ஏற்படும் கொள்கை முடிவுகள் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலைதான் இன்று உள்ளது.
மிக முக்கியமாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்று இல்லாமல் ட்விட்டர் கருத்துக்களின் ஊடகமாக இருக்கிறது. அதனால் ட்விட்டரின் ஏற்படும் மாற்றங்கள் எல்லா தளங்களிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும்.