டாக்டர் ஜெய. ராஜமூர்த்தி… கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் எனப் பன்முகம் கொண்டவர். மருத்துவம், இலக்கியம் தொடர்பாக பல நூல்களை எழுதியிருக்கிறார். இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது, இவர் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலினின் ஒரே தம்பி. ஆனால், இந்த தன் அரசியல் பின்புலத்தை எங்கும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அரசுப் பணி, ஆன்மிக சொற்பொழிவுகள் என இருக்கும் ஆச்சர்யக்காரர்.
டாக்டர் ஜெய. ராஜமூர்த்தி, ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பிரேத்யேக பேட்டியில் அக்கா துர்கா ஸ்டாலின், மச்சான் மு.க. ஸ்டாலின், மருமகன் உதயநிதி ஸ்டாலின் குறித்து மனம் திறந்து பேசினார்.
நீங்கள் ஆன்மிக சொற்பொழிவாளர். உங்கள் அக்காவும் தீவிர இறை நம்பிக்கை உள்ளவர். சிறு வயதிலேயே நீங்கள் இப்படித்தானா? இறை நம்பிக்கை எப்போது உங்களிடம் அதிகரித்தது?
ஆன்மிகம் என்பது வேறு, பக்தி என்பது வேறு. ஆன்மிகம் என்பது ஓர் உயரிய நிலை, அதனுடன் ஒப்பிடும் போது பக்தி என்பது கொஞ்சம் கீழ் நிலைதான். இறைவனை கும்பிட்டால் பதிலுக்கு அவர் எதாவது தருவார் என்றோ அல்லது இது வேண்டும் என்று கேட்டோ எதிர்ப்பார்ப்புடன் போவதுதான் பக்தி. இது எல்லோரும் செய்யக்கூடியது. ஆன்மிகம் என்பது தேடுவது; ஆன்மாவைப் பற்றி அறிவது; தன்னை அறிவது; நமக்குள்ளே நாமே செல்வது. ஆன்மா வேலை செய்யும் இடம் என்பதால்தான் ஆலயம் என்ற பெயரே வந்தது. இப்படி தேடுபவர்கள் மிகக் குறைவானவர்கள்தான்.
கடவுள் என்று ஒரு சிலை நமக்குக் காட்டப்படுகிறது. அதனை வணங்குகிறோம். இது பக்தி. ஆனால், அந்த உருவத்தில் மட்டும் கடவுள் இல்லை. கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார், எனக்குள்ளும் இருக்கிறார் என உணர்வது ஆன்மிகம். ‘பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்து பரிபூரணமாய்’ என்று ஆனந்தமாக தாயுமானவர் பாடுகிறார். இதுதான் ஆன்மிக நிலை.
எங்கள் அப்பா ஒரு மிகப்பெரிய பக்திமான். அதனால் அக்கா, நான், தங்கை எல்லோருமே சிறு வயதில் இருந்தே கடவுள் பக்தி அதிகம் உள்ளவர்களாகத்தான் வளர்ந்தோம். இந்நிலையில், நான் வள்ளலாரை படிக்க தொடங்கிய பிறகு பக்திமான் என்ற நிலையில் இருந்து ஆன்மிக நிலைக்கு வந்துவிட்டேன். திருவள்ளுவர், திருவாசகம் என தொடர்ந்து படிக்கும் போது உண்மையான இறை நம்பிக்கை என்ன என்பதை ஆய்வு செய்வதை நோக்கி நகர்ந்துவிட்டேன்.
அக்கா தீவிர பக்திமானாக தொடர்கிறார். எங்கள் குடும்ப குல தெய்வம் அங்காள பரமேஸ்வரி; கோயில் திருவெண்காட்டில் இருக்கிறது. பாடல் பெற்ற ஸதலம் அது. அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என நால்வர் பாடிய தலம். பட்டிணத்தார் தீட்சை பெற்ற தலம். கலைஞர் குடும்பத்துக்கும் அங்காள பரமேஸ்வரிதான் குல தெய்வம். அவர்கள் குல தெய்வக் கோயில் திருக்குவளையில் இருக்கிறது. அக்கா சமீபத்தில் அந்த கோயிலுக்கு நிறைய செலவு செய்து கும்பாபிஷேகம் நடத்தினார்.
அக்கா, எந்த ஊருக்கு போனாலும், அது முதல்வருடனான பயணங்களாக இருந்தாலும் சரி, அந்த ஊரில் உள்ள கோயிலுக்கு போகாமல் வரமாட்டார்கள். திண்டுக்கல் பக்கம் போனால் பழனி முருகனை தரிசித்துவிட்டுதான் வருவார்கள், திருச்செந்தூர் போனால் அங்குள்ள முருகன் கோயில், காஞ்சிபுரம் பக்கம் போனால் காஞ்சி காமாட்சி கோயில், சிதம்பரம் பக்கம் போனால் நடராஜர் கோயில் என நேரம் ஒதுக்கு போய்விடுவார்கள்.
ஆலயம் சென்றால் சாலவும் நன்று; கோயில்கள் சென்றால் மனநிம்மதி கிடைக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. அவர்களுக்கு அந்த மனநிம்மதி கோயில்களில் கிடைக்கிறது என நினைக்கிறேன்.