”கேஜ்ரிவாலுக்கு ஒரு வழியா ஜாமீன் கிடைச்சுடுச்சு. தேர்தல் பிரச்சாரத்துல ஈடுபடறதுக்காக இடைக்கால ஜாமீன் கேட்டிருந்தார். இப்ப ஜூன் 1-ம் தேதி வரைக்கும் அவருக்கு இடைக்கால ஜாமீன் கொடுத்திருக்காங்க” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“ரொம்ப நாள் ஜெயில்ல இருந்துட்டார்ல”
“ஆமாம் மார்ச் 21ல உள்ள போனார். இப்பதான் ஜாமீன் கிடைச்சிருக்கு”
“கேஜ்ரிவாலுக்கு நடந்தா மாதிரி செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்க ஏதாவது வாய்ப்பு இருக்கா?”
“இல்லைனுதான் சொல்றாங்க. அந்த கேஸ்ல மத்திய அரசு ரொம்ப தீவிரமா இருக்காங்களாம். 15-ம் தேதி அவரோட வழக்கு விசாரணைக்கு வருது. அப்பவாவது அவருக்கு விடிவுகாலம் வருதான்னு பார்ப்போம்.”
“முதல்வர் ஸ்டாலின் வேலூர் மருத்துவமனைக்கு போய் துரை தயாநிதியை பார்த்துட்டு வந்திருக்காரே?”
“சில தினங்களுக்கு முன்னால மு.க.அழகிரி, முதல்வருக்கு போன் செஞ்சிருக்கார். ‘என் மகன் உன் புண்ணியத்தில் எழுந்து நடமாட ஆரம்பிச்சுட்டான். நீ வந்து பார்த்தால் இன்னும் சந்தோஷப்படுவான்’ன்னு முதல்வர்கிட்ட சொல்லி இருக்காரு. முதல்வர் ஸ்டாலினும் உடனே மருத்துவமனைக்குப் போய் அவரைப் பார்த்திருக்காரு. அப்ப அழகிரி உணர்ச்சி வசப்பட்டு முதல்வரை கட்டி அணைச்சு அழுத்தா சொல்றாங்க. அழகிரி முன்பு உதயநிதி கிட்டதான் நெருக்கமா இருந்தாரு. துரை தயாநிதி உடல்நிலை பாதிப்புக்கு பிறகு ஸ்டாலின்கிட்டயும் நெருங்கி இருக்கார்.”
“நல்லது நடந்தா சரி. ஆமா சவுக்கு சங்கர் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் பதவியில மாற்றம் இருக்கலாம்னு பேசிக்கறாங்களே ஏன்?”
“சவுக்கு சங்கர்கிட்ட இருந்து போலீஸார் கைப்பற்றின லேப்டாப் மற்றும் செல்பேசிகளை ஆராய்ந்து பார்த்ததுல அவரோட பல அரசு அதிகாரிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது தெரிய வந்திருக்கு. அவங்கதான் அரசு தொடர்பான பல ஆவணங்களை அப்பப்ப சவுக்கு சங்கருக்கு கொடுத்திருக்காங்கன்னு இதன்மூலமா தெளிவாகி இருக்கு. இந்த விஷயங்களை முதல்வர் ஸ்டாலின்கிட்ட உளவுத்துறை அதிகாரிங்க கொண்டு போயிருக்காங்க. அதை வச்சு பல மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இருக்குன்னு கோட்டையில பேசிக்கறாங்க.”
”ஊரக உள்ளாட்சித் தேர்தலைப் பத்தி போன தடவை பேசி இருந்தியே. அந்த தேர்தல் பத்தி மேற்கொண்டு ஏதும் முடிவு எடுத்திருக்காங்களா?”
“முறைப்படி இன்னும் 6 மாசத்துல ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தணும். ஆனால் அப்படி நடத்தினா தொகுதிப் பங்கீடுகளால பிரச்சினை வருமோன்னு முதல்வர் தயங்கறாராம். அதனால இப்போதைக்கு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வாய்ப்பில்லைன்னு பேசிக்கறாங்க.”
“நான்காம் ஆண்டு நிறைவு விழாவை அரசு சார்பா பிரம்மாண்டமா கொண்டாடாம இருந்திருக்காங்களே… ஏன்?”
“மூத்த அமைச்சர்களும் இது பத்தி முதல்வர்கிட்ட கேட்டிருக்காங்க. ஆனா முதல்வருக்கு அதில விருப்பம் இல்லை. மக்கள் வெயில்ல கஷ்டப்படறப்ப, நாம விழா நடத்தினா தப்பாகிடும்னு மறுத்திருக்கார்.”
“அன்புமணி ராமதாஸ் மேல பாமக நிர்வாகிகள் கோபமா இருக்கறதா கேள்விப்பட்டேனே?”
“ஆந்திரால தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவா அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செஞ்சதுதான் இதுக்கு காரணம். திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்ட பாமக நிர்வாகிகள் இதை ரசிக்கல. சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வரா இருந்த காலத்திலதான் ஆந்திர காடுகளில் செம்மரம் வெட்டறதா சொல்லி அந்த மாவட்டங்களைச் சேர்ந்த வன்னிய இன மக்களை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்னாங்க. அப்படி இருக்கும்போது அந்த கட்சிக்கு ஆதரவா அன்புமணி ராமதாஸ் எப்படி பிரச்சாரம் செய்யலாம்கிறது அவங்களோட வாதம்.”
”காமராஜர் நினைவகம் சுடுகாடு மாதிரி இருக்குன்னு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசி இருக்காரே?”
“இதை திமுக தலைமை ரசிக்கலை. புது காங்கிரஸ் தலைவர் ரொம்ப பேசுறார். அதனால அவரை கிட்ட சேர்க்காதீங்கன்னு மூத்த அமைச்சர்களுக்கு திமுக தலைமை உத்தரவு போட்டிருக்காம்.” என்றபடி கிளம்பத் தாயாரானாள் ரகசியா
”இவ்வளவு சொன்ன, தேர்தல் பத்தி ஒண்ணும் சொல்லலையே? எந்தக் கட்சில உற்சாகமா இருக்காங்க?”
“உற்சாகம் குறைஞ்சவங்களைப் பத்தி சொல்றேன். பாஜகவினர்கிட்ட உற்சாகம் குறைஞ்சிக்கிட்டே வருது. சோஷியல் மீடியாவுல அவங்க ஆளுங்க முன்ன மாதிரி கடுமையா பதிவுகள் போடுறதில்லை. கொஞ்சம் ஒதுங்கியே நிக்கிறாங்கனு ஒரு நியூஸ் இருக்கு. பிரதமரும் உள்துறை அமைச்சரும் வெறும் மதம் பத்தி மட்டுமே பேசுறாரு, இது பத்தாதுனு சொந்தக் கட்சிக்காரங்களே விமர்சனம் வைக்க தொடங்கியிருக்காங்க”
“ஏன் இப்ப ரொம்ப அதிகமா இந்து – முஸ்லிம்னு பிரதமர் பேசுறார்?”
“அவங்க ஒரு சர்வே எடுத்திருக்காங்க. அதுல இது மாதிரி ஏதாவது தடாலடியா பேசிதான் ஓட்டு வாங்க முடியும்னு ஆலோசனை சொல்லியிருக்காங்க. பங்கு சந்தை வீழ்ச்சியைப் பாத்திங்களா?”
“ஆமா..அதுக்கென்ன?”
“பொதுவா ஆட்சி மாற்றம் நடக்கப் போகுதுனு பிசினஸ் உலகம் நினைச்சதுனா பங்கு சந்தைல ஏற்றம் இருக்காது. அதானி பங்குகள் சரிஞ்சுக்கிட்டு இருக்கு. வெளிநாட்டிலருந்து வர்ற பங்கு முதலீடுகளும் குறைஞ்சிருக்கு. இதெல்லாம் நல்ல சகுணம் இல்லனு பாஜகவிலேயே பேசிக்கிட்டு இருக்காங்க. ஆனா அவங்களுக்கு ஆறுதல் கொடுக்கிற மாதிரி ஒரு விஷயம் இருக்கு”
“என்ன விஷயம்?”
“2019லயும் இப்படிதான் இருந்தது. ஆனா முன்ன விட அதிக இடங்கள்ல ஜெயிச்சோம்னு பாஜகவினர் தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்திக்கிட்டு இருக்காங்க”
“போன தடவை போறதுக்கு முன்ன ஒரு சினிமா ரகசியத்தை சொல்லிட்டு போனியே… இந்த வாரம் ஏதும் இல்லையா?”
“ஆந்திர தேசத்தில் பெரிய இடத்தில் நடிகரை திருமணம் செய்து கொண்ட சென்னை பொண்ணு விவாகரத்துக்கு பிறகு தனித்து வாழ்ந்து வருகிறார். அவருக்கு வேண்டியதை ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று சமர்த்தான அந்த நடிகைக்கு செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. நடிகையின் சொத்து உட்பட கணக்கு வழக்குகளை அவரது நெருக்கமான தோழி பார்த்துக் கொள்கிறார். ஆனால் சமீபமாய் இவர்களுக்கும் சமர்த்தான நடிகைக்கும் ஒத்துப் போகவில்லை. இதற்கெல்லாம் ஒரே தீர்வு இன்னொரு திருமணம்தான், கணவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்று அவருக்கு ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது. நண்பர்களின் குடும்பத்தினரின் ஆலோசனையைக் கேட்டு கணவரைத் தேட ஆரம்பித்திருக்கிறாராம் சமர்த்தானவர். நீங்க அப்ளை பண்றதுனா பண்ணலாம்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.