எம்ஜிஆரின் 107-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. வாவ் தமிழா யூடியூப் சேனலில் எம்ஜிஆரைப் பற்றி சில பிரபலங்கள் சொன்ன விஷயங்கள்…
குமார் ராஜேந்திரன் (எம்ஜிஆரின் பேரன்):
எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் குழந்தைகள், வளர்ப்பு மகன்கள் மற்றும் வீட்டில் உள்ள குழந்தைகள் அனைவரும் அவரை சேச்சா என்றே அழைப்பார்கள். செறியச்சா (சித்தப்பா) என்ற மலையாள வார்த்தையின் சுருக்கமே சேச்சா.
வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக தனது அறையில் உள்ள பிரிட்ஜ் முழுக்க சாக்லேட்களை அடுக்கி வைத்திருப்பார் எம்ஜிஆர். அதை தனது அறைக்கு வரும் குழந்தைகளுக்கு கொடுத்து மகிழ்ந்திருக்கிறார்.
வீட்டில் யாருடைய பிறந்த நாளையும் கேக் வெட்டி கொண்டாடுவது எம்ஜிஆருக்கு பிடிக்காது. பிறந்த நாளன்று இப்படி கேக் வெட்டுவதை அபசகுனமாக எம்ஜிஆர் நினைத்துள்ளார்.
தீபக் நம்பியார் (நம்பியாரின் பேரன்)
எம்ஜிஆர் சபரிமலைக்கு சென்றதில்லை. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் தனது நண்பரான எம்.என்.நம்பியார் சபரிமலைக்கு செல்லும்போது, தன் சார்பில் அவருக்கு ஒரு பெரிய மலர் மாலையைப் போடுவதை எம்.ஜி,ஆர் வழக்கமாக கொண்டிருந்தார்.
சங்கர் கணேஷ் (இசையமைப்பாளர்)
தனது படத்தின் ஷூட்டிங்கில் தொழிலாளர்கள் அனைவருக்கும் அசைவ உணவு பரிமாற வேண்டும் என்பதில் எம்ஜிஆர் பிடிவாதமாக இருந்தார். ஜி.என்.வேலுமணியின் படத்தில் அவர் நடித்துக்கொண்டிருந்த நேரத்தில், ஒரு வெள்ளிக்கிழமையன்று எல்லோருக்கு சைவ உணவு வழங்கப்பட்டது. இதைப் பார்த்த எம்ஜிஆர் கோபத்தில் அன்றைய படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார். வெள்ளிக்கிழமை என்பதால் சைவ சாப்பாடு போட்டதாக தயாரிப்பாளர் கூற, “தொழிலாளர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு எல்லா நாளும் அசைவ சாப்பாடு வழங்க வேண்டும். தொழிலாளர்கள் விரும்பினால் மட்டும் அவர்களுக்கு சைவ உணவு கொடுக்கலாம்” என்று கூறியிருக்கிறார் எம்ஜிஆர்.
முந்தைய நாள் வைத்த சாம்பார், ரசம், பொரியல் ஆகியவற்றை அடுத்த நாள் காலையில் ஒரு வாணலியில் ஒன்றாக போட்டு சுண்டக் காய்ச்சி, அதில் இட்லியை தொட்டுக்கொண்டு சாப்பிடுவது எம்ஜிஆருக்கு மிகவும் பிடிக்கும்.
கடையில் வாங்கிவந்த அல்வாவை நன்றாக்க் கொதிக்கவைத்து, அதில் சாஸை (Sauuce) தொட்டுக்கொண்டு சாப்பிடுவது எம்.ஜி.ஆரின் வழக்கம்.
எம்.எஸ்.வி பிரகாஷ் (எம்.எஸ்.விஸ்வநாதனின் மகன்)
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு முதலில் குன்னக்குடி வைத்தியநாதனைத்தான் இசை அமைப்பாளராக தேர்ந்தெடுத்திருந்தார் எம்ஜிஆர். அப்போது இந்த படத்துக்கு ஒரு பாடலை எழுதவந்த கண்ணதாசன், வெளிநாட்டு சூழலில் படம் அமைந்துள்ளதால், இதற்கு இசையமைக்க சரியான நபர் எம்.எஸ்.விதான் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகே எம்.எஸ்.வியை உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு பயன்படுத்தி இருக்கிறார் ஏம்.ஜி.ஆர்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு சிறப்பான பல மெட்டுகளை எம்.எஸ்.வி போட்டாலும், எம்.ஜிஆர் அதனை மனம்திறந்து பாராட்டவில்லை. மாறாக ‘சுமார்’ என்று மட்டும் சொல்லியிருக்கிறார். இதனால் கோபமான எம்.எஸ்.வி அந்த படத்துக்கு சம்பளம் வாங்க மறுத்துள்ளார். அப்போது அவரிடம் பேசிய எம்ஜிஆர், “உங்களை உசுப்பேற்றத்தான் நான் பாடல்கள் சுமாராக இருப்பதாக கூறினேன். உண்மையில் படத்தில் உள்ள எல்லா பாடல்களும் நன்றாக இருக்கிறது” என்று பாராட்டி சம்பளப் பணத்தை கொடுத்துள்ளார்.
அன்பே வா திரைப்படம் தயாரானவுடன் அதை அவருக்கு போட்டுக் காட்டி இருக்கிறார்கள். படத்தைப் பார்த்த எம்ஜிஆர், “இது என் படமல்ல. எம்.எஸ்.விஸ்வநாதனைன் படம்” என்று கூறியிருக்கிறார். இப்பட்த்தின் பாடல்கள் அத்தனை சிறப்பாக இருந்த்து என்பதைத்தான் அவர் அப்படி சொல்லியிருக்கிறார்.