No menu items!

பாமக உடைகிறதா? எடப்பாடி திட்டம் என்ன? – மிஸ் ரகசியா

பாமக உடைகிறதா? எடப்பாடி திட்டம் என்ன? – மிஸ் ரகசியா

“ஒருவழியா பாமகவை வலை போட்டு பிடிச்சுட்டாங்க” என்றவாறு ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“பாஜகவோட கூட்டணி அமைக்கறதுக்கு சில மணி நேரம் முன்னாடி வரைக்கும் அதிமுகவோட பாமக கூட்டணின்னுதானே சொல்லிட்டு இருந்தாங்க? பிறகு எப்படி மாறிச்சு?”

“பாமக எம்எல்ஏ அருள், எடப்பாடிக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். அதனால அவர்தான் அதிமுக கூட்டணி பற்றி ராமதாஸ்கிட்டயும், அன்புமணி ராமதாஸ்கிட்டயும் பேசிட்டு இருந்திருக்கார். எடப்பாடியும் ராமதாஸ்கிட்ட நல்லாத்தான் பேசி இருக்கார். அதிமுகவோட கூட்டணி அமைக்கறதா வாக்குறுதியும் கொடுத்திருக்கார். ஆனா அன்புமணி ராமதாஸுக்கு இந்த கூட்டணியில இஷ்டமில்லை. அவர்தான் கடைசி நேரத்துல பாஜக பக்கமா கட்சியை திருப்பி விட்டிருக்கார்னு சொல்றாங்க.”

“அன்புமணியை எப்படி பாஜக சம்மதிக்க வச்சது?”

“அன்புமணி மத்திய மந்திரியா இருந்த போது ஒரு மெடிகல் காலேஜ் விவகாரமா அவர் மேல வழக்கு இருக்கு. கூட்டணிக்கு வரலைன்னா அந்த வழக்கை திரும்ப நோண்டுவோம்னு அன்புமணியை பாஜக மேலிடம் மிரட்டினதா ஒரு தகவல் இருக்கு”

“ஓஹோ..வழக்குக்குப் பயந்துட்டாரா? அவங்கதான் ரொம்ப வீரமானவங்களாச்சே?”

“அது சிபிஐ வழக்கு. அடுத்து அமலாக்கத் துறையும் வாய்ப்பு இருக்கு. இந்த சூழல்ல, நான் கட்சி நடத்துனுமான் ஜெயிலுக்குப் போகணுமானு அப்பாகிட்ட கேட்டாராம் அன்புமணி. குடும்பத்தினரும் இதே கேள்வியைக் கேட்டிருக்காங்க போல மாம்பழம் நழுவி பாஜகவில விழுந்துருச்சு. ராஜ்ய சபா பதவியைப் பத்திகூட உடன்பாட்டு அறிக்கைலை இல்லை பாத்திங்கல”

“ஆமாம். எடப்பாடி பழனிசாமி நிலை என்ன?”

“ரொம்ப அப்செட். அவங்க கேட்ட எல்லாத்துக்கும் ஒகே சொன்னேனேன் என்று வருத்தப்பட்டிருக்கிறார். பாமக கூட இருந்தா நமக்கு தலித் வாக்குகள் வராது. இப்ப அவங்க இல்லை அதனால அவங்க வாக்குகள் நமக்கு வரும்னு கூட இருக்கிறவங்ககிட்ட சொன்னாராம். ஆனா அதிமுகவுல எல்லோரும் அப்செட்”

“பாமக அருள் என்ன சொன்னாராம்?”

“அவர் கிட்ட எடப்பாடி கோபப்பட்டிருக்கிறார். ‘இப்ப பாஜக பக்கம் போயிட்டு சட்டமன்ற தேர்தல் வரும்போது திரும்பவும் எங்க்கிட்ட வரலாம்னு நினைக்காதீங்க. அது நிச்சயம் நடக்காது. இந்த விஷயத்தை இப்பவே உங்க சட்டமன்ற உறுப்பினர்கள்கிட்ட சொல்லிடுங்க’ன்னு அருள்கிட்ட எடப்பாடி கொந்தளிச்சு போய் பேசினாராம்.”

”பாமக எம்.எல்.ஏ.க்கள் கட்சியை உடைச்சிருவாங்கனு ஒரு பேச்சு இருக்கே”

”ஆமாம் அப்படி ஒரு பேச்சு இருக்கு. ஆனா எடப்பாடியைப் பொறுத்தவரை பாமகவை உடைக்கற அளவுக்கு அவருக்கு சக்தியில்லை. ஆனா அன்புமணி ராமதாஸ் எங்க போட்டியிட்டாலும் அவரை தோற்கடிக்கணும். அதுக்கான வேலையை தொடங்குங்கன்னு கே.பி.முனுசாமிக்கு உத்தரவே போட்டிருக்கார் எடப்பாடி. அவரும் அதுக்கு தகுதியான வேட்பாளரை தேடிட்டு இருக்கார். அன்புமணியை தோற்கடிச்சே ஆகணும்கிற வெறியோட திமுகவும் வேலையை தொடங்கி இருக்காம்.”

”சரி, பாமக உடையுமா உடையாதா? பாமகவுல என்ன பேச்சு”

“எம்.எல்.ஏ.க்களை கூப்பிட்டு சீனியர் ராமதாஸ் உருக்கமா பேசினாராம். இத்தனை வருடங்கள் என் கூடவே இருந்திருக்கிங்க. இப்போ நமக்கு அழுத்தம் இருக்கு. அதை நாம் சமாளிக்கணும். அதை சமாளிச்சிட்டா 2026ல நாம நல்லா இருப்போம்னு சொல்லியிருக்கிறார். எம்.எல்.ஏ.க்கள் தலையாட்டிட்டு வந்திருக்காங்க. அதனால பாமகவினர் கட்சியை உடைக்காம உள்ளடி வேலை நிறைய பண்ணுவாங்கனு பாமகவுல பேச்சு இருக்கு. அவங்க ஓட்டு பாஜகவுக்கு போகாதாம்”

”அப்ப பாஜக கூட்டணி அமைச்சும் வேஸ்ட்னு சொல்ற. சரி, உடல்நிலை காரணமா முதல்வர் எல்லா தொகுதிகளுக்கும் பிரச்சாரம் பண்ண போகமாட்டார்னு சொல்லியிருந்தே. ஆனா இப்ப முதல்வர் எல்லா தொகுதிக்கும் பிரச்சாரத்துக்கு போவார்னு சொல்றாங்களே?”

“பிரதமர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு பிரச்சாரத்துக்கு வர்றதால, அவரை முறியடிக்க முதல்வர் எல்லா ஊருக்கும் பிரச்சாரம் செய்ய போக வேண்டி இருக்கு. இப்போதைக்கு தினம் 2 தொகுதிகளில் முதல்வர் பிரச்சாரம் செய்யற மாதிரி திட்டம் போட்டிருக்காங்க. வெயிலுக்கு முன்ன 9 மணிக்குள்ள ஒரு தொகுதியிலயும், மாலை வெயில் குறைஞ்ச பிறகு ஒரு தொகுதியிலயும் அவர் பிரச்சாரம் செய்ய திட்டம் போட்டிருக்கார். முதல்வர் தேர்தல் பிரச்சாரத்துக்கு போகும்போது அவருடன் ஒரு மருத்துவ குழுவும் போகப்போகுது. காலை மாலை இரண்டு வேளையும் அவர் கண்டிப்பா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப் போறாங்களாம்.”

“கூட்டணி கட்சிகள் மேல முதல்வருக்கு வருத்தம் இருக்கறதா ஒரு பேச்சு இருக்கே?”

“இந்தியா கூட்டணியின் தேசியத் தலைவர்களை வச்சு தமிழ்நாட்ல பிரம்மாண்டமா ஒரு கூட்டணி மாநாடு நடத்த முதல்வர் திட்டமிட்டு இருந்தாராம். ஆனா கூட்டணிகள் இதுக்கு சரியா ஒத்துழைப்பு தரலைன்னு முதல்வருக்கு வருத்தம் அதேமாதிரி ஜாபர் சாதிக் விவகாரத்துலயும் திமுகவை கூட்டணி கட்சிகள் கைவிட்ட்தா அவர் நினைக்கறார்.”

“பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு தெரிவிச்சு இருக்காரே?”

“இந்த விஷயத்துல முதல்வர் ஸ்டாலினுக்கு கட்சிக்காரங்க மேலதான் கோபம். நாடாளுமன்ற தேர்தல் முடியற வரைக்கும் பொன்முடிக்கு அமைச்சர் பதவி கேட்க வேண்டாம். ஆளுநர் இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சா தேவையில்லாத சர்ச்சைகள் எழும்னு ஆரம்பத்திலேயே முதல்வர் எச்சரிச்சு இருக்கார். ஆனா உதயநிதி மூலமா பொன்முடி பிரஷர் கொடுத்திருக்கார். இப்ப ஆளுநர் அவருக்கு பதவிப் பிரமாணம் செஞ்சுவைக்க எதிர்ப்பு தெரிவிச்சிருக்கார். இதைக் கேட்ட முதல்வர், ‘நான் தான் அப்பவே வேணாம்னு சொன்னேனே. இப்ப பாருங்க திரும்பவும் தேவையில்லாத சர்ச்சைகள் வந்திருக்கு’ன்னு கோவிச்சுக்கிட்டாராம்”

”முதல்வர் நினைச்சது சரிதான். ஒரு வாரத்துல பிரதமர் ரெண்டு தடவை தமிழ்நாடு வந்துட்டாரே..கோவைல பேரணிலாம் நடத்தியிருக்கிறாரே?”

“கோயமுத்தூர் பேரணி அவருக்கு அதிருப்தினு சொல்றாங்க. கோவை நம்ம ஏரியா நிறைய கூட்டம் வரும்னு நினைச்சேன்னு கட்சிக்காரங்ககிட்ட சொல்லியிருக்கிறார். அது மட்டுமில்லாம கூட்டணியை டெல்லிலருந்து பேசி முடிச்சிருக்கு. நீங்க இங்க லோக்கல்ல ஏதாவது பேசி கூட்டணித் தலைவர்களை கஷ்டப்படுத்திராதிங்கனு அண்ணாமலையைப் பார்த்து சொன்னதாகவும் நியூஸ் இருக்கு”

“அவரால பேசாம இருக்க முடியுமா?”

”கஷ்டம்தான். ஒரு மாசம்தானே சமாளிச்சிருவார்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...