ரஷ்யா – உக்ரைன் போர் நடப்பதில் இந்தியர் ஒருவருக்கும் அவரது செல்லப் பிராணிகளுக்கும் ஒரு பிரச்சினை.
கிடிகுமார் பாட்டீல் விஜயவாடாவை சேர்ந்தவர். உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவராக இருந்தவர். 43 வயதாகும் கிடிகுமார் 2016லிருந்து உக்ரைன் நாட்டு பிரஜை. திருமணமாகாதவர். செல்லப்பிராணிகள் மீது உயிர். கடந்த ஒரு வருடமாக, ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து அவருக்கு ஒரு பிரச்சினை. அவரால் உக்ரைனில் வசிக்க இயலவில்லை. அவரது செல்லப் பிராணிகளை பார்த்துக்கொள்ள முடியவில்லை. அந்த செல்லப் பிராணிகளை தான் வசிக்கும் கொண்டும் போக முடியவில்லை. காரணம் அவர் வளர்க்கும் செல்லப் பிராணிகள்.
செல்லப் பிராணிகள் மீது அவருக்கு உயிர். ஆனால், கிடிகுமார் வளர்க்கும் செல்லப் பிராணிகளைப் பார்த்தால் மற்றவர்களுக்கு உயிர் மேல் பயம் வந்துவிடும்.
கிடிகுமாரின் செல்லப் பிராணிகளில் ஒன்று சிறுத்தை. மற்றொன்று கருஞ்சிறுத்தை. இந்த இரண்டு விலங்குகளையும்தான் கீவ் நகரில் இருக்கும் டான்பாஸ் ஊரிலுள்ள தன் வீட்டில் செல்லமாக வளர்த்து வந்தார். 2020ல் உக்ரைன் விலங்கியல் பூங்காவிலிருந்து இந்த மிருகங்களை குட்டியாக வாங்கியிருக்கிறார். இப்போது இரண்டும் மூன்று வயதை நெருங்கிக் கொண்டிருக்கின்றன.
உக்ரைனில் தனக்கு சொந்தமான பெரிய தோட்டத்தில் கூண்டுகள் அமைத்து பராமரித்து வந்தார். பராமாரிப்புக்கு மட்டும் பல நூறு டாலர்கள் தினச் செலவு. உக்ரைன் போர் வந்தது. ஊரை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும் துணிந்து குண்டுகளுக்கும் சிறுத்தைகளுக்கும் மத்தியில் கீவ் வாழ்ந்தார்.
ஆனால், முடியவில்லை. அவர் வெளியேற வேண்டிய சூழல் வந்தது. மருத்துவமனையில் வேலை இல்லை. சம்பளம் இல்லை. கையில் பணமில்லை. தனது சேமிப்புகளை சிறுத்தைகளுக்காக செலவிட்டு பர்ஸ் காலியாகிவிட்டது. வேறு வேலை தேட வேண்டும். அது உக்ரைனில் சாத்தியப்படாது என்று நாட்டை விட்டு வெளியேறினார்.
வெளியேறும் முன் தன் தோட்டத்தையும் சிறுத்தைகளையும் பார்த்துக் கொள்ளுமாறு கொஞ்சம் பணத்தைக் கொடுத்து ஒரு ஆளை வேலைக்கு வைத்திருக்கிறார். இது நடந்தது கடந்த அக்டோபரில்.
மாதங்கள் கடந்துவிட்டன. போர் நிற்கவில்லை. சிறுத்தைகளை பார்த்துக்கொள்ள முடியாது என்று பணிக்கு வந்தவர் முரண்டு பிடிக்கிறார்.
கிடிகுமாருக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. போலாந்து நாட்டுக்குச் சென்றார். ஆனால், அவரால் அங்கு தொடர்ந்து பணிபுரிய முடியவில்லை. மீண்டும் இப்போது உக்ரைனுக்கே திரும்பியிருக்கிறார். ஆனால், சரியான வேலை இல்லை. கையில் பணம் இல்லை.
சிறுத்தைகளை பராமரித்துக் கொண்டிருப்பவர் முடியாது என்று சொல்லிவிட்டார். அதனால் அங்கிருக்கும் விலங்கியல் பூங்காவுக்கு சிறுத்தைகளை கொடுக்கலாம் என்று முடிவு செய்து அவர்களிடம் பேசியிருக்கிறார். அவர்கள் சிறுத்தைகளைப் பராமரிக்க ஆறு மாதங்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் டாலர்கள் கேட்கிறார்கள். இப்போது சிறுத்தைகளுக்கான பரமாரிப்பு செலவை விஜயவாடாவிலுள்ள அவரது உறவினர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
கிடிகுமாருக்கு இப்போது உடனடியாக அவருடைய செல்ல சிறுத்தைகளுக்கு இடம் தேவை.