“காங்கிரஸ் கட்சிக்கு கட்டம் சரியில்லை” என்றவாறு ஆபீசுக்குள் என்ட்ரியானாள் ரகசியா.
“இந்தியா கூட்டணியில இருந்து ஒவ்வொரு கட்சியா வெளிய போயிட்டு இருக்கே… அதைச் சொல்றியா?”
“அது அவங்களோட தேசிய அளவிலான பிரச்சினை. நான் சொல்றது தமிழ்நாட்டு பிரச்சினை. ‘காங்கிரஸ் கட்சியை பல கட்சிகள் ஒதுக்கித் தள்ளுது. மேற்கு வங்கத்துல மம்தா 2 சீட்டும், டெல்லியில கேஜ்ரிவால் 1 சீட்டும்தான் தருவோம்னு பிடிவாதமா இருக்காங்க. நாங்க மட்டும்தான் காங்கிரஸ் கட்சிகிட்ட கரிசனத்தோட நடந்துக்கறோம். அதனால 10 சீட்டெல்லாம் எதிர்பார்க்காதீங்க. நாங்க தர்ற 6 சீட்டை சந்தோஷமா வாங்கிட்டு போங்க. வேணும்னா அழகிரிக்காக ஒரு ராஜ்யசபா சீட்டும் சேர்த்து தர்றோம் ’ன்னு முதல்வர் ஸ்டாலின்கிட்ட இருந்து மெஸேஜ் போயிருக்கு. இதனால காங்கிரஸ் தலைவர்கள் என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்காங்க.”
“திமுக ஏன் இவ்ளோ சீட்டை கம்மி பண்ணுது?”
“எல்லாம் கமலுக்காகத்தான். அவரைப் பொறுத்தவரை மநீமவுக்கு 2 சீட்டாவது வேணும்னு பிடிவாதமா இருக்கார். அதான் காங்கிரஸ் கட்சிகிட்ட இருந்து 4 சீட்டை குறைச்சு, அதுல ரெண்டை கமலுக்கு கொடுக்கலாமான்னு முதல்வர் யோசிக்கறாராம்.”
“மீதி ரெண்டு தேமுதிகவுக்கா?”
“அவங்கதான் இன்னும் முடிவு எடுக்காம இருக்காங்களே… திமுகவை பொறுத்தவரை இந்த தடவை 25 தொகுதிகள்லயாவது உதய சூரியன் சின்னத்துல போட்டியிடணும்கிறதுல பிடிவாதமா இருக்காங்க. அதுக்காகத்தான் கூட்டணி கட்சிகள்கிட்ட பிடிவாதமா இருக்காங்க.”
“இப்படி பிடிவாதம் பிடிச்சா சில கூட்டணி கட்சிகள் அதிமுக பக்கம் ஒதுங்கிடாதா?”
”அப்படி யாரும் வருவாங்களான்னுதான் எடப்பாடியும் கடையை திறந்து வச்சு காத்திருக்கார்.”
“தேர்தல் நெருங்க நெருங்க, சீட்டுக்காக மோதுறவங்களோட என்ணிக்கை அதிகரிச்சுட்டே இருக்குமே… இந்த முறை யாரெல்லாம் சீட்டுக்காக கட்சித் தலைமைகிட்ட மல்லு கட்டறாங்க?”
“பாரதிய ஜனதா சார்பில திருநெல்வேலி தொகுதியில நிக்க சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஆசைப்படறார். ஆனா அதே தொகுதியில தன் கட்சிக்கு வாய்ப்பு கொடுத்தா தாமரை சின்னத்துல நிக்கவும் தயார்னு சரத்குமார் தூது விட்டிருக்காராம். இதேபோல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, தனக்கு காங்கிரஸ் சட்டசபை தலைவர் பதவி கிடைக்காததால அப்செட்ல இருக்காங்க. அதனால பாஜகல சேர்ந்து கன்னியாகுமரி தொகுதியில நிக்க முயற்சி பண்றார். முன்னாள் பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினரனான ஜே.எம்.ஹாரூண், தேனியில நிக்க ஆசைப்படறார். ஆனா திமுக இந்த தடவை தேனியை விட்டுக்கொடுக்க தயாரா இல்லை. அந்த தொகுதியில தங்க தமிழ்ச்செல்வனை நிக்கவைக்க முதல்வர் ஆசைப்படறாராம்.”
“ஜாக்டோ ஜியோ அமைப்பு வேலை நிறுத்த முடிவை வாபஸ் வாங்கி இருக்கே?”
”பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வோம்னு அவங்க சொல்லிட்டு இருந்தாங்க. இந்த சூழல்ல ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை முதல்வர் சந்திச்சிருக்கார். அரசு ஊழியர்களான உங்களுக்கு தமிழக அரசின் நிதி நிலவரம் என்னன்னு நல்லா என்று தெரியும். உங்களுக்கு தந்த வாக்குறுதிகளை நான் நிச்சயம் நிறைவேற்றித் தருவேன். ஆனா அதுக்கு எனக்கு கொஞ்சம் டைம் வேணும்னு முதல்வர் கேட்டிருக்கார். அதனாலதான் ஜாக்டோ ஜியோ அமைப்பு வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமா தள்ளி வச்சிருக்கு. இது அந்த அமைப்புக்கு எதிராவும் திரும்பி இருக்கு. அரசு ஊழியர்கள் பலருக்கு இது பிடிக்கல. ‘ஒவ்வொரு முறையும் போராட்டம்னு சொல்லி ஆட்களை திரட்டிய பிறகு நீங்கள் வாபஸ் பெறுவது வாடிக்கையாகிவிட்டது இனிமேல் போராட்டம் என்று எங்களிடம் வராதீர்கள்’னு ஒரு பெண் அரசு ஊழியர் பேசும் ஆடியோ வைரலாகிட்டு வருது.”
“நீண்டகால போராட்டத்துக்கு பிறகு சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியை அதிமுகவுக்கு சபாநாயகர் ஒதுக்கி இருக்காரே?”
“ஆளுநர் விஷயத்துல மரபு மீரல்னு சொல்லிட்டு, நாமளே மரபை மீர்றது சரியில்லைன்னு முதல்வர் நினைச்சிருக்கார். அதனால பெரும்பான்மை அதிமுக உறுப்பினர்கள் விருப்பப்படி ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவரா நியமிக்க அவர் சபாநாயகருக்கு பரிந்துரைச்சு இருக்கார். அவரும் அப்படியே செஞ்சு, ஓபிஎஸ்சை 2-வது வரிசைக்கு தள்ளி விட்டிருக்காங்க.”
“திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ரகசிய உடன்படிக்கைனு நியூஸ் கிளம்பியிருக்கே…இதை வச்சுதானா?”
“அப்படியும் இருக்கலாம். பாஜகவை வளர விடக் கூடாதுனு இரண்டு கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேசிக்கிட்டதா கூட ஒரு நியூஸ் இருக்கு. அதன்படிதான் எடப்பாடி கோரிக்கையை ஏத்துக்கிட்டாங்கனு சொல்றாங்க. இதுல சிக்கினவர் ஓபிஎஸ். எடப்பாடி பக்கத்து சீட்லருந்து தூக்குறாங்க”
“ஓபிஎஸ் புலம்பி இருப்பாரே?”
“புலம்பாம இருப்பாரா? ஒருங்கிணைப்பாளர் பதவி, கட்சி, ஆபீஸ், கொடி, கரை வேட்டின்னு எல்லாத்தையும் ஏற்கெனவே பறிச்சுட்டாங்க. மீதி இருந்தது எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிதான். இப்ப அதையும் புடுங்கிட்டாங்களேன்னு புலம்பிட்டு இருக்காராம் ஓபிஎஸ். தன்னோட பதவியை பிடுங்கினதுக்கு பிறகு சட்டமன்றத்துக்குள்ள போகவே தயங்கிட்டு இருக்காரு”
“அவரு சட்டமன்றத்துக்குள்ள போகாட்டி என்ன? மகனை திரும்பவும் தேனியில எம்பியாக்க பாஜககிட்ட பேசிட்டு இருக்காரே. அவருக்குதான் பாஜக சீட் கொடுக்கும்னும் ஒரு பேச்சு இருக்கே.”
“சீட் கிடைச்சா போதுமா? ஜெயிக்க வேணாமா?. இந்த தேர்தல்ல யார் ஜெயிச்சாலும், தோத்தாலும் கவலையில்ல… ஆனா ஓபிஎஸ்ஸோட மகன் மட்டும் தேனியில ஜெயிச்சுடக் கூடாதுங்கிறதுல எடப்பாடி தீவிரமா இருக்காராம். அதுக்கான பொறுப்பை அவர் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார்கிட்ட கொடுத்திருக்கார். ஓபிஎஸ் மகனை தோக்கடிக்க எவ்வளவு பணம் வேணும்னாலும் செலவு செய்யுங்க. வேட்பாளரைக்கூட நீங்களே தேர்ந்தெடுத்துக்கலாம்னு உதயகுமார்கிட்ட எடப்பாடி சொல்லி இருக்கார்.”