விளையாட்டு வீரர்களின் முக்கிய மூலதனமே அவர்களின் உடல்தான். இதனாலேயே தங்கள் உடல் நலனுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்து வெளிநாடுகளில் சிகிச்சை பெறுவது அவர்களின் வழக்கம். இந்த சூழலில் தனது முட்டியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்வதற்காக, இந்தியாவில் உள்ள சாதாரண காட்டுப் பகுதியில் வசிக்கும் ஒரு வைத்தியரிடம் சிகிச்சை பெற்று வருகிறார் மகேந்திர சிங் தோனி. 800 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகளை வைத்துள்ள தோனி, இந்த சிகிச்சைக்கு செலுத்தும் கட்டணம் என்ன தெரியுமா?… வெறும் 40 ரூபாய்!
தோனியின் சிகிச்சையைப் பற்றி அறியும் முன், அவருக்கு என்ன ஆனது என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்…
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக பல ஆண்டுகள் செயல்பட்டவர் தோனி. இந்திய அணிக்கு மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் பல போட்டிகளில் அவர் விக்கெட் கீப்பராக இருந்துள்ளார்.
எதிரணியினர் பேட்டிங் செய்யும் நேரம் முழுவதும் கால்களை மடக்கி குனிந்தபடி நிற்பதால் அவர்களின் மொத்த எடையையும் முட்டிதான் தாங்குகிறது. கடந்த 2006-ம் ஆண்டுமுதல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக இருந்துவருவதால், தோனியின் முட்டியில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், அதற்காக மற்ற விளையாட்டு வீரர்களைப் போல் வெளிநாட்டில் அறுவைச் சிகிச்சையின் பக்கம் தோனி ஒதுங்கவில்லை. மாறாக ஆயுர்வேத சிகிச்சையை நாடி இருக்கிறார்.
இந்த ஆயுர்வேத சிகிச்சைக்கு தோனி தேர்ந்தெடுத்துள்ள வைத்தியரின் பெயர் வந்தன் சிங் கேர்வார். ஜார்கண்ட் மாநிலத்தில் தோனியின் வீடு அமைந்துள்ள ராஞ்சி நகரில் இருந்து 70 கிலோமீட்டர் தள்ளியுள்ள அடர்த்தியான வனப்பகுதியில் அவர் தங்கியுள்ளார்.
வந்தன் சிங் கேர்வாரை தோனி தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் அவரது பெற்றோர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது பெற்றோருக்கு மூட்டு வலி வந்தபோது பல டாக்டர்களை அவர்கள் அணுகியுள்ளனர். ஆனால், அவர்களை டாக்டர்களால் குணப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் வந்தன் சிங் கேர்வாரின் ஆயுர்வேத சிகிச்சைதான் அவர்களை குணப்படுத்தி உள்ளது. இதனாலேயே அந்த வைத்தியரை அணுகியுள்ளார் தோனி.
தோனியை பரிசோதித்துப் பார்த்த கேர்வார், கால்ஷியம் பற்றாக்குறையால் அவரது முட்டியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, அதற்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
தோனியைப் பற்றிக் கூறும் கேர்வார், “எந்த ஆடம்பரமும் இல்லாமல், மற்ற நோயாளிகளைப் போல்தான் தோனி என்னைக் காணவந்தார். நான் சொன்ன சில கட்டுப்பாடுகளை ஏற்று நடக்கிறார். தற்போது 4 நாட்களுக்கு ஒருமுறை வந்து மருந்துகளை வாங்கிச் செல்கிறார். முதல் முறை அவர் வரும்போது பெரிய அளவில் பிரச்சினை இல்லை. ஆனால், அதன்பிறகு அவர் வழக்கமாக வருவது தெரிந்துவிட்டதால், ஏராளமான ரசிகர்கள் வந்துவிடுகின்றனர். அதனால் நான் பார்த்து மருந்து தயாரித்துக் கொடுக்கும்வரை காரிலேயே அமர்ந்திருக்கிறார்” என்கிறார்.
தோனி பார்க்கச் செல்வதற்கு முன்பே ஜார்க்கண்டில் கேர்வார் பிரபலமான வைத்தியர்தான். சிகிச்சைக்கு 40 ரூபாயை மட்டுமே கட்டணமாக வாங்கும் கேர்வார், காடுகளில் உள்ள மூலிகைகளை அரைத்து மருந்துகளை தயாரித்துக் கொடுக்கிறார்.