பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் ஒருவழியாக இந்தியா வென்றுவிட்டது. யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற சஸ்பென்சுடன் கடைசிவரை பரபரப்புடன் இருந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு கேப்டன் ரோஹித் சர்மா வகுத்த வியூகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அப்படி இந்தியாவை வெற்றிபெறவைத்த 5 வியூகங்களைப் பார்ப்போம்…
பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தது:
பொதுவாக மிக முக்கிய போட்டிகளில் டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பேட்டிங் செய்வதைத்தான் விரும்பும். முக்கிய போட்டிகளின்போது இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணியின் வீரர்கள் அதிக பிரஷரை எதிர்கொள்வார்கள் என்பதால் இப்படி செய்வது வழக்கம். ஆனால் நேற்றைய போட்டியில் டாஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். பாகிஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார்.
இதற்கு 2 காரணங்கள். முதல் காரணம் போட்டி நடந்த துபாய் மைதானத்தின் ஆடுகளம். துபாய் மைதானத்தின் ஆடுகளத்தில் புற்கள் அதிகம். இது முதல் சில ஓவர்களில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். நேற்று முன் தினம் நடந்த முதல் போட்டியில் ஆப்கான் பந்துவீச்சாளர்கள் இதைப் பயன்படுத்தி இலங்கை அணியை 105 ரன்களில் ஆல் அவுட் செய்திருந்தனர். இரண்டாவது காரணம், ரோஹித்தின் கேப்டன்ஷிப்பில் இதற்கு முன்பு இந்தியா சேஸிங் செய்த 18 போட்டிகளில் 14 ஆட்டங்களில் ஜெயித்தது.
இந்த 2 காரணங்களால் டாஸில் வென்றதும் பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார் ரோஹித். ஆட்டத்தின் ஆரம்பத்தில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், முதல் சில ஓவர்களில் ரன் எடுக்கமுடியாமல் தடுமாற, இது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது.
6 பந்துவீச்சாளர்கள்:
இந்திய அணி நேற்று 6 பந்துவீச்சாளர்களுடன் விளையாடியது. அதேநேரத்தில் பாகிஸ்தான் அணி 5 பந்துவீச்சாளர்களுடன் ஆடியது. ஆரம்பத்தில் இதுதொடர்பான ரோஹித் சர்மாவின் முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆவேஷ் கானுக்கு பதில் ரிஷப் பந்தை ஆடவைத்திருக்கலாம் என்று பலரும் கூறினார்கள். ஆனால் தேவையான நேரத்தில் பந்துவீச்சில் மாற்றங்களை செய்ய இது மிகவும் உதவியது. 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்திருந்ததால் பாகிஸ்தான் அணி திணறியதையும் பின்பு பார்க்க முடிந்தது.
பவுன்சரில் கவனம்:
சமீப காலமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகமாக யார்க்கர்களை வீசிவந்தனர். அதனால் பாகிஸ்தான் வீரர்களும் அதற்கு ஏற்ற வகையில் தயாராகி வந்ததனர். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் யார்க்கர்களை விட்டுவிட்டு ஷார்ட்பிட்ச் பந்துகளை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் வீசினர். திடீர் திடீரென பந்துகள் உயர்ந்துவர, பாகிஸ்தான் வீரர்கள் அதை சிக்சருக்கு விரட்ட முயற்சிக்க, எளிதில் கேட்ச் சகொடுத்து ஆட்டம் இழந்தனர். நேற்றைய ஆட்டத்தில் இப்படி பாதிக்கும் மேற்பட்ட விக்கெட்களை இழந்தது பாகிஸ்தான்.
ஜடேஜாவுக்கு பிரமோஷன்:
இந்திய கிரிக்கெட் ரசிகர்களை நேற்று மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் ஜடேஜாவுக்கு வழங்கப்பட்ட பிரமோஷன். வழக்கமாக 7-வது பேட்ஸ்மேனாகத்தான் ஜடேஜா களம் இறக்கப்படுவார். ஆனால் நேற்றைய போட்டியில் 4-வது பேட்ஸ்மேனாக அவர் களம் இறக்கபட்டார். அவர் களம் இறக்கப்பட்ட நேரத்தில் 2 சுழற்பந்துவீச்சாளர்களை பாகிஸ்தான் பயன்படுத்தி வந்தது. அவர்கள் மீது தாக்குதல் நடத்த இடதுகை பேட்ஸ்மேனால்தான் முடியும் என்பதாலும், இந்திய அணியில் வேறு இடதுகை பேட்ஸ்மேன் இல்லை என்பதாலும் அப்போது ஜடேஜாவை களம் இறக்கியுள்ளார் ரோஹித் சர்மா. இதற்கு ராகுல் திராவிட்டின் அறிவுரையும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
ஜடேஜா பேட்டிங் செய்ய வந்ததும் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான முகமது நாவாஸை பந்துவீச்சில் இருந்து ஒதுக்கிவைக்க வேண்டிய நிலைக்கு பாகிஸ்தான் கேப்டன் தள்ளப்பட்டார். இதனால் கடைசி ஓவரை அவர் வீசவேண்டி வந்தது. இந்தியாவும் அதைப் பயன்படுத்தி ஜெயித்தது.
துல்லியமான செயல்திட்டம்:
ஆட்டத்தின் ஆரம்பம் முதல் பதறாமல் தனது அடிகளை இந்திய அணி எடுத்து வைத்தது. கடைசிவரை அந்த நிதானத்தை இந்தியா தவறவிடவில்லை. குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் தலா 10 ரன்களுக்கும் மேல் குவிக்கவேண்டிய நிலையில் அதிரடி காட்டாமல் புத்திசாலித்தனமாக ஆடியது. எப்படி இருந்தாலும் கடைசி 5 ஓவர்களில் ஒரு ஓவரை சுழற்பந்து வீச்சாளர் வீசவேண்டி இருக்கும் என்று அதற்காக காத்திருந்தது. 19-வது ஓவரில் ஹர்த்திக் பாண்டியா சற்று அவசரப்பட்டபோதுகூட, கிளவிசை கொண்டுசெல்வதாக காரனம் கூறி ரிஷப் பந்தை மைதானத்துக்கு அனுப்பி, கடைசி ஓவருக்காக அவரை காக்கவைத்தது இந்திய அணி நிர்வாகம். துல்லியமான இந்த திட்டம் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தது.