சென்னையில் 9 கால்பந்து மைதானங்களை தனியார் மயமாக்க நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சென்னை மாநகராட்சி வாபஸ் பெற்றது.
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் 738 பூங்காக்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள், 220 விளையாட்டு மைதான்ங்கள், 204 குழந்தைகள் விளையாட்டு மைதானங்கள் உள்ளன. இதில் 9 செயற்கை புல் கால்பந்து விளையாட்டு மைதானங்களை தனியாருக்கு வாடகைக்கு விட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ள கால்பந்து மைதானங்கள் வருமாறு
முல்லை நகர், வியாசர்பாடி செயற்கை கால்பந்து மைதானம்
நேவல் மருத்துவமனை சாலையில் உள்ள செயற்கை கால்பந்து மைதானம்
தி.ரு.வி.க. நகர் விளையாட்டு மைதானம் செயற்கை கால்பந்து மைதானம்
ரங்கசாயி விளையாட்டு மைதானம்
கேபி பார்க் விளையாட்டு மைதானம் செயற்கை கால்பந்து மைதானம்
மேயர் சத்தியமூர்த்தி சாலை (டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு மைதானம்)
அம்மா மாளிகை, கோடம்பாக்கம் மெயின் ரோடு
8 காமகோட்டி நகர், 6வது தெரு செயற்கை கால்பந்து மைதானம்
சோழிங்கநல்லூர் ஃபஸ்டல் (OMR) செயற்கை கால்பந்து மைதானம்
மேற்கண்ட மைதானங்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யும் வகையில் விரைவில் ஆன்லைன் டெண்டர் விடப்பட உள்ளது. இதில் 40 ரூபாய் மாநகராட்சிக்கு கிடைக்கும். இதன்படி மைதானத்தை பராமரிக்கும் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு ஆண்டுக்கு 2.3 கோடி கிடைக்கும். இதில் 93 லட்சம் சென்னை மாநகராட்சிக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஒப்பந்ததாரர் சென்னை மாநகராட்சியின் ஆண்டு வருமானத்தை 5% அதிகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கால்பந்து மைதானங்களை தனியாருக்கு விடும் சென்னை மாநகராட்சியின் இந்த முடிவுக்கு அதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவர்களின் எதிர்ப்புகளையும் மீறி விளையாட்டு மைதானங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கால்பந்து மைதானத்தை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிராக பல கால்பந்து வீரர்கள் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் இதுபற்றி கூறும் போது, சொத்துக்களை பராமரிக்க வருவாய் தேவை என்றும், அது முற்றிலும் இலவசமாக இருக்க முடியாது என்றும் தெரிவித்தார். SDAT-யில் பதிவு செய்த விளையாட்டு வீரர்களுக்கு கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறினார்.
சென்னை மாநகராட்சியின் இந்த முடிவை கண்டித்து நகரின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.