சீனாவில் நாள் ஒன்றுக்கு ஒன்பதாயிரம் பேர் கொரோனாவினால் இறந்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறது இங்கிலாந்தை சார்ந்த Airfinity என்ற ஆராய்ச்சி நிறுவனம்.
சீனாவில் கோவிட் முடக்கங்களை முற்றிலும் நீக்கியப் பிறகும் அதற்கு முன்பும் இருந்த கோவிட் தொற்று எண்ணிக்கையை கணக்கில் கொண்டும் மற்ற நாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கிய பிறகு நடந்த தொற்று எண்ணிக்கை மாற்றங்களையும் ஒப்பிட்டு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். சீனாவிலுள்ள மாகாணங்கள் தந்திருக்கும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
சீனாவிலிருந்து புள்ளிவிவரங்கள் கிடைப்பது அரிது. ஆனாலும் கிடைத்த குறிப்புகள் மூலம் ஆராய்ந்ததில் தினமும் ஒன்பதாயிரம் பேர் இறந்துக் கொண்டிருக்கலாம என்று முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் ஜனவரி 15க்குள் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை முப்பது லட்சத்தை தொடும் என்றும் ஜனவரி இறுதிக்குள் 5.84 லட்சம் பேர் கோவிட் வைரஸ் பாதிப்பினால் இறந்திருப்பார்கள் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஏர்ஃபினிட்டியின் இந்த அறிக்கையை ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.
என்ன நடக்கிறது சீனாவில்? மீண்டும் தீவிரமாய் அங்கு கொரோனா பரவுவதற்கு என்ன காரணம்?
கடந்த அக்டோபர் மாதம் வரை சீனாவில் பல இடங்களில் கொரோனா பொது முடக்கங்கள் நீடித்துக் கொண்டே இருந்தன. இதனை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் இறங்கினார். பொதுமுடக்கங்கள், கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று போராட்டம் நடத்தினார்கள். அதனால் சீன அரசு நவம்பர் மாதம் பொதுமுடக்கங்களை நீக்கி கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
சீனாவில் இப்போது வேகமாய் கொரோனா பரவிக் கொண்டிருக்கும் சூழலிலும் பொதுமுடக்கங்கள் அறிவிக்கப்படவில்லை. மிதமான அறிகுறிகள் உள்ள கொரோனா தொற்று உள்ளவர்கள் பணிக்கு வரலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டு பணி செய்ய வேண்டும் என்று நிறுவனங்கள் ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருக்கின்றன.
இதற்கு முக்கிய காரணம் பொருளாதாரம். பொதுமுடக்கங்கள், கட்டுப்பாடுகளால் மக்களின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் பொதுமுடக்கம் என்றால் பொருளாதாரம் அதிக பாதிப்படையும் அதனால் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.
கொரோனா தொற்றாளர்கள் பொதுவெளியில் வரும்போது மேலும் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். தொற்று வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்கிறது.
இன்னும் மூன்று மாதங்களில் சீனாவில் 100 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
இதற்கு காரணம் பொது முடக்கங்கள், கட்டுப்பாடுகள் நீக்கம் மட்டுமா என்ற கேள்வி இப்போது கேட்கப்படுகிறது.
2019 இறுதியிலிருந்து 2022 அக்டோபர் வரையிலான மூன்று வருடங்களில் சீனாவில் ‘ஜீரோ கோவிட்’ என்ற இலக்கு செயல்படுத்தப்பட்டிருந்தது. அதனால் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன. உதாரணமாய் மதுரையில் மாட்டுத் தாவணி பகுதியில் ஒருவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டால் அந்தப் பகுதி முழுவதுமே முடக்கப்படும். தொற்று ஏற்பட்டவரின் உறவினர்கள், நண்பர்கள், பழகியவர்கள் அனைவருமே தனிமைப்படுத்தப்படுவார்கள் அந்தப் பகுதியில் தொற்றே இல்லை என்ற நிலை ஏற்படும் வரை முடக்கம் நீட்டிக்கப்படும். இந்தக் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் அதிகமாக சிரமப்பட்டார்கள். பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. போராட்டங்களுக்குப் பிறகு முடக்கங்கள் நீக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் தடுப்பில் “Herd Immunity’ எனப்படும் மந்தை எதிர்ப்பு சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் இந்த மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கிறது. ஆனால் சீனாவில் அதீத கட்டுப்பாடுகள் இருந்ததால் மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் கொரோனா வெகு வேகமாக பரவுகிறது என்றும் காரணம் சொல்லப்படுகிறது. மந்தை எதிர்ப்பு சக்தி என்பது இயற்கையாக உடலில் உருவாகும் எதிர்ப்பு சக்தி. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவர்கள் உடலுக்குள் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. பலருக்கு இது போன்ற எதிர்ப்பு சக்தி உருவாகும்போது கோவிட் வைரஸ் வேகமாக பரவுவது தடைபடுகிறது. ஆனால் சீனாவில் கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதால் மக்களுக்கு இயற்கை எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை.
சீனாவின் தடுப்பூசிகள் அத்தனை சிறப்பானவை அல்ல என்றும் ஒரு காரணம் சொல்லுகிறார்கள். சீனாவில் சினோவாக், சினோபார்ம் (Sinovac, Sinopharm) என்று இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இரண்டுமே சீனாவில் தயாரிக்கப்பட்டவை. இவற்றின் தடுப்பு சக்தி குறித்து சந்தேகங்கள் கிளப்படுகின்றன.
தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதில் சீன மக்களும் அதிகம் தயங்கியிருக்கிறார்கள். சீனாவில் 90 சதவீத மக்கள் தடுப்பூசிகளை முழுமையாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சீனாவின் புள்ளிவிவரங்களை முழுமையாக நம்ப இயலாது என்று கூறப்படுகிறது.
சீனாவில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான மருந்துகளும் தட்டுப்பாட்டில் இருக்கின்றன. அலோபதி மருந்துகள் இல்லாமல் சீனாவின் பாரம்பர்ய நாட்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்று சீன அதிபர் ஜின்பிங் கூறியிருந்தார். ஆனால் பாரம்பர்ய நாட்டு மருந்துகள் எந்த அளவு கொரோனாவைக் கட்டுப்படுத்தும் என்பது அறிவியல்பூர்வமாக தெரியாது.
சீனாவில் இப்போது BF.7 என்ற வகை கோவிட் வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது. இது ஒமைக்ரானில் வழியில் வந்த வைரஸ். இது வேகமாக பரவும் தன்மை கொண்டது. இந்த வைரஸ்தான் சீனாவின் வேகப் பரவலுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
சீனாவில் பெருகிவரும் கொரோனா வைரசால் இந்தியா அச்சப்பட வேண்டாம் என்பதே பெரும்பாலான தொற்று நோய் மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.
இந்தியாவில் தடுப்பூசி முழுமையான அளவு போடப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் தடுப்பூசிகள் சீனாவின் தடுப்பூசிகளை விட சக்தி வாய்ந்தவை. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியர்களுக்கு போதுமான எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கிறது. இப்படி காரணங்கள் இருப்பதால் இந்தியா அச்சப்படத் தேவையில்லை என்கிறார்கள்.
ஆனாலும் அடுத்த மூன்று மாதங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. 2019 நவம்பர், டிசம்பர் மாதங்களில் சீனாவில் ஏதோ வைரசாம் என்று பேசிக் கொண்டிருதோம். ஜனவரி பிப்ரவரியில் லேசாய் அதன் தீவிரத்தை உணர்ந்தோம். மார்ச் மாத இறுதியில் பொதுமுடக்கத்துக்குள் தள்ளப்பட்டோம்.
அன்று நம்மிடம் தடுப்பூசிகள் கிடையாது. மருத்துவமனைகள் தயாராக இல்லை. இன்று தடுப்பூசி போடப்பட்டிருக்கின்றன. மருந்துகள் இருக்கின்றன. 2020, 2021 ஆகிய இரண்டு வருட கொரோனாக்களும் நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கின்றன. நிறைய கற்றிருக்கிறோம்.