“இந்த தேர்தல்ல திமுகவோட முக்கிய பேச்சாளரா உதயநிதிதான் இருக்கப் போறாரு” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு?”
“சமீபத்தில் முதல்வரோட உடல்நிலையை பரிசோதிச்ச டாக்டர்கள், ஏப்ரல் மே மாதத்துல வெயிலோட தாக்கம் அதிகமா இருக்கும். அதனால முதல்வர் பிரச்சாரத்துக்காக ரொம்பவும் அலையக் கூடாது ஜாக்கிரதையா இருக்கணும்னு அட்வைஸ் பண்ணியிருக்காங்க. ஆனா முதல்வர் ஆரம்பத்துல அதை கேட்கிறதா இல்லை. இந்த நாடாளுமன்ற தேர்தலை முக்கியமான தேர்தலா முதல்வர் நினைக்கறாரு. அதனால தான் எல்லா ஊருக்கும் போய் பிரச்சாரம் செய்யணும்னு அவர் ஆசைப்பட்டிருக்கார். ஆனா டாக்டர்களே அட்வைஸ் பண்ணி இருக்கறதால அவரை சுற்றுப்பயணத்துக்கு அனுப்ப துர்க்கா ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் தயங்கி இருக்காங்க. வேணும்னா முக்கிய ஊர்கள்ல மட்டும் கூட்டம் நடத்திக்கலாம்னு முதல்வர்கிட்ட சொல்லி இருக்காங்க. ஒரு பக்கம் டாக்டர்கள், இன்னொரு பக்கம் உறவுகள்னு ரெண்டு தரப்புலயும் அட்வைஸ் பண்றதால முதல்வரும் சில ஊர்கள்ல மட்டும் கூட்டம் போட்டா போதும்கிற முடிவுக்கு வந்திருக்காராம். தனக்கு பதிலா உதயநிதியை மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் அனுப்ப முடிவு செஞ்சிருக்காராம்”
“அப்ப முதல் முறையா தேர்தல் பிரச்சாரத்துக்கு உதயநிதி தலைமை தாங்குவார்னு சொல்லு.”
“ஆமா. அதுக்கான திட்டங்களையும் உதயநிதி வகுத்திருக்காரு. இந்த முறை ஒரு தொகுதியில பேசின அதே விஷயத்தை இன்னொரு தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பேச மாட்டாராம். ஒவ்வொரு தொகுதியிலயும், அந்த தொகுதியோட முக்கிய பிரச்சினைகளை பேச முடிவெடுத்து இருக்கார். ஒவ்வொரு தொகுதியிலயும் தான் என்ன பேசணும்னு தீர்மானிக்க உதயநிதி ஒரு டீமை போட்டிருக்காராம். அவங்கதான் தொகுதி நிலவரத்தை உதயநிதிக்கு எடுத்துச் சொல்வாங்க. அதன்படி உதயநிதியோட பேச்சு இருக்கும். முதல்வரும், உதயநிதியும் தேர்தல் பிரச்சாரம் செய்ய வசதியா 2 கருப்பு நிற பென்ஸ் வேன்களை திமுக தயார் நிலையில் வச்சிருக்கு. இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருக்காம்.”
“திமுக எப்ப பிரச்சாரத்தை தொடங்கப் போகுது?”
“மார்ச் முதல் தேதி சென்னையில் திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மற்றும் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டத்தை நடத்த திமுக தலைமை திட்டமிட்டு இருக்கு. இந்த கூட்டத்துக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் எல்லாரையும் கூப்பிட்டு பிரம்மாண்டமா நடத்த அவங்க திட்டமிட்டு இருக்காங்க.”
“பிரச்சாரம் செய்யறது இருக்கட்டும், அதுக்கு வேட்பாளர்களை தயார் செஞ்சுட்டாங்களா?”
“திமுகவில் இந்த முறை 10 புதுமுகங்களுக்காவது வாய்ப்பு கிடைக்கும்னு சொல்றாங்க. டி.ஆர்.பாலுகிட்டயே, ‘நீங்க ஏன் ராஜ்யசபா தேர்தல்ல போட்டியிடக் கூடாது’ன்னு முதல்வர் கேட்டிருக்காராம். அதனால அவருக்கே சீட் கிடைக்கறது கஷ்டம்னு சொல்றாங்க. இப்ப இருக்கற சில எம்பிக்களுக்கு மக்கள் மத்தியில செல்வாக்கு இல்லைன்னு தனியார் ஏஜென்சி ஒண்ணு சொன்ன தகவலை வச்சு முதல்வர் இந்த முடிவை எடுத்திருக்கார் வேட்பாளர் தேர்வு நெருங்க நெருங்க சிபாரிசுக்கான அழுத்தம் அதிகமாகும்கிறதால முக்கிய தலைவர்கள் தொடர்பு எல்லையில இருந்து முதல்வர் ஒதுங்கி நிக்கறாராம்.”
“தேர்தல் நெருங்கற நேரத்துல காங்கிரஸ் கட்சியோட மாநில தலைவரா செல்வப் பெருந்தகையை நியமிச்சு இருக்காங்களே?”
“செல்வப்பெருந்தகையோட நியமனம் மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியா இருந்திருக்கு. கே.எஸ்.அழகிரிக்கும் கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதி மணிக்கும் zoom மீட்டிங்கில் நடந்த சண்டைதான் அழகிரி நீக்கத்துக்கு முக்கிய காரணம்னு சத்யமூர்த்தி பவன்ல பேசிக்கறாங்க. இந்த விஷயத்தை ராகுல் காந்தி கவனத்திற்கு ஜோதிமணி கொண்டு போயிருக்கார். அவர் தன்னைத்தான் அடுத்த தலைவரா நியமிப்பார்னு ஜோதிமணி நினைச்சிருக்காங்க. ஆனால் நடந்தது வேறு. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி ஏற்கனவே மல்லிகார்ஜுன கார்கே மகனுடன் தனக்கிருந்த தொடர்பை பயன்படுத்தி சரியாக காய் நகர்த்தி தலைவர் ஆகியிருக்கார் செல்வப் பெருந்தகை. அவர் தலைவரா நியமிக்கப்பட்டதை சில காங்கிரஸ் தலைவர்களை மாதிரி விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ரசிக்கலை. ஏற்கனவே செல்வப் பெருந்தகை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தப்ப கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டது. அதனாலதான் அவர் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். அதுதான் அவங்களோட வெறுப்புக்கு காரணம்.”
“அதிமுக கூட்டணி நியூஸ் ஏதும் இல்லையா?”
“பாட்டாளி மக்கள் கட்சியோட சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் அதிமுகவோட கூட்டணி வைக்கறதைத்தான் விரும்பறாங்க. எடப்பாடி சட்டமன்ற தேர்தலுக்கும் சேர்த்து கூட்டணி பேசறதுதான் இதுக்கு காரணம். சமீபத்தில் சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள், எடப்பாடியை சந்திச்சிருக்கார். ‘பெரியய்யா உங்களோடதான் கூட்டணி வச்சுக்க ஆசைப்படறார். நீங்க அவர்கிட்ட பேசுங்க’ன்னு சொல்லி இருக்கார். அதுக்கு எடப்பாடி, ‘ஏன் உங்க சின்னையா என்கிட்ட பேச மாட்டாரா? அவர் யாரால் ராஜ்யசபா உறுப்பினர் ஆனார்? அவரை என்கிட்ட பேசச் சொல்லுங்க’ன்னு சொல்லி திருப்பி அனுப்பி இருக்கார்.”
“பிரதமர் மோடி இந்த மாச இறுதியில தமிழகத்துக்கு வரப் போறதா அண்ணாமலை சொல்லி இருக்காரே?”
“தான் வர்றாதுக்குள்ள கூட்டணி விஷயத்துல இறுதி முடிவுகளை எடுக்கணும்னு மோடி உத்தரவு போட்டிருக்காராம். ஆனா பாமகவும், தேமுதிகவும் இன்னும் பிடிகொடுத்து பேசாத்தால அண்ணாமலை டென்ஷன்ல இருக்கார்.”
“அவங்க எந்தப் பக்கம் போவாங்க”
“காந்தம் எந்தப் பக்கம் இழுக்குதோ அந்தப் பக்கம் போவாங்க”
“அது என்ன காந்தம்?”
“உங்களுக்குத் தெரியாதா? எல்லோரையும் இழுக்கிற அதே பேப்பர் காந்தம்தான்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.