“முதல்வர் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல போகாம நியூஸ் பாத்துக்கிட்டு இருக்கிங்க” என்றபடி அறைக்குள் வந்தாள் ரகசியா.
“யாரெல்லாம் வாழ்த்து சொல்லியிருக்காங்கனு பாத்துக்கிட்டு இருந்தேன். விஜய் வாழ்த்து சொல்லியிருக்கிறாரே”
“ஆமாம், உதயநிதி பிறந்தநாளுக்கு அவர் வாழ்த்து சொல்லலா ஆனா சிஎம் பிறந்த நாளுக்கு மட்டும் வாழ்த்து சொல்றாருனு அறிவாலயத்துல பேச்சு”
”விஜய் தரப்புல என்ன சொல்றாங்க?”
“உதயநிதிக்கும் விஜய்க்கும் குருவி படத்துல ஏற்பட்ட பிரச்சினையை விஜய் இன்னும் மறக்கல. அதை மறந்துட்டோம், நாங்க பேசிக்கிட்டோம்னு உதயநிதி சொன்னாலும் விஜய் அதை மனசுல வச்சிருக்கார். அது மட்டுமில்லாம தமிழ்நாட்டோட சி.எம்.க்குதான் அவர் வாழ்த்து சொல்லியிருக்கிறார். திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் வாழ்த்து சொல்லல. அந்த ட்வீட்டை படிச்சுப் பாத்திங்களா – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalinனுதான் சொல்லியிருக்கிறார். இன்னொன்னு கவனிச்சிங்களா?”
“என்ன?”
”காலைலருந்து நிறைய பேர் ட்விட்டர்ல முதல்வருக்கு வாழ்த்து சொல்லிக்கிட்டே இருக்காங்க. எல்லோருக்கும் முதல்வர் உடனடியா நன்றி சொல்லிக்கிட்டே இருக்கார். ஆனா விஜய் காலைலேயே வாழ்த்து சொல்லியும் சாயங்காலம் வரைக்கு முதல்வர்கிட்டருந்து நன்றி தெரிவிச்சு ட்வீட் வரல. வெயிட்டிங்ல வச்சிட்டார்”
“அப்படியா?”
“அது மட்டுமில்ல, முதல்வரோட நன்றி தெரிவித்தல்லயும் அரசியல் இருக்கு. ராகுல் காந்தி, பினராயி விஜயன் மாதிரி சிலருக்கு மட்டும் நிறைய வார்த்தைகள் போட்டு நன்றி சொல்லியிருக்கிறார். ஆனா பிரதமரோட வாழ்த்துக்கு மட்டும் Thank you for the wishesனு சிம்பிளா முடிச்சிட்டார்”
”பிரதமர் மோடி மேல கடுப்புல இருக்கார் போல”
“அவர் மேல மட்டும் இல்லை, காங்கிரஸ் கட்சி மேலயும் முதல்வர் கடுப்புல இருக்காராம்”
“என்ன தொகுதி பங்கீட்டு பிரச்சினையா?”
“அதேதான். கடந்த நாடாளுமன்ற தேர்தல்ல நின்ன தொகுதிகளோட இன்னும் 2 சீட்டை சேர்த்து தரணும்னு காங்கிரஸ் தலைவர்கள் கேட்கறாங்க. . ஆனா திமுகவோ கடந்த முறை கொடுத்த சீட்களையே கொடுக்கறதா இல்லை. கமலுக்காக ஒரு சீட்டையாவது விட்டுக்கொடுக்கச் சொல்லுது. இதுல ஆரம்பிச்ச பிரச்சினை இன்னும் முடியலை. இதனால காங்கிரஸ் மேல முதல்வர் அதிருப்தியில இருக்காராம். ’இவங்க செய்ற குழப்பத்தாலதான் மற்ற கூட்டணிக் கட்சிகளோட தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய தாமதமாகுது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவா இருக்கறதால நம்ம பல பிரச்சினைகளை சந்திக்கறோம். அதை அவங்க புரிஞ்சுக்கவே இல்லையே’ன்னு மூத்த தலைவர்கள்கிட்ட சொல்லி இருக்காரு.
“அதுக்கு அவங்க என்ன சொன்னாங்களாம்?”
“காங்கிரஸ்காரங்க எப்பவுமே இப்படித்தான். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்லகூட காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தி நாமதான் பணத்தை செலவு செய்யவேண்டி இருந்துச்சு. அதோட கோஷ்டி சண்டையால யாரும் வேலையும் பார்க்கலை. அதுக்கும் நம்ம கட்சித் தொண்டர்கள்தான் பாடுபட வேண்டி இருந்துச்சு. அதனால இந்த முறை விளவங்கோடு தொகுதி இடைத் தேர்தல்ல நாமளே வேட்பாளரை நிறுத்துவோம்’னு முதல்வர்கிட்ட இன்னும் கொஞ்சம் ஏத்தி விட்டிருக்காங்க. இந்த பிரச்சினையால அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது கமல்தான்”
“அவருக்கு என்ன ஆச்சு?”
“காங்கிரஸ் கட்சி சீட்டை குறைச்சாதானே கமலுக்கு ஒதுக்க முடியும்? ஆனா அவங்க இன்னும் வழிக்கு வரலையே… தொகுதி உடன்பாடு முடியாததால பிப்ரவரி இறுதியில படப்பிடிப்புக்காக அமெரிக்கா போக இருந்த கமல், அந்தப் பயணத்தை தள்ளி வச்சிருக்கார். ரொம்ப லேட் ஆகுதேன்னு முதல்வர்கிட்ட கேட்டதுக்கு, ‘ரெண்டு நாள் பொறுங்க. காங்கிரஸ் சரிப்பட்டு வரலைன்னா நானே உங்களுக்கு சீட் ஒதுக்கறேன்’ன்னு சொல்லி இருக்காராம்.”
“காங்கிரஸ் கட்சியை மாதிரியே மதிமுகவும் இன்னும் உடன்பாட்டில் கையெழுத்து போடாம இருக்காங்களே?”
“வைகோவின் ராஜ்ய சபா பதவிக்காலம் 2025-ல் முடியுது. அவரை திரும்பவும் ராஜ்ய சபாவில் இருந்து தேர்ந்தெடுக்கணும்னு மதிமுக தலைவர்கள் ஆசைப்படறாங்க. வைகோவுக்கும் அந்த எண்ணம் இருக்கு. ஆனா திமுகவைப் பொறுத்தவரை இப்போதைக்கு ராஜ்யசபா சீட் விஷயத்துல உறுதி கொடுக்க விரும்பலை. அடுத்த வருஷம் ராஜ்யசபா தேர்தல் நடக்கும்போது பார்த்துக்கலாம்னு சொல்றாங்க. ஆனா இதை மதிமுக தலைவர்கள் ஏத்துக்கலை. கூட்டணி உடன்பாட்டுலயே ராஜ்யசபா விஷயத்தையும் சேர்க்கணும்னு அவங்க உறுதியா இருக்காங்க. அதனால அவங்களோட பேச்சுவார்த்தை இழுத்துட்டே போகுது. இதனால மதிமுக தொண்டர்கள் கோபமாக, ‘தொகுதி உடன்பாடு பற்றி சமூக வலைதளங்களில் யாரும் எந்த பதிவையும் போடவேண்டாம்’னு வைகோ வேண்டுகோள் விடுத்திருக்கார்.”
“இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக கட்சிகளோட தொகுதி உடன்பாடு செஞ்சப்பவே அவங்களோட தொகுதியையும் அறிவிச்சு இருந்தாங்க. ஆனா கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கின திமுக அவை என்னென்ன தொகுதிகள்னு சொல்லாம இருக்கே?”
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரும்பவும் கோவையை கேட்குது. ஆனா அந்த சீட்டைத்தான் கமல் கேட்கிறார். இப்படி சில சிக்கல்கள் இருக்கறதால சீட்களை இன்னும் ஒதுக்காம இருக்காங்க.”
“செந்தில் பாலாஜியோட ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றத்துல திரும்பவும் நிராகரிச்சு இருக்காங்களே?”
“செந்தில் பாலாஜி ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் அதனால அவரை வெளியில் விட்டால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதுன்னு சொல்லி இந்த முறை அவரோட ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவிச்சிருக்கு. அதனால இப்ப சட்டமன்ற உறுப்பினர் பதவியும் ராஜினாமா செய்ய செந்தில் பாலாஜி தயாராகி இருக்காராம். அதேசமயம் தனது சகோதரர் அசோக் குமார் அமலாக்கத் துறையிடம் சிக்கிட்டாரோங்கிற சந்தேகமும் அவருக்கு வந்திருக்கு.”
“பிரதமர் நிகழ்ச்சிக்காக போயிருந்தியே… ஏதாவது ஸ்பெஷல் நியூஸ் இருக்கா?”
“பிரதமர் நிகழ்ச்சியில கலந்துக்க தமாகா போன்ற சிறிய கட்சிகளுக்கெல்லாம் அழைப்பு போயிருந்தது. ஆனா ஓபிஎஸ்ஸையும், தினகரனையும் அவங்க கூப்பிடவே இல்லை. இதனால ரெண்டு தரப்பும் அப்செட்ல இருக்கு. அதிமுக விஷயத்தை தானே டீல் பண்றதா அண்ணாமலைகிட்ட பிரதமர் மோடி சொல்லி இருந்தாராம். அதனாலதான் இந்த கூட்டத்துக்கு ரெண்டு தரப்பையும் அண்ணாமலை கூப்பிடலைன்னு பாஜக தரப்புல சொல்றாங்க. கூடவே பிரதமருக்கு அதிமுக மேல இன்னும் சாஃப்ட் கார்னர் இருக்குன்னும் அவங்க சொல்றாங்க. அதனாலதான் கூட்டத்துல ஜெயல்லிதாவைப் புகழ்ந்து பிரதமர் பேசியிருக்கார்.”