நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ஒரு அட்டூழியம் நடந்திருக்கிறது.
தூத்துக்குடியில் இரண்டரை வருடங்களுக்கு முன் ஒரு கொடூர சம்பவம் நடந்தது. ஜெயராஜ், பெனிக்ஸ் என்ற தந்தை மகன் காவல் நிலையத்தில் போலீஸ்காரர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார்கள். அதே போன்ற ஒரு சம்பவம் அம்பாசமுத்திரத்தில் நடந்திருக்கிறது.
இங்கு தாக்கப்பட்டவர்கள் உயிரிழக்கவில்லை. ஆனால் கருங்கற்களால் அவர்கள் வாய் உடைக்கப்பட்டிருக்கிறது. கட்டிங் பிளேயரைக் கொண்டு அவர்கள் பற்கள் பிடுங்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் பிறப்பு உறுப்புகள் அழுத்தமாய் நசுக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் நெஞ்சை பூட்ஸ் கால்களால் மிதித்திருக்கிறார்கள். கேட்கவே அதிரவைக்கும் படு பயங்கர செயல்கள் அங்கே அரங்கேறியுள்ளன.
தூத்துக்குடியில் இது போன்ற கொடூரச் செயல்களை செய்தவர்கள் கீழ்நிலை காவலர்கள். ஆனால் இங்கு இந்தக் காரியங்களை செய்திருப்பவர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்று செய்திகள் சொல்லுகின்றன.
நெல்லை மாவட்டத்திலிருக்கும் அம்பாசாமுத்திரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் இரண்டு குழுக்களுக்குள் அடிதடி பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. ரகளையில் ஈடுபட்ட வாலிபர்களை காவல்துறை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியிருக்கிறது.
விசாரணையை அந்தப் பகுதியின் கூடுதல் கண்காணிப்பாளராக இருக்கும் பல்பீர் சிங் ஐபிஎஸ் நடத்தியிருக்கிறார்.
அப்போது என்ன நடந்தது?
அந்த இளைஞர்கள் சொல்லும் விஷயங்கள் படு பயங்கரமாக இருக்கிறது.
அவர்களை அழைத்து கருங்கல்களை வைத்து வாய் மேல் தொடர்ந்து அடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து வாயைத் திறக்க சொல்லி பல்லில் அடித்திருக்கிறார். அத்தோடு நிற்காமல் ‘கட்டிங் பிளேயர்’ மூலம் பற்களை பிடுங்கியிருக்கிறார். ஒவ்வொருவர் வாயிலிருந்தும் ரத்தம் கொட்டியிருக்கிறது.
கடுமையான அடிவாங்கிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் மற்றொருவரைக் காட்டி அவரை அடிக்க வேண்டாம், அவருக்கு இப்போதுதான் திருமணமாகியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
உடனே, அந்த ஐபிஎஸ் அதிகாரி புது மாப்பிள்ளையை அழைத்து அவருடைய பிறப்புறுப்பை அழுத்தமாக கசக்கி எடுத்திருக்கிறார். அவர் வலி தாங்காமல் கீழே விழ, அவர் நெஞ்சின் மீது ஏறி பூட்ஸ் கால்களால் மிதித்திருக்கிறார்.
இந்த சம்பவங்களை பாதிக்கப்பட்டவர்கள் வீடியோக்களாக வெளியிட்டிருக்கிறார். இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பல்பீர் சிங் 2020ஆம் வருடம் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஹரியானாவை சார்ந்தவர். ஐபிஎஸ் படிப்புக்கு முன் ஐஐடி மும்பையில் பொறியியல் பயின்றவர்.
நன்றாக படித்த ஒரு இளம் ஐபிஎஸ் அதிகாரி இது போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இவர் அந்தப் பகுதியில் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே இது போன்ற குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. மிகக் கொடூரமான முறையில் விசாரணைகளை நடத்துகிறார் என்ற புகார்கள் எழுந்திருக்கின்றன. ஆனால் அந்த புகார்களை சரியான முறையில் விசாரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.