“கம்யூனிஸ்ட் கட்சிகள் மேல முதல்வர் கோபமா இருக்காராம்” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“போக்குவரத்து தொழிலாளர்கள் விஷயம்தானே…?”
“ஆமாம். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் அதிமுக தொழிற்சங்கங்களைவிட, கூட்டணி தொழிற்சங்கமான சிஐடியுதான் அமைச்சர்கிட்ட கடுமையா வாக்குவாதம் செஞ்சிருக்கு. ஒரு கட்டத்தில் பொங்கல் பண்டிகை முடிஞ்ச பிறகு பார்த்துக்கலாம்னு அமைச்சர் சொன்னப்ப அதை சிஐடியுதான் முதல்ல எதிர்த்திருக்கு. ”இப்படித்தான் நீங்க இழுத்தடிக்கிறீங்க. பொங்கல் பண்டிகைக்குள்ள எங்க கோரிக்கையை நீங்க நிறைவேத்தலைன்னா கண்டிப்பா பேருந்துகள் ஓடாது. உங்க கட்சி தொழிற்சங்க தலைவர்கள் வேணும்னா உங்களை ஆதரிப்பாங்க. ஆனா தொமுச தொழிலாளர்கள் ஆதரிக்க மாட்டாங்க’ன்னு சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் சொன்னப்ப திமுக தொழிற்சங்க தலைவர்கள் அதை மறுத்துப் பேச முடியாம இருந்திருக்காங்க. இது முதல்வரோட கவனத்துக்கு போயிருக்கு. இதைக் கேள்விப்பட்ட முதல்வர், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கற நேரத்துல இடதுசாரி தலைவர்கள் இப்படி நடந்துக்கறாங்களேன்னு வருத்தப்பட்டிருக்கார். எப்பவுமே அவங்க இப்படிதான். நம்ம வழிக்கு வரமாட்டாங்குனு கூட இருக்கிறவங்க ஏத்திவிட்டிருக்காங்க. இதனால முதல்வருக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது டென்ஷன்”
”இது அதிமுக காலத்து பிரச்சினைதானே?”
“ஆமா..ஆனா அதை தீர்க்க வேண்டிய இடத்துல இந்த அரசு இருக்கல. அந்த சிக்கல்ல திமுக இருக்கு. பொங்கல் டைம்ல பிரஷர் கொடுத்தான் நடக்கும்னு இப்ப போராட்டம் அறிவிச்சிருக்காங்க”
“நாடாளுமன்ற தேர்தல்ல கம்யூனிஸ்ட்கள் திமுகவோட இருப்பாங்களா?… இல்லை அதிமுக கூட சேருவாங்களா?”
“இப்போதைக்கு அவங்களா போற மாதிரி தெரியல. ஆனா தொகுதி பங்கீடு பேச்சுவார்தைல திமுக கறார் காட்டலாம். அதே மாதிரி இப்ப பாஜககிட்டருந்து அதிமுக விலகி வந்ததால கம்யூனிஸ்டுகளுக்கு அதிமுக ஆப்ஷனும் இருக்கு. ஆனா இதை முதல்வர் ஸ்டாலினும் உணர்ந்திருக்கார். இடதுசாரிகளோட விடுதலைச் சிறுத்தைகளும் கறார் காட்டலாம்னு அவர் நினைக்கறார். அதனால இப்போதைக்கு அவங்களோட சமாதானமா போய் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அவங்களை ஓரங்கட்லாம்கிற மூட்ல முதல்வர் இருக்கறதா அறிவாலயத்துல பேசிக்கறாங்க.”
“நாடாளுமன்ற தேர்தல் மாட்டுமில்லாம அடுத்த சட்டமன்ற தேர்தல்லயும் பாஜகவோட கூட்டணி கிடையாதுன்னு எஸ்டிபிஐ நடத்தின மாநாடுல எடப்பாடி பழனிசாமி அடிச்சு சொல்லி இருக்காரே?”
“சிறுபான்மை சமுதாய அமைப்பினர் சிலர் திமுக மேல வருத்தத்தில் இருக்காங்க. நாடாளுமன்ற தேர்தல்ல அவாங்களோட ஆதரவை பெறுவதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமி இப்படி சொல்லி இருக்கார்.”
”அவங்க ஆதரவு கிடைக்குமா?”
“கஷ்டம்தான். அவங்களோட முழு நம்பிக்கை இன்னும் அதிமுக மேல வரல. தமிழ்நாட்டுக்கு வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக கூட்டு பத்தின கேள்விக்கு எதுவும் நடக்கலாம்கிற மாதிரி பதில் சொல்லியிருக்கிறார். இதெல்லாம் அதிமுக மேல சந்தேகத்தை வர வைக்குது”
“கூட்டணி வைக்கலனா பாஜக சும்மா இருக்குமா?”
“நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜகவோட பார்வை எடப்பாடியை நோக்கி திரும்பும்னு ஒரு பேச்சு இருக்கு. அதிமுகவை உடைக்கும் முயற்சிகள் தொடங்கும்னு கமலாலய பிரமுகர்கள் சொல்றாங்க. இந்த விஷயம் எடப்பாடி காதுக்கும் போயிருக்கு. அதைக் கேட்டு அவர் பயப்படலை. மாறா, ‘இதெல்லாம் நடக்கும்னுது நான் எதிர்பார்த்ததுதான். எதுவானாலும் வரட்டும் பார்த்துக்கலாம்’னு சொல்லி இருக்கார்”
“அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசு கொடுக்கப்படும்னு முதல்வர் ஸ்டாலின் அறிவிச்சிருக்காரே?”
“இந்த விஷயத்துல நிறைய குழப்பம் நடந்திருக்கு. தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு பற்றிய அறிவிப்பில் முதல்ல ரூ.1,000 பரிசுப் பணம் பத்தின அறிவிப்பு ஏதும் இல்லாம இருந்த்து. இது மூத்த அமைச்சர்களை சங்கடப்படுத்திடுச்சு. இது தொடர்பா நிதித்துறை செயலாளருக்கு பிரஷர் போயிருக்கு. அவர் உடனே முதல்வர்கிட்ட போய், ‘கடும் நிதி நெருக்கடியில் நாம் தற்சமயம் இருக்கிறோம். ஏற்கனவே 7 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணமா 6,000 ரூபாய் கொடுத்திருக்கோம். இது தவிர மகளிர் உரிமைத் தொகை, அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்னு நீங்க செலவுகளை இழுத்துக்கிட்டே போறீங்க. ஆனால் வருமானத்திற்கு எந்த வழியும் இல்லை. பஸ் கட்டணத்தை உயர்த்தக் கூடாது, மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது, வீட்டு வரி, பத்திரப் பதிவு கட்டணம்னு எதையும் உயர்த்தக் கூடாதுன்னு சொல்றீங்க. அப்படி செஞ்சுட்டு பொங்கல் பரிசா பணமும் கொடுக்கணும்னா எப்படி?’ன்னு கேட்டிருக்கார். பிறகு முதல்வர் அவர்கிட்ட பேசி கொஞ்சம் பேருக்கு மட்டும் 1,000 ரூபாய் கிடைக்கும்படி செஞ்சிருக்கார். ஆனா இதுல பல பேர் விடுபட்டு போக, அவங்க மத்தியில ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்திருக்கு. அதனால திரும்பவும் முதல்வர் இந்த பிரச்சினையில தலையிட்டு எல்லாருக்கும் 1,000 ரூபாய் கிடைக்க வழி செஞ்சிருக்கார்.”
“இலகா இல்லாத அமைச்சரா செந்தில்பாலாஜி தொடரலாம்னு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருக்கே?”
“ஆமாம் அமைச்சர்களை நீக்கம் பண்றதும், புதுசா சேர்க்கறதும் முதல்வரோட, அமைச்சரவையோட முடிவு, இதை ஆளுநர் ஏற்றுதான் ஆகணும்னு உச்ச நீதிமன்ற தீர்ப்புல சொல்லியிருக்கு. ஏற்கெனவே மசோதாக்கள் விஷயத்தில் தேவையற்ற தாமதம் செய்யறதா நீதிமன்றம் ஆளுநரை விமர்சனம் செஞ்சிருக்கு. அந்த வகையில இது ஆளுநருக்கு இரண்டாவது குட்டு. அடுத்ததா செந்தில்பாலாஜியோட ஜாமீன் மனுவும் விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட இருக்கு. அமலாக்கத் துறை செந்தில் பாலாஜி விவகாரத்தில் முழுமையாக விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கை இன்னும் தயார் செய்யவில்லைங்கிறதால இதிலயும் அவருக்கு சாதகமான தீர்ப்பு வரலாம்னு பேசிக்கறாங்க. மொத்தத்துல இந்த புத்தாண்டு செந்தில்பாலாஜிக்கு நல்லபடியா தொடங்கும்னு சொல்லலாம்.”