காந்தியடிகளின் நினைவு நாள் அதிகம் கவனிக்கப்படாமல், அரசியல்
கனவான்களின் கண்களில் லேசாகப்பட்டு வந்து போனது! கர்ணன் படத்தில் கடைசி
காட்சியில் அந்த மாவீரன் வீழ்ந்து கிடப்பான். தர்ம தேவதை கதறுவாள்.
சத்தியத்தை தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த காந்தி, ரத்தம் சிந்த பூமியில்
சாய்ந்தபோது சத்திய தேவதை அழுதிருக்க மாட்டாளா? முதலும் கடைசியுமான அவளது
ஒரே வாரிசு அல்லவா?
ரூபாய் நோட்டில் அது செல்லும் என்கிற அரசு அளிக்கும் சத்தியப்பிரமாணம் இருக்கும்.
ஆகவே அதில் மகாத்மாவின் படம் அன்றி வேறு யார் படம் இருக்க முடியும்?
சத்தியம் தவிர, கொள்கையில் உறுதி, அதற்கான வழியாக அகிம்சை.
உண்ணாவிரதம் , பாதயாத்திரை இவை அவரது வழி.
பொழுதெல்லாம் நம் செல்வங்கள் வெள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டன.
உப்பையும் கொண்டு போனார்கள். வடக்கே உணவுக்கு உப்பு இல்லாமல் ஏழை மக்கள்
உயிரிழந்த சோகம் திடுக்கிடச் செய்யும்.
காந்தி உப்பு உரிமைக்காக தண்டி யாத்திரையாக நடந்தார். பின்னர் தீண்டாமையை
ஒழிக்க நடந்தார். நவகாளியில் மதக் கலவர பூமியில் நடந்தார். காந்தியின் அந்த
பாதயாத்திரைகள் ஏற்படுத்திய மனமாற்றங்கள் எத்தனை!
மகாத்மாவை “காந்தியார்” என்று அறிஞர் அண்ணா அழைத்தபோது முகம்
சுழித்தவர் உண்டு. காந்தி – “யார்” என்பதைப் பற்றி அண்ணா ஒரு சொற்பொழிவு
நிகழ்த்தினார். 1957-ல் காஞ்சிபுரத்தில் காந்தியின் சிலையை நகராட்சி சார்பில் அண்ணா
திறந்து வைத்தார். வெளியே அவர் சிலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து
காங்கிரஸ்காரர்கள் முழக்கமிட்டவாறு இருந்தனர்.
காந்தி தனது போராட்டம் அணைந்து போகாமல், நிராகரிக்கப்படாமல் படிப்படியாக
மக்களிடம் எவ்வாறு கொண்டு போனார், போராட்டங்களில் மக்களை கொஞ்சமும்
அச்சமின்றி எவ்வாறு பங்கு பெற வைத்தார் என்பதை அண்ணா விவரித்தார். அவர் பேச்சை
முடித்ததும் எதிர்த்தவர்கள் ஓடி வந்து மாலை அணிவித்தார்கள்.
காந்தியின் பாதயாத்திரை உடற்பயிற்சிக்காக நடந்தது அல்ல என்றார் அண்ணா.
புதியதோர் லட்சியப்பாதையை பாதயாத்திரை அமைத்துக் கொடுத்தது. உலகெங்கும்
அப்படிப்பட்ட வெற்றிகரமான பாதயாத்திரை வரலாறு உண்டு. ஞானிகள் எல்லாம்
நடந்திருக்கிறார்களே? கிட்டத்தட்ட 100 வயதில் ஸ்ரீரங்கபட்டணத்திலிருந்து
ராமானுஜர் நம் ஸ்ரீரங்கத்திற்கு நடந்தே வந்தார். காஞ்சி மகா பெரியவர் முதிய வயதில்
இந்தியா முழுவதும் நடந்தே போனார்.
இப்போது ராகுல் காந்தி பாதயாத்திரை! அவர் பயணம் முற்றுப் பெற்றபோது
மனமுதிர்ச்சிக்கு அடையாளமான “தாடி”! அவர் சிந்தனையில் மாறுதல் ஏற்படாமல் இருக்காது.
ராகுல் காந்திக்கு என்ன விதமான மனபுரட்சி ஏற்பட்டிருக்கும்? பார்க்க
வேண்டும் இனி!
பாதயாத்திரைகளை விளையாட்டாக துவக்கினால் கூட, நடக்க நடக்க மனம்
மாறத்தான் செய்யும். பாதயாத்திரை பலவகையான “ஊர் காற்றுகளை” சுவாசிக்க
வைக்கிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை போகப் போக்கிறார்.
தமிழகம் சந்திக்கிற புதுமையான, துடிப்பான அரசியல் தலைவர் அவர்.