காங்கிரசுக்கு மீண்டும் ஒரு தலைவலி.
ராகுல் காந்தி நாடெங்கும் நடைபயணம் மேற்கொண்டு கட்சிக்கு ஆதரவுத் தேடிக் கொண்டிருக்கும் நிலையில் கட்சிக்குள்ளிருந்தே காங்கிரசுக்கு ஒரு பெரிய தலைவலி வந்திருக்கிறது.
அந்தத் தலைவலியின் பெயர் அஷோக் கெலாட். ராஜஸ்தான் மாநில முதல்வராக இருக்கிறார்.
நேரு குடும்பத்தின் விசுவாசி. சோனியா காந்தி சொல்வதை கேட்டு நடப்பவர் என்றெல்லாம் அஷோக் கெலாட்டுக்கு பிம்பங்கள் இருந்தாலும் இந்த முறையும் தலைமையின் பேச்சைக் கேட்காமல் அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் இருக்கிறது. அக்டோபரில் தலைவர் தேர்தல் நடக்க உள்ளது. யாரெல்லாம் போட்டியிடுவார்கள் என்ற சிக்கல் தீர்ந்து அஷோக் கெலாட்டும் சசி தரூரும் போட்டியிடுவார்கள். இவர்களில் கெலாட் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற அளவுக்கு செய்திகள் வெளியான நிலையில் அஷோக் கெலாட் தலைமைக்கே மறைமுகமாக பயம் காட்டிக் கொண்டிருக்கிறார்.
அஷோக் கெலாட்டுக்கு இரட்டை ஆசை. ராஜஸ்தான் முதல்வராகவும் இருக்க வேண்டும், காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருக்க வேண்டும். ஆனால், ராகுல் காந்தி திட்டம்பட்டி கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவிதான். அஷோக் கெலாட் ஏதாவது ஒரு பதவியில்தான் இருக்க முடியும். சோனியா, ராகுலிடம் பேசிப் பார்த்தார் கெலாட். ஆனால், அவர்கள் ஒரு பதவி என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
அஷோக் கெலாட்டுக்கு ராஜஸ்தான் காங்கிரசில் தன் பலத்தை இழக்க விரும்பவில்லை. அவர் முதல்வர் பகவியிலிருந்து விலகினால் அந்த இடத்துக்கு சச்சின் பைலட்டை கொண்டுவர ராகுலும் பிரியங்காவும் முடிவு செய்திருக்கிறார்கள். சச்சின் பைலட் முதல்வரானால் ராஜஸ்தான் காங்கிரஸ் தன் கையைவிட்டு விலகிவிடும் என்பது கெலாட்டுக்குத் தெரியும். அதனால் தனது ஆதரவாள எம்.எல்.ஏ.க்கள் மூலம் காங்கிரஸ் தலைமைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்.
ராஜஸ்தான் சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 108பேர் இருக்கிறார்கள். அவர்களில் சுமார் 80 பேர் அஷோக் கெலாட்தான் முதல்வராக நீடிக்க வேண்டும், சச்சின் பைலட் தலைமையை ஏற்க மாட்டோம் என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.
இதை காங்கிரஸ் தலைமை எதிர்பார்க்கவில்லை. காங்கிரசுக்கு அஷோக் கெலாட்டும் வேண்டும். சச்சின் பைலட்டும் வேண்டும். ராஜஸ்தான் ஆட்சியும் வேண்டும்.
அஷோக் கெலாட்டை ராஜஸ்தான் முதல்வராகவே இருங்கள், தேசிய அரசியலுக்கு வேண்டாம் என்று கூறலாம். காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கு வேறு யாரையாவது தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால், இப்படி செய்தால் சச்சின் பைலட் கோபித்துக் கொள்வார். அவர் ஏற்கனவே அஷோக் கெலாட்டுக்கு எதிராக ஆட்சியைக் கவிழ்க்க முற்பட்டவர். சோனியாவும் ராகுலும் கேட்டுக் கொண்டதற்காக காங்கிரசின் நீடித்துக் கொண்டிருப்பவர். இந்த முறையும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் அவர் காங்கிரசை விட்டு வெளியேறலாம். ராகுல் விரும்பும் இளம் ரத்தம் காங்கிரசுக்கு கிடைக்காது. இன்னும் ஒரு வருடத்தில் ராஜஸ்தானில் தேர்தல் நடக்க உள்ளது.
அஷோக் கெலாட்டை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி காங்கிரஸ் தலைவராக்க அழுத்தம் கொடுக்கலாம். ஆனால், கெலாட் கேட்டுக்கொள்வாரா என்பது சந்தேகம். அவருடைய ஆதரவாளரை முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் கெலாட். ஆனால், அப்படி செய்தால் சச்சின் பைலட் கோபித்துக் கொள்வார்.
கெலாட்டை மீறி சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்வராக்கலாம். ஆனால், அதற்கு ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒத்துழைக்க வேண்டும். சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயன்றவர் என்ற கெட்டப் பெயர் உண்டு. அதை எம்.எல்.ஏ.க்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இப்படி இடியாப்ப சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்.
ஏற்கனவே பஞ்சாபில் உள்கட்சி பிரச்சினையை சரியாக கையாளாததால் காங்கிரசிலிருந்து அமரீந்தர் சிங் வெளியேறினார். சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்று ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது.
ஒவ்வொரு மாநிலத்திலும் சூழலை சரியாக புரிந்துக்கொண்டு அதற்கேற்றவாறு நடவடிக்கைகள் எடுக்காததன் விளைவுதான் இன்று காங்கிரஸ் நாடெங்கிலும் பலவீனமாக இருக்கிறது.
ஷரத் பவார், மமதா பானர்ஜி, ஜகன் மோகன் ரெட்டி, அமரீந்தர் சிங், குலாம் நபி ஆசாத் என்று காங்கிரசின் பலம் வாய்ந்த தலைவர்கள் காங்கிரசிலிருந்து விலகுவது தொடர்கதையாக இருக்கிறது. அந்தப் பட்டியலில் அஷோக் கெலாட் அல்லது சச்சின் பைலட் சேர்ந்தால் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் தன் பலத்தை இழக்கும்.
இந்திராகாந்தி காலத்தில் மாநிலத் தலைவர்களை தன் கட்டுக்குள் வைத்திருந்தார். தன் கட்டுப்பாட்டில் இருக்க விரும்பாத தலைவர்களை ஓரம் கட்டவும் அவர் தயங்கியதில்லை. ஆனால், அத்தனை மாநிலத் தலைவர்களின் பலத்தையும் ஈடு செய்யும் அளவுக்கு அவரிடம் செல்வாக்கு இருந்தது. புகழ் இருந்தது. ஆனால், இன்று இந்திராவின் செல்வாக்கோ பலமோ சோனியாவிடமும் ராகுலிடமும் கிடையாது. கவனமாய்தான் முடிவுகளை எடுக்க வேண்டும்.