‘போன வாரம் க்ளைமெட் நல்லா இருந்ததால வெயில் காலம் முடிஞ்சுடுச்சுன்னு நினைச்சேன். ஆனா இப்ப திரும்பவும் வெயில் மண்டைய பொளக்குது. வெளிய தலகாட்டவே முடியல” என்று புலம்பிக்கொண்டே ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
வெயிலுக்கு இதமாக ஒரு கிளாஸ் இளநீர் சர்பத்தை எடுத்து நீட்டினோம். அதைக் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டபின் பேச்சைத் தொடர்ந்தாள்…
“ஜெயலலிதா பத்தி அண்ணாமலை பேசினதுக்கு மோடிதான் காரணம்னு கமலாலயத்துல பேசிக்கறாங்க.
“மோடிதான் அண்ணாமலைகிட்ட அப்படி பேசச் சொன்னாராமா?”
“அப்படி இல்லை. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஆலோசகரா இருக்கற வி.கே.பாண்டியன் பற்றி பிரதமர் பேசினதைக் கண்டிச்சு தமிழகத்துல இருக்கிற எல்லா தலைவர்களும் விமர்சனம் செய்யத் தொடங்கிட்டாங்க. இந்த நேரத்துல மக்கள் மத்தியில இருந்து அந்த பிரச்சினையை திசை திருப்ப ஜெயலலிதா இந்துத்துவா தலைவர்னு அண்ணாமலை புதுப் பிரச்சினையை எடுத்திருக்கறதா கமலாலயத்துல சொல்றாங்க.”
“சசிகலா தினகரன், ஓபிஎஸ் தரப்புல இருந்து இந்த பேச்சுக்கு என்ன ரியாக்ஷன்.”
“அண்ணாமலை அப்படி ஒண்ணும் தப்பா பேசினதா நினைக்கலைன்னு தினகரன் பிரஸ் மீட்ல சொல்லி இருக்கார். வெளிய அப்படி சொன்னாலும், அண்ணாமலையோட பேச்சை தினகரன் ரசிக்கலைன்னு அவருக்கு நெருக்கமானவங்க சொல்றாங்க. இதுபத்தி டெல்லி தலைவர்கள்கிட்ட பேசின தினகரன், அண்ணாமலையை கொஞ்சம் தட்டிவைக்க சொல்லி இருக்கார். சசிகலாவும் இந்த கருத்தை ரசிக்கல.”
“ஓபிஎஸ்?”
“அவரைப் பொறுத்தவரைக்கும் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிறகு பாஜககிட்ட இருந்து விலகியே இருக்கார். ஓட்டு எண்ணிக்கைக்கு ஓபிஎஸ் கொடுத்த முகவர்கள் பட்டியல்ல பாஜக நிர்வாகிகள் பெயர் இல்லை. இது பற்றி ஓபிஎஸ்கிட்ட அவங்க கேட்டிருக்காங்க. அதுக்கு, ‘இப்ப உங்க சேவை எனக்கு தேவையில்லை பிறகு பார்க்கலாம்’ன்னு போல்டா சொல்லி அனுப்பிட்டாராம்.”
“ஓபிஎஸ்க்கு அவ்வளவு தைரியம் வந்துடுச்சா?”
“தைரியமெல்லாம் ஒண்ணுமில்லை. விரக்திதான் காரணம். ஓபிஎஸ்கிட்ட இருந்த கு.ப.கிருஷ்ணன், இப்ப அவரை விட்டு விலகி நிக்கறார். தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு இன்னும் பல நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை விட்டு போகப் போறதா சொல்றாங்க. அதனால இனி என்ன நடந்தாலும் கவலை இல்லைங்கற மனநிலைக்கு அவர் வந்துட்டாராம்.”
“எடப்பாடி மாதிரியே அவரும் தேர்தலுக்கு பிறகு என்ன நடக்குமோன்னு பயப்படுறாரா?”
“எடப்பாடிக்கு இப்ப அந்த பயமெல்லாம் போயிடுச்சாம். அவரைப் பொறுத்தவரை பாஜக திரும்பவும் மத்தியில ஆட்சிக்கு வராதுன்னு நம்பறார். அப்படியே வந்தாலும், சசிகலாவை சமாளிச்ச தன்னால பாஜகவை நிச்சயமா சந்திக்க முடியும்னு நினைக்கறார்.”
“தேர்தலுக்கு பிறகு ஆளுநர் ரவி திரும்பவும் தலைகாட்ட ஆரம்பிச்சுட்டாரே.. துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தி இருக்காரே? திருவள்ளுவருக்குகூட மாலை போட்டு வந்திருக்காரே?”
“அவரோட ஆட்டமெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ல அடங்கிடும்னு ராஜ்பவன்லயே பேசிக்கறாங்க.”
“எதனால அவங்க அப்படி பேசறாங்க?”
“மயிலாப்பூர் திருவள்ளூர் கோயிலுக்கு எந்த அரசியல் தலைவரும் போக மாட்டாங்க. அப்படியே போக வேண்டிய நிலை வந்தாலும், உள்ளே போகாம வாசல்ல இருந்து ஒரு பெரிய கும்பிடு போட்டுட்டு நகர்ந்துடுவாங்க. எந்த அரசியல் தலைவராவது அந்த கோயிலுக்கு உள்ளே போனா அரசியல் ரீதியாக அவருக்கு பிரச்சினை வரும் அல்லது அவங்க பதவி போகும்கிற ஒரு சென்டிமென்ட் பயம்தான் இதுக்கு காரணம். ஆனால் ஆளுநர் சமீபத்துல அந்த கோயிலுக்குள்ள போய் மாலை மரியாதை எல்லாம் வாங்கியிருக்கார். அதனால 4-ம் தேதிக்கு பிறகு அவர் பதவி என்ன ஆகுமோங்கிற பேச்சு ராஜ்பவன்லயே வரத் தொடங்கி இருக்கு”
“காவல் துறைக்கும், போக்குவரத்து துறைக்கும் நடுவுல இருந்த பிரச்சினை தீர்ந்துடுச்சே?”
“இந்த விஷயத்தில் 2 துறைகளும் தன்னிச்சையா முடிவெடுத்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டின சம்பவம் முதல்வருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கு. 2 துறை செயலாளர்களையும் உடனே அழைச்சு பேசி இருக்கார். ‘இப்படி தன்னிச்சையா நடந்துக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்த்து? இந்த பிரச்சினைக்கு முடிவு காணுங்கள்’ன்னு அவங்களை எச்சரிச்சு அனுப்பி இருக்கார். இதைத் தொடர்ந்து 2 துறை செயலாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பேசி முடிவு செய்த பிறகு சம்பந்தப்பட்ட காவலர் சம்பந்தப்பட்ட ஓட்டுநரை கட்டிப்பிடி வைத்தியம் மூலம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வச்சாங்களாம்.”
“இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் பதவிக்கு மோடி விண்ணப்பிச்சு இருக்கறதா செய்தி வந்ததே?”
“மோடி மட்டுமில்லை… சச்சின், ஷாரூக்கான்னு பல பிரபலங்கள் விண்ணப்பிச்சு இருக்கறதாவும் செய்தி பரவிச்சு. ஆனா அதெல்லாம் உண்மையில்லை. ஆன்லைன்ல இவங்க பேர்ல பலர் போலியா விண்ணப்பிச்சு இருக்காங்க. அதுதான் செய்தியா வந்துச்சு.”