’அர்ஜூன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, பாலிவுட்டில் ரன்பீர் கபூரையும், ராஷ்மிகா மந்தானாவையும் வைத்து இயக்கிய ‘அனிமல்’ இப்போது வெளியாகி வசூலை அள்ளிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தில் ராஷ்மிகா மந்தானாவுக்கு லிப் – லாக் காட்சிகள், உள்ளாடையுடன் ரன்பீருடன் நடித்திருக்கும் காட்சி என ஏராளமான அதிர்ச்சிகரமான காட்சிகளுடன், நடிப்புக்குத் தீனிப் போடும் காட்சிகளும் அதிகமிருக்கிறது.
இதைப் பார்த்து ராஷ்மிகாவுக்கு நடிக்கவும் தெரியும் என நெட்டிசன்கள் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் புஷ்பா பட இயக்குநர் சுகுமார் இப்போது தனது ’புஷ்பா 2’ பட த்தில் ராஷ்மிகாவுக்கு எழுதப்பட்ட காட்சிகளில் டிங்கரிங் வேலைகளை ஆரம்பித்து இருக்கிறாராம்.
‘புஷ்பா 2’ படத்தில் அல்லு அர்ஜூனுக்கும் ராஷ்மிகாவுக்கும் திருமணமான பின்பு நடக்கும் கதை என்பதால், இப்போது அவருடைய கதாபாத்திரம் மெருகேற்றும் வேலைகள் நடக்கிறதாம். இதற்கு ஹீரோ அல்லு அர்ஜூனும் சம்மதம் தெரிவித்து இருக்கிறாராம்.
ராஷ்மிகா மந்தானா இன்னும் சில தினங்களில் அல்லு அர்ஜூனுடன் ஷூட்டிங்கில் இணைய இருப்பதால், ஷூட்டிங் ஒருபக்கம் நடைபெற்றாலும், மறுபக்கம் டிங்கரிங் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன என்கிறது ’புஷ்பா’ படக்குழு
’கருப்பர் நகரம்’ – சர்ச்சைக்குள்ளான ’அறம்’ கோபி
நயன்தாராவை வைத்து ‘அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினாரைச் சுற்றி மீண்டும் சர்ச்சைகள் சுழல ஆரம்பித்திருக்கின்றன.
20217-ல் ‘அறம்’ படம் வெளியானது. இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைத்த நிலையில், கோபி நயினாரை வைத்து படம் தயாரிக்கும் வேலைகளில் இறங்கினார் இயக்குநர் வெற்றிமாறன். ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, ‘மனுஷி’ என்ற படத்தை எடுத்தார்கள். ஆனால் அந்தப்படம் என்னவாயிற்று என்று இதுவரை தெரியவில்லை.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த கோபி நயினார், தான் முன்பு எடுத்து வெளியாகாமல் இருந்த ‘கருப்பர் நகரம்’ படத்தை கையிலெடுத்தார். இந்தப் படத்தில் ஜெய்., ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்ரவர்த்தி ஆகியோர் நடித்திருந்தார்கள்.
வெளியாகாமல் இருந்த பழைய படத்தை மீண்டும் வெளியிட கோபி முயன்றதால், அப்பட நாயகன் ஜெய் கோபி நயினாருக்கு ஆதரவுக்கரம் நீட்டினாராம். இதனால் சுறுசுறுப்பாக அந்தப்படத்தை வெளியிடும் வேலைகள் தொடங்கியதாம்.
ஆனால் இப்போது ‘கருப்பர் நகரம்’ வெளியாவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, கோபி நயினார் அப்படத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது.
கோபி நயினாருக்கு கைக்கொடுத்த ஜெய்க்கும் அவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இப்போது வேறு வழியில்லாமல் கோபி நயினார் எனக்கும் இந்தப் படத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என எழுதிக்கொடுத்துவிட்டாராம். ஃபெப்சி மற்றும் தயாரிப்பாளர்கள் கவுன்சில் நிர்வாகிகள் முன்னிலையில் இந்த கையொப்பம் போடப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.
கோபி நயினாருக்கும் ஜெய்க்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது இப்போதுதான் என்றாலும், அப்படத்தயாரிப்பாளருடன் ஆரம்பத்திலேயே மோதல் ஏற்பட்டுவிட்டதாம்.
இதற்கு காரணம் கோபி நயினார் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் கே.எஸ். பிரசாத் என்று கோபி தரப்பில் கூறப்படுகிறது. தனக்கு தெரிந்தவர் என்பதால் பிரசாத்தை தயாரிப்பாளரிடம் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இப்போது இந்த பிரசாத் ஜெய்யுடன் சேர்ந்து கருப்பர் நகரம் படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கியிருக்கிறாராம்.