சென்னையில் 2020-ல் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பின் தலைவராக இருந்த டாக்டர் சுப்பையா சண்முகம் தன் பக்கத்து ஃபளாட் பெண்மணி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தார். சிசிடிவியில் பதிவான அந்த காட்சிகள் சோஷியல் மீடியாவில் பதிவாகி பரபரப்பை கிளப்பியது. அந்த டாக்டர் மீது வழக்கு பதியப்பட்டு கடந்த வருடம் கைதும் செய்யப்பட்டார்.
அதே போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது, தரையில் அல்ல வானில்.
நியூயார்க்கிலிருந்து டெல்லி வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விகாரம் விவகாரமாகியிருக்கிறது.
நவம்பர் 26-ம் தேதி அந்த விமானம் டெல்லி நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது. வசதி மிக்கவர்கள் பயணிக்கும் பிசினஸ் கிளாஸ் பகுதியில் 35 வயது மனிதர் ஒருவர் 70 வயது மூதாட்டியின் மீது சிறுநீர் கழித்திருக்கிறார். அவர் கத்திக் கூச்சலிட்டு விமானம் முழுவதும் பரபரப்பாகியிருக்கிறது. விமான ஊழியர்கள் ஓடி வந்து அட்டூழியம் செய்த நபரை அடக்கி அவரது சீட்டில் அமர வைத்திருக்கிறார்கள். மனிதர் முழு போதையில் இருந்திருக்கிறார்.
மூதாட்டிக்கு அதிர்ச்சி. அவரது உடைகளையும் காலணிகளையும் சுத்தப்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் ஊழியர்கள்.
போதை தெளிந்த ஆசாமி அந்த மூதாட்டியிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். தனக்கு மனைவி மகள் இருப்பதாக புலம்பியிருக்கிறார். தான் செய்த செயலுக்கு பணம் தருவதாக அந்த மூதாட்டிக்கு பணம் கொடுத்திருக்கிறார். அது திருப்பி கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரது மன்னிப்புக்கு, புலம்பலுக்கு, பணத்துக்கு மூதாட்டி இணங்கவில்லை புகார் கொடுக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார்.
விமானம் தரையிறங்கியதும் அந்த நபர் மீது விமான நிறுவனம் புகார் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த சம்பவத்தை மூடி மறைத்திருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம். வெளியில் எந்த செய்தியும் வரவில்லை.
அந்த 70 வயது மூதாட்டி ஏர் இந்தியா தலைவர் சந்திரசேகரனுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தை அந்தக் கடிதத்தில் விளக்கியிருந்தார்.
வானில் விமானத்தில் நவம்பர் இறுதியில் நடந்த இந்த சம்பவம் இந்த வருடம் ஜனவரி மாதம்தான் பொதுவெளிக்கு வந்தது. உடனே அந்தப் பயணிக்கு தங்கள் விமானங்களில் பயணிக்க 30 நாள் தடை விதித்து உத்தரவிடுகிறது ஏர் இந்தியா.
டெல்லி காவல் துறையில் புகார் கொடுக்கப்படுகிறது. அந்த நபர் மும்பையை சேர்ந்த ஷங்கர் மிஸ்ரா என்று கண்டுபிடிக்கிறார்கள். 35 வயது. திருமணமாகி மகள் இருக்கிறாள். மிஸ்ரா பெங்களூருவில் ஒளிந்து இருப்பதையும் காவல்துறையினர் அறிகிறார்கள். தேடிப் பிடித்து இன்று காலையில் கைது செய்துவிட்டார்கள். அவர் Wells Fargo என்ற சர்வதேச நிறுவனத்தில் துணைத் தலைவராக பணிபுரிந்து வந்திருக்கிறார். அவரை பணி நீக்கம் செய்கிறது அந்த நிறுவனம்.
நவம்பர் 26-ம் தேதி நடந்த ஒரு அசிங்கத்துக்கு ஒரு மாதம் கழித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல இந்த சம்பவத்தில் வேறு சில அம்சங்களையும் கவனிக்க வேண்டும்.
கீழ்தட்டு மக்கள்தாம் குடித்துவிட்டு கலாட்டா செய்வார்கள், அவர்கள்தாம் அசிங்கமாக நடந்துக் கொள்வார்கள் என்ற பொது பிம்பம் இருக்கிறது. ஆனால் அப்படியல்ல, சென்னையில் ஒரு பெரிய மருத்துவர் ஒரு பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழிக்கிறார். சர்வதேச நிறுவனத்தில் துணைத் தலைவராக இருப்பவர் விமானத்தில் முதியப் பெண் மீது சிறுநீர் கழிக்கிறார். இவர்கள் படித்தவர்கள், வசதியானவர்கள் முக்கியமாய் பண்பானவர்கள் என்ற பிம்பத்தை உடையவர்கள்.
தனியே இந்தியா திரும்பிக் கொண்டிருக்கும் ஒரு முதியப் பெண்மணிக்கு ஒரு மோசமான அனுபவம் நடக்கிறது. அதன் மீது நடவடிக்கை எடுக்க ஒரு மாதம் ஆகிறது. விமான நிறுவனம் அதை மூடி மறைக்க முயல்கிறது. சென்னையில் நடந்த மருத்துவர் சுப்பையா விவகாரத்திலும் பல மாதங்கள் கழித்துதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும்.
விமானத்தில் மதுபானங்கள் வழங்கக் கூடாது என்று இப்போது குரல்கள் எழுந்துள்ளன. வழங்கப்படும் மதுபானங்களின் அளவைக் குறைக்க வேண்டும் என்றும் யோசனைகள் கூறப்படுகின்றன. இந்த யோசனைகள் எந்த அளவு ஏற்கப்படும் என்று தெரியவில்லை.
விமானம் என்பது பாதுகாப்பு மிக்க ஒரு இடம். விமானத்துக்குள் எந்த சிக்கல் இல்லை என்பதுதான் பொதுவான பிம்பம் அதுவும் உடைபட்டிருக்கிறது. இதற்கும் தீர்வுகள் காணப்பட வேண்டும்.
பார்ப்போம் இந்த வழக்கு எந்த திசையில் செல்கிறது என்று.