No menu items!

அதிமுக ஸ்கோர்: இபிஎஸ் 1 – ஓபிஎஸ் 0

அதிமுக ஸ்கோர்: இபிஎஸ் 1 – ஓபிஎஸ் 0

அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒற்றைத் தலைமையை நோக்கி எடப்பாடி பழனிசாமி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். தடுக்க இயலாமல் ஓ.பன்னீர்செல்வம் தவித்துக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய அதிமுகவின் நிலை.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்பு மனுத் தாக்கல் செய்த நிகழ்வுக்கு ஓபிஎஸ் சென்றிருந்தார். அங்கு பிரதமரையும் முக்கிய பாஜக நிர்வாகிகளையும் சந்தித்து விடலாம் என்ற எண்ணத்துடன் பொதுக்குழுவில் ஏற்பட்ட மன வருத்தத்துடன் டெல்லிக்கு விமானம் ஏறியிருந்தார். ஆனால் அங்கு அவரால் பிரதமரை சந்திக்க இயலவில்லை. ஜி7 மாநாட்டுக்காக ஜெர்மனி செல்லும் பரபரப்பில் பிரதமர் இருக்கிறார் என்ற தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் சந்திக்கவில்லை என்று தெரிந்ததும் மற்ற பாஜக தலைவர்களும் ஓபிஎஸ்ஸுடன் பேச ஆர்வம் காட்டவில்லை என்றே டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓபிஎஸ்க்கு டெல்லி ஆதரவு இப்போது இல்லை என்று தெரிந்ததும் எடப்பாடி பழனிசாமி தனது காய் நகர்த்தல்களில் வேகம் காட்டினார். நமது அம்மா நாளிதழின் நிறுவனர் என்ற பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தூக்கப்பட்டார்.

ஓபிஎஸ்ஸை ஆர்.பி.உதயகுமார் சரமாரியாக தாக்கி பேட்டியளித்தார். ‘அதிமுகவை அடகு வைத்தவர், ஓபிஎஸ்க்கு மன உறுதி இல்லை, ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கேட்பதில் சட்ட விரோதம் இல்லை, எடப்பாடியார் வெற்றிப் பெற்று கழகத் தொண்டர்களின் கவுரவத்தை மீட்டெடுப்பார்” என்று ஆவேசமாக பேட்டியளித்தார். இந்தப் பேட்டிக்கு பின்னணியில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

ஆர்.பி.உதயகுமாரைத் தொடர்ந்து இன்று ஜெயக்குமாரும் ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இவர்கள் மட்டுமில்லாமல் பொள்ளாச்சி ஜெயராமன், செல்லூர் ராஜு போன்றோரும் ஓபிஎஸ்க்கு எதிர் நிலையில் இருக்கிறார்கள். இவர்களில் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் ஓபிஎஸ் வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.
இப்படி கடும்விமர்சனங்களுக்கு பதிலடி தர ஓபிஎஸ் தரப்பில் யாருமில்லை.

ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ‘நமது அம்மா’ வைத்திருக்கும் பெயர் கழகத்தை பிளவுப்படுத்த முயலும் கும்பல். எந்த நமது அம்மாவில் நிறுவனர் என்ற அந்தஸ்த்தில் இருந்தாரோ அந்த நாளிதழில் கும்பல் என்ற அடைமொழியில் அழைக்கப்படுகிறார் ஓபிஎஸ்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், ’எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது உயிரினும் மேலான தொண்டர்கள் என் பக்கமே இருக்கின்றனர். நான் அவர்களுக்காகவே இருப்பேன். இன்றைக்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் யாரால், எப்படி ஏற்பட்டது, எவரால் இந்த சதி வலை பின்னப்பட்டது என்பது எனக்கு தெரியும். அவர்களுக்கு மக்களே விரைவில் நல்ல தீர்ப்பு வழங்குவர். அவர்கள் செய்த தவறுக்கு தொண்டர்கள் உரிய பாடத்தையும், தண்டனையும் உறுதியாக வழங்குவர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இதயத்தில் இருந்து என்னை யாராலும் நீக்க முடியாது. 2002-ல் தமிழக முதல்வராக அவர் பதவி ஏற்கும் முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பன்னீர்செல்வம் போன்ற ஒரு தூய தொண்டனை பெற்றது எனது பாக்கியம் என சான்றிதழ் கொடுத்தார். இதைத்தவிர வேறு சான்றிதழ் எனக்குத் தேவையில்லை. எனது எதிர்காலத்தை அதிமுக தொண்டர்களும், மக்களும் நிர்ணயிப்பார்கள். ‘நமது அம்மா’ நாளிதழில் ஆரம்பத்தில் எனது பெயரை சேர்த்ததும் தெரியாது. தற்போது நீக்கியது குறித்தும் தெரியாது” என்று அப்போது கூறினார்.

எனது எதிர்காலத்தை அதிமுக தொண்டர்களும் மக்களும் நிர்ணயிப்பார்கள் என்று ஓபிஎஸ் கூறியிருக்கிறார். ஆனால் இன்று அவருக்கு அதிமுக தொண்டர்களிடையே ஆதரவு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் இன்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 74 நிர்வாகிகள் உள்ள அதிமுக தலைமைக் கழக குழுவில் இன்று 65 பேர் எடப்பாடியின் ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்திருக்கிறார்கள். 4 பேர் வர இயலவில்லை என்று கடிதம் கொடுத்திருக்கிறார்கள். பண்ருட்டி ராமசந்திரனும் திண்டுக்கல் சீனிவாசனும் உடல்நிலை சரியில்லை என்று கூறியிருக்கிறார்கள். ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஐந்துபேர் மட்டுமே கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஓபிஎஸ்க்கு அதிமுகவில் ஆதரவில்லை என்பதை இந்தக் கூட்டம் மீண்டும் உணர்த்துகிறது.

இன்று ஒன்றரை மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சில ரகசிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக ஜெயக்குமார் கூறியிருக்கிறார். 11ஆம் தேதி நடக்க உள்ள பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ்கள் அனுப்புவது குறித்தும் பேசியதாக தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்றைய நிலையில் வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கின்றன. நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் நாடாலாம். ஆனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஓபிஎஸ் கொடுக்கும் மனுவால் இரட்டைஇலை முடக்கப்பட்டால் அந்தப் பழி ஓபிஎஸ்க்குதான் வரும். அதற்கு ஓபிஎஸ் தயாராக இருக்க வேண்டும்.

ஓபிஎஸ் மீண்டும் சசிகலாவுடன் இணையலாம். எந்தக் குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினாரோ அந்தக் குடும்பத்திடமே சரணடைவது அவரது எதிர்கால அரசியலுக்கு – அப்படி ஒன்று இருந்தால் – உதவாது.

நேற்று செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசிய ஒரு அம்சத்தை கவனித்துப் பார்க்க வேண்டும்.

‘தொண்டர்களே, சாதி, மத இனத்தை சொல்லி பேசுபவர்களுக்கு இடம் தராதீர்கள். சாதி மதம் சாராதவர்கள் கழகத்தினர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது முக்கியமான கருத்து.

அதிமுக சாதிய ரீதியாக பிளவுபட்டுள்ளது என்ற கருத்து மேலோங்கியிருக்கும் நிலையில் செல்லூர் ராஜூ இப்படி பேசியிருக்கிறார். எடப்பாடியை சாதி இனத்துக்கு அப்பாற்பட்டவராகவும் ஓபிஎஸ்ஸை சாதியப் பிடிப்புள்ளவராகவும் காட்டுவதற்கான முயற்சி.

மிக முக்கியமாக சசிகலாவுடன் ஓபிஎஸ் இணைந்தால் அது சாதிய அடிப்படையில்தான் என்ற பிம்பத்தை கட்டமைக்க இப்போதே அடித்தளம் போடுகிறார்கள் என்பதைதான் செல்லூர் ராஜூவின் பேட்டி காட்டுகிறது.

இப்படி பல வகைகளில் ஓபிஎஸ் சுற்றுப் போடப்பட்டிருக்கிறார். இந்த சுற்றுக்களை எப்படி உடைக்கப் போகிறார்? அதிமுகவில் தனது செல்வாக்கை எப்படி காப்பாற்றப் போகிறார்?

விடைகளை காலம்தான் சொல்லும்.

இன்றைய நிலையில் அதிமுகவில் நடக்கும் போட்டியில் எடப்பாடிதான் அதிக ஸ்கோர் எடுத்திருக்கிறார். ஓபிஎஸ் இன்னும் கணக்கை ஆரம்பிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...