நேற்று வரை ராஜா என்று தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட கவுதம் அதானி இன்று அடிபட்ட நரியாக நின்றுக் கொண்டிருக்கிறார்.
2022ஆம் ஆண்டு அதானிக்கு மிக சிறந்த ஆண்டாக அமைந்தது. 2022ல்தான் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரானது. ஆசியாவில் நம்பர் ஒன் பணக்காரரானது. உலக அளவில் இரண்டாவது பெரிய பணக்காரரானது.
ஆனால் இன்று அத்தனையும் மாறிவிட்டது.
உலகின் 17வது பெரிய பணக்காரராக சறுக்கியிருக்கிறார். இந்திய அளவில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
கடந்த ஆறு நாட்களில் மட்டும் அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு 64 பில்லியன் டாலர்கள் குறைந்திருக்கிறது…சுமார் ஐந்து லட்சம் கோடி. அவரது நிறுவனங்களின் சொத்து மதிப்பு 104 பில்லியன் டாலர்கள் சரிந்திருக்கிறது.
இத்தனைக்கும் காரணம் ஜனவரி 24ஆம் தேதி வெளியான அமெரிக்க முதலீடு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை. அந்த அறிக்கையில் அதானி நிறுவனத்தைக் குறித்து பல கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்தது. அது இந்திய பங்கு சந்தையில் பெரிய புயலைக் கிளப்பியது. அதானி குழுமத்தின் பங்குகள் அதல பாதாளத்தில் வீழ்ந்தன. ஜனவரி 27ல் அதானி குழுமம் வெளியிட்ட பங்கு விற்பனை திரும்பப் பெறப்பட்டது. பங்கு வர்த்தகத்தை நிர்வகிக்கும் செபி அமைப்பு (Securities and Exchange Board of India – SEBI) இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
சரி, இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் இந்த சரிவு என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும்?
கொரோனா காலத்து சரிவுகளுக்குப் பிறகு இந்திய பொருளாதாரம் இப்போதுதான் மீண்டு வருகிறது. வெளிநாட்டு முதலீடுகள் இந்திய நிறுவனங்களுக்கு கிடைத்து வருகிறது. அதானி மீதுள்ள இந்த கடுமையான குற்றச்சாட்டுக்களால் முதலீடுகள் வருவது குறையும். தயக்கம் ஏற்படும். இந்திய நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மைக்கு ஆபத்து வரும்.
அதானி நிறுவனங்களில் இந்திய பொதுத் துறை அமைப்புகள் ஏராளமான பணத்தை முதலீடு செய்திருக்கின்றன. ஸ்டேட் பேங்க் 27 ஆயிரம் கோடி ரூபாய் அதானி நிறுவனங்களுக்கு கொடுத்திருக்கிறது. எல்.ஐ.சி. சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதானி நிறுவன பங்குகளை வாங்கியிருக்கிறது. சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவில் இந்திய பொதுத் துறை நிறுவனங்களும் வங்கிகளும் அதானி நிறுவனங்களில் முதலீடுகள் செய்திருக்கின்றன. அதானி விவகாரம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து கூறும்போது, “எல்ஐசியும் எஸ்பிஐயும் தங்கள் வரம்புக்கு உட்பட்டே அதானி குழுமத்துக்கு முதலீடும் கடனும் வழங்கியுள்ளதாக கூறுகின்றன. அவற்றின் பங்கு மதிப்பு சரிந்துள்ள போதிலும், அவை இன்னும் லாபம் ஈட்டக்கூடியவையாக இருக்கின்றன என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வரம்புக்கு உட்பட்டே கடனும் முதலீடும் செய்தாலும் அதானி குழுமம் வீழ்ந்தால் இத்தனை கோடி ரூபாய் பணமும் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. விஜய் மல்லையா, நிரவ் மோடி வழியில் அதானி குழுமம் செல்கிறதா என்ற சந்தேகமும் வருகிறது.
இப்போது சிக்கியுள்ள இக்கட்டிலிருந்து அதானி குழுமம் மீள்வதற்கு வெகு காலம் ஆகும் என்றே வர்த்தகத் துறையினர் கூறுகிறார்கள்.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த சர்வதேச நிதி நிறுவனமான க்ரெடிட் சுய்ஸ் (Credit Suisse) நிறுவனம் அதானி பங்கு பத்திரங்கள் மீது கடன் வழங்குவதை நிறுத்தியுள்ளது. இது அதானி நிறுவனத்துக்கு மிகப் பெரிய பின்னடைவு. இதே போன்று மற்ற நிறுவனங்களும் கடன் வழங்குவதை நிறுத்தினால் அதானியின் தற்போதைய பணிகளை தொடர்வதற்கே சிரமம் ஏற்படும்.
கவுதம் அதானிக்கு இது போன்ற வாழ்வா சாவா போராட்டங்கள் புதிதல்ல.
1998ல் அவர் வளர்ந்து வந்துக் கொண்டிருந்த சூழலில் அவரும் அவரது நண்பரும் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்கள். ஒரு விடுதியிலிருந்து வெளியே வரும்போது துப்பாக்கி ஏந்திய சிலர் இருவரையும் துப்பாக்கி காட்டி மிரட்டி காரில் கடத்தினார்கள். பணயத் தொகையாக 15 லட்ச ரூபாய் கேட்டார்கள். பிறகு விடுவிக்கப்பட்டார்கள். ஆனால் பணயத் தொகை கொடுக்கப்பட்டதா அல்லது பணயத் தொகை இல்லாமல் விடுவிக்கப்பட்டார்களா என்பது இதுவரை தெரியாது.
2008 நவம்பர் 26ஆம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். முக்கியமாய் தாஜ் ஹோட்டலில் அவர்கள் நடத்திய தாக்குதலில் நூற்றுக் கணக்கானவரக்ள் கொல்லப்பட்டார்கள். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது தாஜ் ஓட்டலில் அதானி இருந்தார். அங்கே உள்ள ரெஸ்டாரண்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில் ஓட்டல் லாபியில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்த தொடங்கியிருக்கிறார்கள். அப்போது ஓட்டல் ஊழியர்கள் அதானியை பாதுகாப்பாய் கிச்சன் வழியாக அழைத்துச் சென்று பின்வாசலுக்கு கொண்டு சென்று விட்டிருக்கிறார்.
இப்படி இரண்டு முறை துப்பாக்கிகளிடமிருந்து தப்பியிருக்கிறார் அதானி.