”ராகுல் காந்தி பிரச்சாரத்துக்காக கோவை வந்திருக்கேன். அதனாலதான் ஆபீசுக்கு வரலை” என்று காலையிலேயே போன் செய்தாள் ரகசியா.
“ராகுல் காந்தி பிரச்சாரத்துல என்ன ஸ்பெஷல்?”
“தமிழ்நாட்ல இந்த தேர்தல்ல இதுவரைக்கும் ஒரு பிரச்சார கூட்டத்துக்குகூட வராத ராகுல் காந்தி, இன்னைக்கு பிரச்சாரம் செய்ய வர்றதே ஸ்பெஷல்தானே?”
“நானே கேட்கணும்னு இருந்தேன். ராகுல் காந்தி ஏன் தமிழ்நாட்டுக்கே வரல?”
“இதே கேள்வியை திமுக தலைமையும் கேட்டிருக்கு. அதுக்கு, ‘தமிழகத்தில் முதல்வரின் பிரச்சாரமே இந்தியா கூட்டணிக்கு வெற்றியை பெற்றுத் தரும்னு நம்பறோம். அதான் நான் வரலை’ன்னு ராகுல் காந்தி சொல்லிட்டாராம். இருந்தாலும் தேர்தல் நெருக்கத்துல ஒரு சில தொகுதிகள்ல மட்டும் பிரச்சாரம் செய்ய வந்திருக்கார்.”
“தேர்தல் களமெல்லாம் சூடு பிடிச்சுடுச்சா?”
“தேர்தல் ஜுரம் மக்களுக்கு இருக்கோ இல்லையோ, திமுக அமைச்சர்களுக்கு அதிகமா இருக்கு. குறிப்பா தருமபுரி தொகுதி பொறுப்பாளரான அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ரொம்ப டென்ஷன்ல இருக்கார். சவுமியா அன்புமணி ஜெயிச்சு, அதனால தன்னோட அமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்திடுமோங்கிற பயம் அவருக்கு. அதனால திமுக மட்டுமில்லாம அதிமுக நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு நான் அமைச்சரா தொடரணும்னா சவுமியா ஜெயிக்கக் கூடாது. அதுக்கு நீங்கதான் எனக்கு உதவி செய்யணும்னு கேட்டிருக்கிறார். இந்த விஷயத்தை கே.பி.முனுசாமி காதுக்கு அதிமுககாரங்க கொண்டு போயிருக்காங்க.”
”அதிமுககாரங்க என்ன சொன்னாங்களாம்”
”அவங்களுக்கு பாமகவை தோக்கடிக்கணும்னு இருக்கு. முக்கியமா சிவி சண்முகம் பாமக மேல மிகக் கோபமாக இருக்கிறார். தான் அத்தனை தடவை போய் கேட்டும் கூட்டணிக்கு வரவில்லைனு கடுப்பில் இருக்கிறார். அதனால் பாமக போட்டியிடும் தொகுதிகளில் அதை தோற்கடிக்க என்னென்ன வித்தைகள் செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்துக் கொண்டிருக்கிறார். அதனால் தர்மபுரி தொகுதியில் அதிமுகவினர் திமுகவுக்கு ஓட்டுப் போட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை”
”அப்போ சவுமியா ஜெயிக்கிறது கஷ்டமா?”
“அவங்க தோத்துடக் கூடாதுனு ஒட்டு மொத்த பாமகவினரும் தர்மபுரில வேலை செய்றாங்க. அதனால மத்த பாமக தொகுதிகள் பாதிக்கப்பட்டு இருக்கு..பாமகவினரே புலம்புறாங்க”
”எம்.ஆர்.கே மாதிரி வேற எந்த அமைச்சர்களுக்கெல்லாம் பிரஷர் அதிகமாயிருக்கு?”
“எல்லா அமைச்சர்களுக்குமே பிரஷர்தான். அவங்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது ரெண்டு விஷயம். திமுக ஜெயிக்கணும். அதிமுக ரெண்டாவது இடத்துக்கு வரணும். இதுதான். பாஜக அதிக ஓட்டு வாங்கினாலும் திமுக அமைச்சர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் கட்சில சிக்கல்தான்”
“பாஜக ரெண்டாவது இடம் வந்துடக் கூடாதுனு திராவிடக் கட்சிகள் ரெண்டும் போட்டி போட்டுக்கிட்டு வேலை பார்க்கிறாங்க போல”
”ஆமாம். சில இடங்கள்ல கூட்டணிக் கட்சிக்கும் திமுகவுக்கும் பிரச்சினை இருக்கு. அதையும் முதல்வரே தலையிட்டு சரி செய்யறாராம்”
”அப்படியா?”
“சிதம்பரம் தொகுதியில திமுகவினர் தனக்கு தேவையான ஒத்துழைப்பை கொடுக்கலைன்னு திருமாவளவன் நினைக்கறார். முதல்வருக்கு போன் போட்டு இதைப்பத்தி சொல்லியிருக்கிறார். முதல்வர் உடனே தலையிட்டு விசிகவுக்கு தேவையான ஒத்துழைப்பை கொடுக்க சொல்லியிருக்கிறார்”
“முதல்வர் ரொம்ப தீவிரமா இருக்கார் போல”
“ஆமாம். சிவகங்கைல வேற மாதிரி பிரச்சினை. அங்க போட்டி போடுற கார்த்தி சிதம்பரத்துக்கு உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் சரியா ஒத்துழைக்கவில்லையாம். இது முதல்வர் காதுகளுக்கு போயிருக்கு. அதனால திமுகவினரை கூடுதலா உழைக்க சொல்லியிருக்கிறார்”
“ஓ அதான் கார்த்தி சிதம்பரம் தான் பேசுற கூட்டத்திலெல்லாம் தளபதி ஸ்டாலின்னு புகழ்ந்துக் கிட்டு இருக்கிறாரா?”
”அதே அதே..காங்கிரசில் மட்டுமல்ல பாஜகவிலும் இந்தப் பிரச்சினை இருக்கு. விருதுநகர் தொகுதியை ராதிகா சரத்குமாருக்கு கொடுத்ததுல உள்ளூர் பாஜகவினருக்கு வெறுப்பு இருக்கு. ராதிகா சரத்குமாருக்கு சரியா கோஆப்ரேட் பண்ண மாட்டேங்கிறாங்க. அந்தத் தொகுதியை இப்ப மதுரைல போட்டி போடுற ராம.சீனிவாசனுக்குதான் கொடுக்கிறதா இருந்தது. ரெண்டு மூணு வருஷமா அவர் விருதுநகர் தொகுதிக்கு அடிக்கடி வந்து தன்னை அங்க பலப்படுத்திக்கிட்டிருந்தார். அவருடைய ஆதரவாளர்கள் யாரும் ராதிகாவுக்கு வேலை செய்யலையாம். இதுல ராதிகாவும் சரத்குமாரும் பயங்கர அப்செட். அண்ணாமலைக்கிட்ட சரத்குமார் கம்ப்ளைண்ட் பண்ணதா தகவல் இருக்கு”
“அண்ணாமலை என்ன சொன்னாராம்”
“அவருக்கு கோவை தொகுதி பிரச்சினைகளை தீர்க்கவே நேரம் சரியா இருக்கு”
“முதல்வரோட மருமகன் எல்லா ஊர்கள்லயும் தனியா ஒரு சர்வே நடத்தறாராமே?”
“ஆமாம். உளவுத்துறை அறிக்கையை நம்பாம அவர் தனியா எல்லா தொகுதிகள்லயும் முகாமிட்டு இந்த சர்வேயை நடத்தறாராம். கிடைச்ச நியூஸை அப்பப்ப அவர் முதல்வருக்கு அனுப்பறதா சொல்றாங்க. அவர் மட்டுமில்லை உதயநிதி ஸ்டாலினும் ஒவ்வொரு இரவுலயும் தான் தங்கற ஊர்ல இருக்கற கட்சிக்காரங்களை கூப்பிட்டு கள ஆய்வு நடத்தி ஆலோசனைகளை சொல்லிட்டு இருக்கார்.”
“தருமபுரம் ஆதீனம் முதல்வரை சந்திச்சு ஆசி வழங்கி இருக்காரே?”
“ஆசி மட்டுமில்லை மறைமுகமா ஆதரவும் வழங்கி இருக்காரு. பாஜக நிர்வாகிகள் தன்னை பிளாக்மெயில் செய்த விஷயத்தை ஆதினத்தோட பக்தர்கள்கிட்ட எடுத்துச் சொல்லி, மயிலாடுதுறையில் பாஜகவுக்கு யாரும் ஆதரவு தெரிவிக்க கூடாது. ஓட்டும் போடக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்றாராம். அதனால அந்த தொகுதியில காங்கிரஸ் வேட்பாளரோட வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கறதா சொல்றாங்க.”
”பாஜகவுக்கு எல்லா இடமும் பிரச்சினைதான் போல”
“ஆமாம். அதிமுக கூட்டணி இருந்தப்ப அவங்களே தேர்தல் வேலைகளை பாத்துப்பாங்க. இப்ப தேர்தல் வேலை செய்யவே ஆளில்லை. எதிர்க் கட்சிகள் சொல்றது உண்மைதான் பூத் கமிட்டி போடுறதுக்கே ஆளில்லை என்று தமிழக பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவர் டெல்லி தலைமைக்கு தகவல் சொல்லியிருக்கிறார்”
”அமித்ஷா சிவகங்கை ரோட் ஷோவை கான்சல் பண்ணிட்டாரே..ஏன்?”
“ஏப்ரல் 4,5ல் தமிழ்நாட்டுக்கு வர்றதா இருந்தது. அதை மாத்தி 12, 13 வருவேன்னு சொல்லியிருந்தார். சிவகங்கை, தென்காசி, மதுரை பகுதிகளில் பிரச்சாரம் பண்ணுவதாக சொல்லியிருந்தாங்க. ஆனா மதுரைக்கு மட்டும் வந்துட்டு போய்ட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போறதா இருந்துச்சு. அதையும் கேன்சல் பண்ணிட்டார்”
“என்ன காரணம்?”
“சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் மேல 500 கோடி ரூபா மோசடி புகார் வந்துருக்கு. அந்த மோசடில பாதிக்கப்பட்டவங்கலாம் மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த மக்கள். தேவநாதனுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ரோட் ஷோ பண்ணா மயிலாப்பூர் கிடைக்கிற ஓட்டுக்களும் கிடைக்காதுனு தென் சென்னை பாஜகவினர் சொல்லியிருக்காங்க. அது மட்டுமில்லாம மோசடி புகார் மாட்டிக்கிட்டவர்கூட அமித் ஷா இருப்பதும் பாஜகவின் இமேஜுக்கு உதவாதுனும் அட்வைஸ் பண்ணியிருக்காங்க”
“கூட்டணி வேட்பாளரை தேர்ந்தெடுக்கறதுக்கு முன்னால அவரைப் பத்தி செக் பண்ணியிருக்கணும்ல”
“அதைதான் அமித்ஷா கேட்டிருக்கிறார். இதுல அவர் ரொம்ப அப்செட்டாம். இப்படி கட்சி நடத்தினிங்கனா எப்படி ஜெயிக்க முடியும் லெஃப்ட் ரைட் வாங்கிட்டதா கமலாலயத்துல பேசிக்கிறாங்க”
”அண்ணாமலையும் டென்ஷனா இருக்கிறாரே? செய்தியாளர் கூட்டத்துல சண்டை நடந்திருக்கே”
“அண்ணாமலைக்கு தேர்தல் பிரஷர் ஜாஸ்தியாயிடுச்சுனு கட்சியினரே பேசிக்கிறாங்க. கட்சிக்காரங்ககிட்டயே எரிஞ்சி விழுறாராம். எதையும் அவர் கிட்ட சொல்ல முடியலனு கோவை பாஜகவினர் சொல்றாங்க”
இவ்வளவு டென்ஷனுக்கு என்ன காரணம்?”
“கோவை ரெண்டாவது இடமாவது வந்துரணும்னு நினைக்கிறார். ஆனா அப்படி வர முடியாதுனு மத்திய உளவு துறை ரிப்போர்ட் சொல்லியிருக்கிறதாம். அமித்ஷாவும் அதை அண்ணாமலைகிட்ட கேட்டிருக்கிறார். கோவைல நகரப் பகுதிகள்ல வேல செய்ய மட்டும் ஆளுங்க இருக்காங்க போல சுத்து வட்டாரத்து தேர்தல் பணிகளை அவரால மேனஜ் பண்ண முடியல…இப்படி அவருக்கு நிறைய பிரச்சினைகள் நிறைய டென்ஷன். செய்தியாளர்கள்கிட்ட அண்ணாமலைக்கு நெருக்கமான ஒருவர் அவர் டென்ஷன்ல பேசிட்டார். எதுவும் நினைச்சிக்காதிங்கனு சொல்லியிருக்கிறார். வானதி சீனிவாசனும் தனக்கு தெரிந்த மூத்த செய்தியாளர்களிடம் இதே மாதிரி சொல்லியிருக்கிறாராம்”
”மோடி, அமித்ஷான் இன்னும் நிறைய ரோட் ஷோ நடத்துவாங்களா?”
“எதுக்கு ரோட் ஷோ போய் சாக்கோபார் சாக்கோபார்னு ஐஸ்கிரீம் விக்கிற மாதிரி கத்துறதுக்கா?” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.