காதலுக்கு கட்டுப்பாடு விதிப்பது நம்ம ஊர் கல்லூரிகளின் வழக்கம். ஆனால் சீனாவில் உள்ள கல்லூரிகள் அப்படியில்லை. காதலுக்கு மரியாதை கொடுப்பதுடன் சுதந்திரமாக காதல் செய்வதற்கு ஒரு வாரம் விடுமுறையும் கொடுத்திருக்கிறது. இதற்கு காரணம் அந்நாட்டின் மக்கள் தொகை.
உலகிலேயே மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள்தொகை வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக 2022-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் மக்கள் தொகை அதற்கு முந்தைய ஆண்டை விட 8.5 லட்சம் அளவுக்கு குறைந்தது.
இதுபற்றி அந்நாட்டு நடத்திய ஆய்வில், மக்கள் தொகையின் அளவு குறைவதன் தொடக்கம்தான் இது என்றும், எதிர்காலத்தில் இது வேகமாக அதிகரிக்கும் என்றும், ஒவ்வொரு ஆண்டிலும் சராசரியாக 1.1 சதவீதம் அளவுக்கு சீனாவின் மக்கள்தொகை குறையும் என்றும் தெரியவந்துள்ளது. ஒருபுறம் மக்கள் தொகை குறையும் நேரத்தில், மறுபுறம் இருக்கும் மக்களின் சராசரி வயதும் தடாலடியாக குறைவது கண்டறியப்பட்டுள்ளது. இப்படி இலங்கையின் பொருளாதாரம்போல் வேகமாக சரிந்துகொண்டிருக்கும் மக்கள்தொகையை வேகமாக அதிகரிக்கவேண்டிய நிலைக்கு அந்நாட்டு அரசு தள்ளப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையை தீர்க்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீன அரசு ஒரு பக்கம் நடவடிக்கை எடுக்க, சில தனியார் அமைப்புகளும் மக்கள் தொகையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சீனாவில் உள்ள 9 கல்லூரிகள் இந்த ஏப்ரலின் முதல் வாரத்தில் மாணவர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. கூடவே ஒரு கட்டுப்பாடும். இந்த ஒரு வார விடுமுறையை காதலிப்பதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அந்த கட்டுப்பாடு. இந்த ஒரு வாரத்தில் பெண்களை மட்டுமின்றி இயற்கையையும் காதலிக்க வேண்டும் என்று மாணவர்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றன அந்தக் கல்லூரிகள்.
“கல்லூரியில் கற்பதைவிட மாணவர்கள் வெளியில் கற்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. பச்சை மலைகள், நீரோடைகள் என்று இயற்கையையும் வாழ்க்கையையும் காதலிக்க இந்த வாரத்தில் அவர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும். இந்த பயணத்தைப் பற்றி அவர்கள் கட்டுரைகள் எழுதுவதுடன், வீடியோக்களையும் எடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு புரோஜக்ட் கொடுத்துள்ளோம்” என்று கூறியுள்ளார் இந்த விடுமுறையை வழங்கிய கல்லூரிகளில் ஒன்றான மெயின்யாங் பிளையிங் விகேஷனல் காலேஜின் துணை டீனான லியாங் குவோஹி.
கல்லூரிகள்தான் இப்படியென்றால் நிறுவுவனங்கள் இன்னும் ஒருபடி மேலே இருக்கின்றன. திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகளுக்கு ஒரு மாதத்துக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்குகின்றன சில தனியார் நிறுவனங்கள். அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், திருமணம் செய்துகொள்ளாமல் பிரம்மசாரிகளாக இருக்கும் இளைஞர்களை தேடிப்பிடித்து அவர்களை காதலிக்குமாறு பெண்களிடம் பிரச்சாரம் செய்யும் இயக்கங்களும் சீனாவில் செயல்பட்டு வருகின்றன.
சீனாவில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் ராணுவத்தில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் தங்கள் 30 வயதுக்குள் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் இளைஞர்களுக்கு இந்த கட்டாய ராணுவப் பணியில் இருந்து விலக்கு அளிக்கவும் அந்நாட்டு அரசு யோசித்து வருகிறது.