சமந்தா, நடிப்பிற்கு ஒரு வருட இடைவெளி விடுகிறார். நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஒரு வருடம் சிகிச்சை எடுத்து கொள்ளவிருக்கிறார். ‘மையோசிடிஸ்’ என்னும் ஆட்டோஇம்யூன் பிரச்சினைக்கு சிகிச்சை எடுத்து கொண்டு பழைய நிலைக்கு திரும்பவே இந்த இடைவெளி.
சமந்தா ஒரு வருடம் நடிக்கப் போவதில்லை என்பதால் அவருடன் இணைந்து பயணித்த மேக்அப் மேன், ஹேர் ஸ்டைலிஸ்ட், காஸ்ட்யூம் டிசைனர் என அனைவருக்கும் இது ஒரு மிகப்பெரிய ப்ரேக்தான்.
இதனால் சமந்தாவின் குழுவினர் கலங்கிப் போய் இருக்கிறார்கள். அதிலும் அவரது ஹேர் ஸ்டைலிஸ்ட் ரோஹித் பட்கர் சமந்தாவுக்கு ஒரு உணர்வுப்பூர்வமான கடிதத்தை எழுதி இருக்கிறார்.
‘2 வருடங்கள், 1 மனதை மயக்கும் மியூசிக் வீடியோ. 3 திரைப்படங்கள். 7 ப்ராண்ட் விளம்பரப்படங்கள். 2 எடிட்டோரியல்கள். வாழ்க்கை முழுவதும் நினைவில் நிற்கும் மறக்க முடியாத நினைவுகள்.
உற்சாகமூட்டிய கதகதப்பான நாட்கள் முதல் வேதனை அளித்த நாட்களையும் பார்த்திருக்கிறோம். சந்தோஷத்தில் வழிந்த கண்ணீர், சிரித்து சிரித்து கண்களில் இருந்தது வழிந்த கண்ணீர், வலியாலும், வேதனையாலும் விழுந்த கண்ணீர். எல்லாமும் இருந்திருக்கிறது.
நம்பிக்கையோடு இருந்த போதிலும், எளிதில் உடைந்துப் போகிற மனநிலையிலும், உச்சத்திலும், சில சமயங்களில் வீழ்ந்தும் இருக்கிறோ. உங்களோடு என்ன ஒரு அருமையான பயணம். நிச்சயமாக நினைவில் இருக்கும் பயணம் அது.
பூரண குணமடைய நீங்கள் மேற்கொண்டிருக்கும் இந்த பயணம், உங்களுக்கு சக்தியைக் கொடுக்க வேண்டும், வலிமையை வழங்க வேண்டுமென நான் விரும்புகிறேன். இது இதுவரை நீங்கள் வெளிப்படுத்தாத உங்களது புதிய பரிமா ணத்தை வெளிப்படுத்தட்டும். உயரே செல்லுங்கள். தொடர்ந்து உச்சம் காணுங்கள். உங்களுக்கு என்னுடைய பெரும் அணைப்பு.
நீங்கள் காட்டுத்தீயினால் கூட பாதிக்கப்படமால், மீண்டும் மலரும் காட்டுப்பூ என்பதை மறந்துவிடாதீர்கள்’
இப்படியாக ஒரு உருக்கமான, உணர்வுப்பூர்வமான கடிதத்தை எழுதி சமந்தாவை நெகிழ வைத்திருக்கிறார் அவரது ஹேர் ஸ்டைலிஸ்ட் ரோஹித்.
ரஜினிக்கு வந்த சோதனை!
‘அண்ணாதே’ படத்திற்கு பிறகு ரஜினியின் மார்க்கெட் கொஞ்சம் தடுமாற்றம் கண்டிருக்கிறது. தமிழ் திரையரங்கு உரிமை, ஒடிடி உரிமை, டிஜிட்டல் உரிமை இவை அனைத்தும் நல்ல விலைக்குப் போயிருந்தாலும், இதர மொழிகளில் முன்பை போல் வியாபாரத்தில் விறுவிறுப்பு இல்லையாம்.
இந்நிலையில், படத்தின் தலைப்புக்கும் பஞ்சாயத்து வந்திருக்கிறதாம். இந்த டைட்டில் பிரச்சினை மலையாள சினிமா பக்கம் இருந்தது கிளம்பியிருக்கிறது.
ஷக்கிர் மடத்தில் என்ற இயக்குநர் ரஜினி படத்திற்கு ‘ஜெயிலர்’ என்று பெயர் வைக்க கூடாது என்று அப்பீல் செய்திருக்கிறாராம். 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே கேரளா ஃப்லிம் சாம்பரில் இதே டைட்டிலை அவர் முன்பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இப்பட வேலைகளும் 2021 நவம்பரில் ஆரம்பித்துவிட்டனவாம். டிசம்பரில் ஷூட்டிங் வேலைகளும் முடிந்துவிட்டது என்கிறார்கள்.
ஜூன் 2023-ல் சார்ஜாவில் நடந்த விழாவில் இதன் டைட்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவ்விழாவில் கமல் ஹாசனும் கலந்து கொண்டிருக்கிறார்.
மலையாளப் படம் வேறு, தமிழ்ப் படம் வேறு என்றாலும், ரஜினியின் படங்களுக்கு கேரளாவில் வரவேற்பு இருந்தது வருகிறது. இதனால் ஜெயிலர் என்ற பெயரில் ரஜினி படம் கேரளாவில் வெளியானால், தன்னுடைய படத்தின் வியாபாரம் பாதிக்கும் என்பதால் இந்த அப்பீலை மேற்கொண்டிருக்கிறார் ஷக்கிர் மடதில்.
இந்த பிரச்சினை இப்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் விசாரணக்கு வரலாம் என எதிர்பாக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியில் பிரம்மாண்ட தயாரிப்பாளர்!
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான படங்களை தயாரிப்பதில் வேகமெடுத்தவர் ஏ.எம்.ரத்னம்.
நடிகை விஜயசாந்தியின் மேக்அப் மேனாக இருந்து தயாரிப்பாளராக மாறிய இவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரை வைத்து மிரட்டியது எல்லாம் பழைய கதை.
சரியான திட்டமிடல் இல்லாமல், தாமதமாக எடுக்கப்பட்ட படங்களால் இவருக்கு தொடர்ந்து நஷ்டம் உண்டானது. இதனால் நீண்ட நாட்களாக படமெடுக்காமல் இருந்து வருகிறார்.
படமெடுக்கவும் முடியவில்லை. முந்தையப்படங்களினால் உண்டான நஷ்டத்திற்கான வட்டியும் விட்டப்பாடில்லை என்பதால் ஏ.எம். ரத்னம் கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக கூறுகிறார்கள்.
தமிழில் படமெடுக்க முடியாது என்று நினைத்து அவரது சொந்த மாநிலமான ஆந்திராவில் தெலுங்குப் படமெடுக்க முயன்றவருக்கு கைக்கொடுத்தவர் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண்.
பவன் கல்யாணை வைத்து படமெடுத்தால் கடனில் இருந்தது மீண்டு விடலாம் என்று களத்தில் இறங்கிய ஏ.எம். ரத்னம், அவருக்கு பெரிய தொகையை முன்பணமாகவும் கொடுத்திருந்தாராம். இதனால் ‘ஹரிஹர வீரமல்லு’ என்ற பெயரில் பட வேலைகள் தொடங்கின.
படம் தொடங்கியதுதான் மிச்சம். ஷூட்டிங் தொடரவே இல்லையாம். இதனால் ஏ.எம். ரத்னம் எதிர்பார்த்த லாபம் வருவது சந்தேகம்தான். மீண்டும் பெரிய பட்ஜெட்டில் படமெடுத்து ஏ.எம்.ரத்னம் மாட்டிக்கொண்டிருப்பதாக கோலிவுட்டில் பேச்சு அடிப்படுகிறது.