No menu items!

ஏ.ஆர். ரஹ்மானின் Silent அரசியல்

ஏ.ஆர். ரஹ்மானின் Silent அரசியல்

அமித் ஷாவின் கருத்துக்களுக்கு இந்தியா முழுவதிலுமிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் வைகோ, வைரமுத்து என பலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இப்படி பலர் நேரடியாக கருத்துக்களை சொல்ல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மறைமுகமாக தமிழைத் தூக்கிப் பிடித்திருக்கிறார்.

“இந்தியாவின் தொடர்பு மொழியாக இந்தி மாற வேண்டும். ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை மாற்று மொழியாக கருத வேண்டும். இந்தி மாநில மொழிகளுக்கான மாற்று இல்லை, ஆங்கிலத்துக்கான மாற்று. மாநில மொழிகளில் உள்ள வார்த்தைகளை இந்தி எடுத்துக் கொள்ளலாம். இது இந்தி மொழியின் இறுக்கத்தை குறைத்து நெகிழ்வு தன்மை அளிக்கும். மத்திய அமைச்சரவையில் 70 சதவீத பணிகள் இந்தியில் தயாரிக்கப்படுகின்றன. வட கிழக்கிலுள்ள எட்டு மாநிலங்கள் இந்தியை ஏற்றுக் கொண்டு பத்தாம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்கியுள்ளன. அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருக்கிறார். நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டத்தில் இந்தக் கருத்துக்களை அமித் ஷா தெரிவித்திருந்தார்.

அமித் ஷாவின் கருத்துக்களுக்கு இந்தியா முழுவதிலுமிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் வைகோ, வைரமுத்து என பலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இப்படி பலர் நேரடியாக கருத்துக்களை சொல்ல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மறைமுகமாக தமிழைத் தூக்கிப் பிடித்திருக்கிறார்.

நேற்று இரவு தனது ட்விட்டர் பதிவில் ‘தமிழணங்கே’ என்ற ’ழ’கரம் ஏந்திய ஓவியத்தை வெளியிட்டு, ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்’ என்ற பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தி திரைப்படங்களில் இசையமைத்து இந்தியா முழுவதிலும் தன் இசையை எடுத்து சென்றாலும் அவர் எப்போதும் தமிழைத் தள்ளி வைத்ததில்லை. ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசி உலக அளவில் தமிழை கொண்டு சென்றார்.

சமீபத்தில் கவிஞர் தாமரை எழுதிய ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற பாடலை இசையமைத்து வெளியிட்டிருந்தார். அந்தப் பாடல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட பலரால் பாராட்டப்பட்டது.

அந்தப் பாடல் வீடியோவைப் பார்த்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ‘இந்த வீடியோவில் ஜாவா பைக் வருகிறது என்று கூறியதால் பாடலைப் பார்த்தேன். அருமையான இசை’ என்று டிவிட்டரில் பாராட்டியிருந்தார். அதற்கு ட்விட்டர் மூலம் பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், ’அந்தக் காணொளியில் உங்கள் வாகனம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலகத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வாகனமாக ‘மூப்பில்லா தமிழ்’ இருக்கிறது என்பதையும் சொல்கிறோம்’ என்று தமிழின் பெருமையைக் குறிப்பிட்டிருந்தார்.

நேரடியாக அரசியல் கருத்துக்களை கூறாமல் தனது செய்கைகள் மூலம் தனது அரசியலை வெளிப்படுத்தி வருகிறார்.

கடந்த வருடம் ‘99 சாங்ஸ்’ திரைப்பட இசை வெளியீட்டின்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் திடீரென்று தமிழிலிருந்து இந்திக்கு மாறினார். உடனே ’இந்தியா?’ எனக் கேட்டவாறு மேடையை விட்டு வேகமாய் கீழிறங்கினார் ஏ.ஆர். ரஹ்மான். ‘முதல்லயே கேட்டேன், தமிழ் பேசுவீங்களான்னு’ என்றும் தொகுப்பாளரை நோக்கி கேள்வி எழுப்பினார். ரஹ்மானின் செயல் வேடிக்கையாக தெரிந்தாலும் இந்தி எதிர்ப்பு என்பது அங்கு தெளிவாக தெரிந்தது.

இந்தி மட்டுமல்ல, 2020-ல் வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கை மாநிலங்களில் மும்மொழி கொள்கை நடைமுறைபடுத்த வேண்டும். இந்தியைக் கற்க வேண்டும் என்று முதலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு மாநில சுயாட்சியில் மத்திய அரசு தலையிடுகிறது என்று பல மாநிலங்களிலிருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. அந்த சமயத்தில் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பதிவில் ‘AUTONOMOUS’ என்று ஒற்றை ஆங்கில வார்த்தையைக் குறிப்பிட்டு meaning in the Cambridge English Dictionary என்று பதிவிட்டிருந்தார். மாநில சுயாட்சி குரல்கள் எழுந்த போது ‘AUTONOMOUS’ என்ற வார்த்தையை பதிவிட்டது அவரது அரசியலை வெளிப்படுத்தியது.

2020 லாக்டவுன் சமயத்தில் Instagram Live-ல் கமல், விஜய் சேதுபதியுடன் ஏ.ஆர். ரஹ்மான் உரையாடினார். அப்போது அவர் கூறிய கருத்துக்களும் முக்கியமானவை.

‘உலகில் இப்போது நிறைய பிரிவினை உள்ளது. வட இந்தியா, தென்னிந்தியா, தமிழ், மற்ற மொழி என இப்படிப் பல பிரிவினைகளுடன் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். தற்போது இருக்கும் சூழலில், மொழிகள் தாண்டி, தேசம் தாண்டி, ஒவ்வொரு குடும்பமும், அந்தக் குடும்பத்தின் தலைவரும் பிழைக்க வேண்டும்.’

‘அந்த காலத்தில் எல்லாம் ஒரு கிராமத்தில் பிறந்திருக்கிறீர்கள், ஒரு சாதியில் பிறந்தீர்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டி சிந்திக்க உனக்குத் தகுதியில்லை என்று சொல்லியே வளர்க்கப்பட்டார்கள். அப்படியான தடைகள் முதலில் உடைய வேண்டும்’

‘ஒரு சமூகம் முன்னேற வேண்டுமென்றால் அந்த சமூகத்தில் இருக்கும் சாதனையாளர்கள், அறிஞர்கள், சுய உணர்வு இருப்பவர்கள் நல்லறிவைப் பரப்ப வேண்டும். எனக்கு அப்படி ஒரு கனவு இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த சுய உணர்வு இருக்க வேண்டும்’

இவையெல்லாம் அந்த உரையாடலில் ஏ.ஆர். ரஹ்மான் கூறிய கருத்துக்கள்.

உலகம் முழுவதும் அறியப்பட்ட இசைக் கலைஞர் நிகழ்கால அரசியலைப் புரிந்துக் கொண்டு தன் இயல்பில் விமர்சித்திருக்கிறார்.

ரஹ்மானின் இசையைப் புரிந்து கொண்ட கோடிக் கணக்கான ரசிகர்கள் அவரது ‘தமிழணங்கே’ அரசியலையும் புரிந்துகொள்வார்கள். அந்தப் புரிதல் தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நன்மை செய்யும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...