தமிழ் சினிமா உலகில் 25 ஆண்டுகளாக அசைக்க முடியாமல் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. நேற்று அவர் பிறந்தநாளில், தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் உள்ள கேள்விகளுக்கு பதிலளிப்பதாக பதிவிட்டிருந்தார். அதை தொடர்ந்து அவரிடம் ரசிகர்கள் கேட்ட கேள்வியும் அவர் கூறிய பதில்களும்:
கேள்வி : நானே வருவேன் தேர்ந்தெடுக்க உங்களைத் தூண்டியது எது? மீண்டும் தனுஷ் – செல்வா-நீங்கள். இந்த காம்போ வேலை செய்யும் அனுபவம் எப்படி இருக்கிறது?
யுவன் : புதுப்பேட்டைக்கு பிறகு நனே வருவேன் படத்தில் தான் நாங்கள் மூவரும் இணையும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நானும் இதற்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன். என்னிடம் அவர்கள் கேட்டவுடன் சரி என்று சொல்ல இது தான் காரணம்.
கேள்வி : அஜித் சார் பற்றியும் அவருடன் நீங்கள் இணையும் அடுத்த படம் பற்றியும் சொல்லுங்க..
யுவன் : இவ்வளவு ஆண்டுகள் அவருடன் வேலை செய்ததில் நிறைய நல்ல அனுபவம் இருக்கு. அவர் இயல்பாகவே இரு அருமையான மனிதர். ஒவ்வொரு படம் முடிந்தவுடன் என்னை அழைத்து என் இசையை பாராட்டுவார். எனக்கும் அஜித் சாருடன் வேலை செய்ய மிகவும் பிடிக்கும். சீக்கிரம் அவருடன் வேலை செய்வேன் என நம்புகிறேன்.
கேள்வி : இதுவரை நீங்கள் அதிகம் பயன் படுத்தாத, இனி அதிகம் பயன் படுத்த நினைக்கும் இசைக்கருவி எது?
யுவன் : சந்தூர், ஹெமர்ட் டுல்சிமர் (hammered dulcimer) ஆகிய இசைக்கருவிகளை இனி அதிகம் பயன்படுத்த ஆசை இருக்கிறது.
கேள்வி : நடிகர் விஜயுடன் உங்கள் காம்போவை எப்போது எதிர்பார்க்கலாம்? அவருடனான உங்கள் அனுபவங்களை சொல்லுங்களேன்…
யுவன் : அவருடன் இணைந்து பணி புரிவது சீக்கிரம் நடக்கும் என எதிர்பார்க்கிறேன். அவருடன் மாநாடு படம் வெளியான சமயத்தில் பேசினேன். சினிமா பற்றி நிறைய பேசினார். விஜய் சார் சோ ஸ்வீட். அவர் என்னிடம் சொன்ன மறக்க முடியாத விஷயம் என்றால், அவர் மகன் எனது தீவிரமான ரசிகர் என்பது.
இயக்குநர் செல்வராகவன் : நானே வருவேன் ரிலீஸ் எப்போ? அப்டேட் குடுங்க
யுவன் : சார், இந்த படம் ரிலீஸ் பத்தி என்கிட்ட கேக்குறீங்களே… பின்னணி இசை வேலைகள் தொடங்கிவிட்டது. தனுஷ் மற்றும் அனைவரும் மிகவும் அருமையாக நடித்திருக்கின்றனர். படம் ரிலீஸ் ஆகி மக்கள் பின்னணி இசையைக் கேக்க நான் ஆர்வமாக இருக்கிறேன்.
கேள்வி : எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கைக் கதையை படமாக எடுக்கும் திட்டம் இருந்தால், எந்த நடிகர் யுவனாக திரையில் நடிக்க பொருத்தமானவர் என்று நினைக்கிறீர்கள்?
யுவன் : யாரும் நடிக்க வேண்டாம் நானே நடிப்பேன். ஆனால் அந்த மாதிரி ஐடியா இதுவரை இல்லை.
கேள்வி : நடிகர் சிலம்பரசனுக்கு இசையமைத்த பாடல்களில் உங்களுக்கு பிடித்தது எது?
யுவன் : நிறைய இருக்கு. லூசுப்பெண்ணே பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
கேள்வி : பல ஆண்டுகளுக்கு முன்னாடி நீங்க கம்போஸ் பண்ணி யூஸ் பண்ண சரியான படம் வேணும்னு நீங்க நெனச்ச பாட்டு எது?
யுவன் : சில படங்களுக்கு இசையமைக்கும் போது சில பாடல்கள் தங்கிவிடும்.அவை என்னிடமே இருக்கும். வேறு படத்திற்கு அதை கொடுப்போம் இது போல நிறைய நடந்திருக்கிறது. குறிப்பிட்டு ஒரு பாடல் என்று கூற இயலாது.
கேள்வி : இரண்டு கேள்விகள், இந்த புதிய இசை ஒலியை தமிழ் சினிமாவில் கொண்டு வந்தது எப்படி? 25 வருடங்கள் உச்சியில் இருப்பதற்கு என்ன தேவை?
யுவன் : ஒவ்வொரு பாட்டு பண்ணும்போதும், புதுசா பண்ணனும், என்று யோசிப்பேன். இதெல்லாம் தாண்டி படத்தில் பாடல்கள் வெளியாகி ஹிட் ஆனாலும் ஆகவில்லை என்றாலும் அவற்றை நான் மனதுக்குள் எடுத்துக்கொள்வதில்லை. எனக்கு இசையமைப்பதே மகிழ்ச்சி. வேறு எதையும் மனதுக்குள் கொண்டு செல்வதில்லை.
கேள்வி : (மூன்றாம் பிறை படத்திலிருந்து வானெங்கும் தங்க மீன்கள் பாடல் பதிவிட்டு) இந்த பாட்டை ரீ மாஸ்டர் பண்ண முடியுமா?
யுவன் : இந்த பாடல் எனக்கும் மிக பிடித்த ஒன்று. சரியான சமயம் வரும்போது நிச்சயம் செய்வேன்.