கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் தாயகம் திரும்பி உள்ளனர்.
தூக்குத் தண்டனையும் விடுவிப்பும் – என்ன நடந்தது?
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கத்தாரில் வேலை பார்த்து வந்த பத்து பேரை அதிரடியாக கைது செய்தது கத்தார் காவல் துறை. இவர்களில் எட்டுப் பேர்தான் இப்போது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.
இவர்கள் அனைவரும் கத்தாரில் உள்ள அல் தஹ்ரா க்ளோபல் டெக்னாலாஜிஸ் (Al Dahra Global Technologies and Consultancy Services) நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள்.
அவர்கள் கைதுக்கு காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. இன்று வரை காரணங்கள் வெளிப்படையாக தெரியவில்லை.
கைது செய்யப்பட்ட எட்டு இந்தியர்களையும் தனிமைச் சிறையில் அடைத்தது கத்தார் அரசு. விசாரணைகள் நடந்தது. எல்லாமே ரகசிய விசாரணைகள்தாம். என்ன நடந்தது என்பதை கத்தார் அரசு இதுவரை இந்திய அரசுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
இந்த எட்டு பேரும் பணிபுரிந்தது அல் தஹ்ரா டெக்னாலஜிஸ் நிறுவனத்தில். கத்தார் நாட்டின் பாதுகாப்பு தொழில்நுட்பம் தொடர்பான பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வந்தது. அதி நவீன நீர்மூழ்கி கப்பலை கத்தார் நாடு உருவாக்கி வந்தது. இந்த எட்டு இந்தியர்களும் இந்திய கப்பல் படையில் பணியாற்றியிருந்ததால் அவர்களுக்கு போர்க் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த அனுபவமும் அறிவும் அதிகம். அதன் அடிப்படையில்தான் அவர்களுக்கு அங்கு வேலையே கிடைத்தது. மகிழ்ச்சியாய் சேர்ந்த அவர்கள் இன்று மரண வாசலில் நிற்கிறார்கள்.
கைது, விசாரணைகள், நீதிமன்ற நடவடிக்கைகள் என எல்லாவற்றையும் கத்தார் நாடு ரகசியமாக செய்ததால் இந்த எட்டுப் பேர் மேலும் பதிவு செய்யப்பட்டிருப்பது கத்தார் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுக்கள் என்று புரிந்துக் கொள்ளப்படுகிறது.
பொதுவாய் ஒரு நாட்டில் விசாரணைகள், வழக்குகள், கைதுகள் போன்றவை ரகசியமாய் பொதுவெளியில் சொல்லப்படாமல் நடந்தால் அது அந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டாகதான் இருக்கும்.
எட்டு இந்தியர்கள் மீதும் அது போன்ற குற்றச்சாட்டுக்கள்தாம் இருக்கின்றன என்ற தகவல்கள் கசிந்திருக்கின்றன.
கத்தார் நாட்டு நீர்முழுகி கப்பல்கள் குறித்து ராணுவ ரசியங்களை இஸ்ரேல் நாட்டுக்கு சொல்லிவிட்டார்கள். இந்த எட்டு பேரும் இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்தார்கள் போன்ற குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட எட்டு இந்தியர்களையும் கத்தாரில் உள்ள இந்திய தூதர் சந்தித்தார். அவர்களிடம் என்ன பேசினார் என்பது வெளியில் தெரிவிக்கப்படவில்லை.
கைது செய்யப்பட்டவர்களை பார்க்க தஹ்ரா நிறுவனத்தின் தலைமை அதிகாரி சிறைச்சாலைக்கு வந்திருக்கிறார். அவரையும் பிடித்து சிறையலடைத்து விட்டார்கள். இரண்டு மாதங்கள் தனிமைச் சிறையில் இருந்த அவர் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இவர் கத்தார் நாட்டை சேர்ந்தவர். கத்தார் ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பிரச்சினை வந்து சில மாதங்களில் அந்த நிறுவனம் மூடப்பட்டது. இந்த நிறுவனத்தில் சுமார் 75 இந்தியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். இவர்களில் பலர் இந்திய கப்பல் படையில் முன்பு பணியாற்றியவர்கள். அவர்கள் அனைவரும் இந்தியா திரும்பிவிட்டார்கள்.
கத்தார் நமது நாட்டுடன் நீண்டகாலமாக நல்லுறவில் இருக்கிறது. 2008ல் இந்தியப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் கத்தார் நாட்டுக்கு சென்றார். கத்தார் நாட்டுக்கு இந்திய பிரதமர் செல்வது அதுதான் முதல் முறை. அதன் பிறகு மோடி பிரதமரான பிறகும் நல்லுறவு தொடர்ந்தது. 2015ல் கத்தார் நாட்டு அதிபர் இந்தியா வந்தார். 2016ல் பிரதமர் மோடி கத்தார் சென்றார்.
இதனிடையே, கடந்த ஆண்டு இறுதியில் துபாயில் நடைபெற்ற காப் 28 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, கத்தார் இளவரசர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானியை சந்தித்துப் பேசினார். அப்போது, 8 இந்தியர்களின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்தார். மேலும் இதுதொடர்பாக இருதரப்பு உயர் அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
கத்தார் நாட்டுக்கு இந்தியாதான் முக்கிய ஏற்றுமதி-இறக்குமதி நாடாக இருக்கிறது. வருடத்துக்கு சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் அளவில் இருநாட்டுக்கும் வர்த்தகம் நடக்கிறது.
இத்தனை நட்பு, வர்த்தகம் இருந்தாலும் கத்தார் தனது நிலைப்பாடுகளில் உறுதியாகவே இருந்திருக்கிறது.
நபிகள் நாயகம் குறித்து 2022ல் பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுப்பூர் ஷர்மா அவதூறாக பேசியது தொடர்பாக முதல் கண்டனத்தை தெரிவித்தது கத்தார் நாடுதான். இந்திய தூதரை அழைத்து தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்தது. நுப்பூர் ஷர்மா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியது. அதன் தொடர்ச்சியாக பாஜகவிலிருந்து நுப்பூர் ஷர்மா நீக்கப்பட்டார்.
கத்தார் அரசு தனது நிலைப்பாடுகளில் உறுதியாக இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இந்திய அரசு செய்த தொடர் முயற்சிகளால் கத்தார் அரசு தனது நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வந்து தூக்கு மேடையில் நின்றுக் கொண்டிருந்த இந்தியர்களை விடுதலை செய்திருக்கிறது.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “கத்தார் சிறையில் இருந்து 8 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. கத்தார் அரசின்இந்த நடவடிக்கைக்கு பாராட்டுகள்” என கூறப்பட்டுள்ளது.