இந்திய இளைஞர்கள் வாரந்தோறும் 70 மணிநேரம் உழைக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று ஒரு கருத்தை இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். இது இளைஞர்களிடையே பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாராயணமூர்த்திக்கு எதிராக பலரும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். வாரம் 40 மணிநேரத்துக்கு மேல் வேலை பார்த்தால் உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்படும் என்று பலரும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இப்போதைய நிலையிலேயே சர்வதேச அளவில் கடுமையாக உழைப்பவர்கள் இந்தியர்கள்தான் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization) நடத்தியுள்ள இந்த ஆய்வில் இந்தியர்கள் சராசரியாக ஒரு வாரத்தில் 47.7 மணி நேரம் உழைப்பதாக தெரியவந்துள்ளது. உலக அளவில் இது மிக அதிகம். இந்தியர்களைவிட வெறும் 7 நாடுகளின் தொழிலாளர்கள் மட்டுமே அதிக நேரம் சராசரியாக உழைக்கிறார்கள் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. கத்தார், காங்கோ, லெசோதோ, பூடான், ஜாம்பியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 நாடுகளின் தொழிலாளர்கள் மட்டுமே இந்திய தொழிலாளர்களைவிட அதிக நேரம் உழைக்கிறார்கள்.
அதே நேரத்தில் பொருளாதார ரீதியாக இந்தியாவை விட முன்னணியில் இருக்கும் பல நாடுகளின் தொழிலாளர்கள் சராசரியாக குறைந்த மணிநேரம் மட்டுமே உழைக்கிறார்கள்.
அமெரிக்கர்கள் 36.4 மணி நேரமும், சீனாவைச் சேர்ந்தவர்கள் 46.1 மணி நேரமும், ஜப்பானியர்கள் 36.6 மணி நேரமும், ஜெர்மானியர்கள் 34.3 மணி நேரமும் உழைப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் பிரான்ஸ் நாட்டு தொழிலாளர்கள் 30.1 மணி நேரமும், இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 35.9 மணிநேரமும், இத்தாலியர்கள் 36.1 மணி நேரமும், தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள் 37.9 மணிநேரமும் ஒவ்வொரு வாரமும் சராசரியாக வேலை பார்ப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வகையில் பார்த்தால் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்து சீன மட்டுமே 40 மணிநேரத்துக்கும் அதிகமாக உழைக்கிறது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது ஒன்று புரிகிறது. குறைந்த நேரம் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் இருக்கும் நாடுகளே பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறார்கள். அப்படி வேலை செய்யும் தொழிலாளர்களால் குறைந்த நேரத்தில் நிறைந்த ஆற்றலை வெளிப்படுத்த முடிகிறது என்பதே அது.