தேர்தல் பறக்கும் படையால் 3.99 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். பணத்துடன் பிடிபட்டவர்களை எனக்குத் தெரியும். ஆனால் பணம் என்னுடையது அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மே 2-ம் தேதியோ அல்லது அதர்கு முன்போ போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு , நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து ரூ.3.99 கோடி கைப்பற்றப்பட்டது. தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உணவு விடுதியில் இருந்து அதிகபணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உணவு விடுதி இருக்கும் கட்டிடம் பாஜக தொழில் துறைப் பிரிவு தலைவரான கோவர்த்தனனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அங்கும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு, ரூ.1.10 லட்சம் ரொக்கத்தைக் கைப்பற்றினர்.
இதுதொடர்பாக விசாரிக்க நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில், நயினார் நாகேந்திரன் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கேட்டு வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பியிருந்தார். இதனை அடுத்து 2-வது முறையாக இன்று அவருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது. மே 2-ம் தேதி அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் பறக்கும்படையால் இதுவரை 200 கோடிக்கு மேல் கைப்பற்றியிருக்கிறார்கள். இதில் ரூ.4 கோடி யாரோ என் பெயரை சேர்ந்து கூறியதால் இதற்குமட்டும் தனி கவனம் செலுத்துக்கிறீர்கள்.
இத்தனைக்கும் தேர்தல் பிரசாரத்தின்போதே அது என் பணம் இல்லை. எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவாக கூறிவிட்டேன். யாரோ என் பெயரைகூறுவதற்கு நான் பொறுப்பேற்கமுடியாதே… அதில் இருக்கும் மூன்று பேர் (பணத்துடன் சிக்கியவர்கள்) மட்டுமல்ல இன்னும் நிறையபேரை எனக்கு தெரியும். அதற்காக அவர்கள் கூறும் குற்றச்சாட்டை நான் ஏற்கமுடியாது. இதற்கு பின்னணியில் திமுக, அதிமுக இருக்குமா என கேட்கிறீர்கள். இருவர் மீதும் குற்றமில்லை… இறைவன் செய்த குற்றம். உட்கட்சியிலிருப்பவர்களே இதை செய்திருப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.
நீங்களோ, நானோ நினைத்துப்பார்க்க முடியாத வகையில் பா.ஜ.க-வின் வளர்ச்சி வந்துகொண்டிருக்கிறது. இந்தப் பணம் தொடர்பாக காவல்துறையின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தருவோம். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், காவல்துறை அடித்து மிரட்டி வாக்குமூலம் வாங்கியிருக்கலாம். இதற்காகவெல்லாம் அவதூறு வழக்கு தொடர்வது நேர விரையம்.