”அதிமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாமிடத்துக்கு வருவதற்கு பாஜக பகீரத முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். சமூக ஊடகங்களை பயன்படுத்தி ஊடக அரசியலை உயர்த்திப் பிடிக்கிறீர்கள். அதாவது பாஜக இங்கு வலுவாக இருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இது வெறும் தோற்றம்தான். தமிழ்நாடு என்பது சமூக நீதிக்கான மண். சனாதனத்துக்கு இங்கு இடமில்லை. இந்துக்கள் என்ற பெயரில் அப்பாவி இந்துக்களின் உணர்வுகளை தங்கள் அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துகிறார்கள். திமுக தலைமையில் உள்ள கூட்டணிக் கட்சிகள் பாஜக மற்றும் சங்பரிவாரின் சனாதன அரசியலை அம்பலப்படுத்துகிறோம். ஆனால் திமுகவையும் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளையும் இந்து சமயத்துக்கு எதிரானவர்கள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். திமுக அரசு ஊழல் செய்கிறது என்ற ஒரு அவதூறை பரப்புகிறார்கள். இவையெல்லாம் அவர்கள் இரண்டாம் இடத்தை பிடிப்பதற்கான அரசியல் யுக்தி. ஆனால் இங்கு அது எடுபடாது. திமுக கூட்டணி உறுதியாக தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. அதிமுக கூட்டணி தேர்தல் முடிந்ததுமே கலைந்துவிட்டது”
நேற்று, ஈரோடு மாவட்டத்தில் கள்ளிப்பட்டி கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது மேலே படித்த வரிகள். இன்றைய அரசியலில் கவனிக்கப்பட வேண்டிய வரிகள்.
அதிமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜக இரண்டாம் இடம் – பாஜக வலுவாக இருப்பது போன்ற தோற்றம் – சமூக ஊடகங்கள் மூலம் தோற்றத்தை கட்டமைப்பது – இந்துக்களுக்கு எதிரானது திமுக – அதிமுக கூட்டணி கலைந்துவிட்டது – திமுக கூட்டணி உறுதியாக தொடர்கிறது என பல அம்சங்கள் கவனிக்க வேண்டியவை.
மிக முக்கியமாக பாஜகவால் அதிமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாமிடத்துக்கு வந்துக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி இப்போது தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
இன்றைய சூழலில் அதிமுக மிக பலவீனமான நிலையில் இருக்கிறது. கட்சி இரண்டாக பிரிந்திருக்கிறது. இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. இத்தனையும் சமாளிக்க அதனிடம் இருக்கும் ஒரே பலம் தொண்டர்கள்.
அந்தத் தொண்டர் பலத்தை அதிமுக தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தொண்டர்களுக்கு அதிமுகவின் தலைமை மீது நம்பிக்கை தொடர வேண்டும்.
எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தொண்டர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் செயல்படவில்லை தொண்டர்கள் ஆர்வம் குறைவார்கள். அதிமுக பலவீனமடையும்.
தொண்டர்களுக்கு அடுத்து அதிமுக கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் இரட்டை இலை சின்னம். சின்னத்தை இழந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். நான்கு மாதங்களில் பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடத்தப்படும் என்றும் அன்றைய பொதுக்குழுவின் 5 மற்றும் 6வது தீர்மானங்கள் கூறுகின்றன. அதன்படி பார்த்தால் நவம்பர் 11க்குள் தேர்தல் நடத்தி பொதுச் செயலாளரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால் நீதிமன்ற வழக்குகள் காரணமாக பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடத்தப்படவில்லை.
தேர்தல் நடத்தப்படும் வரை எடப்பாடி பழனிசாமிதான் இடைக்கால பொதுச் செயலாளர் என்று எடப்பாடி ஆதரவாளர்களும் இல்லை எடப்பாடி பொறுப்பு காலாவதியாகிவிட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
இருவர் கருத்துக்களையும் வைத்துப் பார்க்கும்போது அதிமுகவின் பொதுச்செயளாளர் பதவி அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது.
கட்சியில் நிலவும் இந்தப் பிரச்சினையால் இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஜூன் மாதம் நடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் பல இடங்களில் அதிமுகவினர் சுயேச்சை சின்னங்களில்தாம் போட்டியிட்டனர். காரணம் படிவங்களில் யார் கையெழுத்து போடுவது என்பதில் எழுந்த சண்டை.
இந்த நிலை நீடித்தால் நாடாளுமன்றத் தேர்தலிலும் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போகலாம்.
இந்தப் பிரச்சினைகள் எல்லாம் அதிமுகவை பின்னோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன.
அதிமுக பின்னோக்கி சென்றால் அந்த இடத்துக்கு பாஜக வருவது எளிதுதானே என்ற எண்ணம் வரலாம்.
ஆனால் இன்று பாஜகவுக்கு தேவை இரண்டாமிடம் அல்ல. வெற்றிகள்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு – புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாமிடத்துக்கு வந்துவிட்டோம் என்று தமிழ்நாடுபாஜக பெருமிதம் கொண்டால் அதை பாஜகவின் டெல்லி மேலிடம் ஏற்றுக் கொள்ளாது.
40 இடங்களில் இரண்டாமிடம் என்பது 40 இடங்களில் தோல்வி என்று அர்த்தம். திமுக கூட்டணி 40 இடங்களையும் பிடித்து விட்டது என்று பொருள். அதை பாஜக தலைமை விரும்பாது.
அதிமுகவுடன் நல்ல உறவுடன் இருந்து குறைந்தது 10 இடங்களையாவது வெல்ல வேண்டும் என்பதுதான் பாஜகவின் இலக்காக இருக்கும்.
தென் சென்னை, கோவை, ராமநாதபுரம், வேலூர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய தொகுதிகளை பாஜக குறி வைத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
இத்தனை தொகுதிகளில் வெல்ல வேண்டுமென்றால் அதிமுக பலவீனமாகி மூன்றாவது இடத்தில் இருக்கக் கூடாது. அதிமுகவின் பலவீனம் பாஜகவின் பலமாக மாறாது, பலவீனமாகதான் மாறும்.
இதை பாஜகவின் டெல்லி தலைவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். அதனால்தான் ஒன்றுபட்ட அதிமுக என்று குரல் கொடுக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கும் இது தெரியும். தன்னைக் கைவிட்டால் பாஜகவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்.
அப்படியென்றால் தமிழ்நாட்டில் பாஜக வளரவில்லையா? பலம் கூடவில்லையா என்ற கேள்விகள் எழலாம்.
திமுக பொது செயலாளர் துரைமுருகன் கூறியது போல் பாஜக பிசாசு போல் வளர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. இன்று தமிழ்நாட்டில் பாஜக கொடிகள் பறக்காத கிராமங்கள் இல்லை என்று கூறலாம். சில வருடங்களுக்கு முன்பு இந்த நிலை கிடையாது. இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் என்று பாஜக தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இந்த முன்னெடுப்புகள் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதத்தை உயர்த்த உதவும் ஆனால் வெற்றி பெற உதவாது.
அப்படியென்றால் 2026 சட்டப் பேரவைத் தேர்தல்?
அது அதிமுகவின் செயல்பாடுகளில் இருக்கிறது. அதிமுக தன்னை முன்னிறுத்தி அரசியல் செய்ய ஆரம்பித்தால் பாஜகவுக்கான வளர்ச்சி நிச்சயம் தடைபடும். இப்போதிருப்பது போலவே அதிமுகவின் நிலை தொடர்ந்தால் பாஜகவுக்கு அபார வளர்ச்சி கிடைக்கும், ஆனால் அது ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு இருக்குமா என்பது சந்தேகமே.
இப்போது பாஜக மூன்று விதமான வியூகங்களை தமிழ்நாட்டில் அமைத்து வருகிறது.
ஒன்று, திமுக இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது.
இரண்டு, திமுக குடும்பக் கட்சி
மூன்று, மோடி வளர்ச்சியின் நாயகன்
இந்த மூன்று அம்சங்களைதான் தமிழ்நாட்டு பாஜக தொடர்ந்து முன்னெடுக்கிறது.
இவை தமிழ்நாட்டில் விலை போகுமா என்பது குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்துக் கொண்டிருக்கிறது.