No menu items!

அடங்கும் அண்ணாமலை பதுங்கும் எடப்பாடி ! – மிஸ் ரகசியா

அடங்கும் அண்ணாமலை பதுங்கும் எடப்பாடி ! – மிஸ் ரகசியா

“ஜூன் மாசத்துல இந்த மாதிரி ஒரு மழையை நான் பார்த்ததில்லை. ராத்திரி நேரத்துல சுமார் 2 மணி நேரம் காட்டு காட்டுனு காட்டிடுச்சு” என்றவாறு ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“அரசியல் மழையைப் பத்தி உன் கிட்ட கேக்கலாம்னா நீ வான் மழையைப் பேசுற.”

“அரசியல் சாக்கடைல நான் உருளணும். அதானே உங்க விருப்பம்?”

“அப்படிலாம் இல்லை. நீ நல்லா மழைல நனை ஆனா மேட்டரை மட்டும் கொடுத்துடு. சரி, பிரியங்கா திடீர்னு தேர்தல்ல குதிச்சிட்டாங்க?”

“அவருக்கு தேர்தல்ல நிக்க விருப்பமே இருந்தது இல்லை. பிரச்சாரம் செய்றதோட இருந்துக்கிறேன்னுதான் சொல்லியிருக்கிறார்”

“ஏன்?”

“அவருக்கு குடும்பத்தை பாத்துக்கணும். அது மட்டுமில்லாம தேர்தல் அரசியலுக்கு வந்தா அவரது கணவரைப் பத்தி கிளறுவாங்க. வேற பிரச்சினைகள் வரும்னு நினைச்சிருக்கார்?”

“அப்புறம் எப்படி முடிவை மாத்திக்கிட்டார்?”

ராகுல் காந்திதான் அவர் மனசை மாத்தியிருக்கிறார். ‘வயநாடு தொகுதியில இருந்து நான் ராஜினாமா செஞ்சா, அது அந்த தொகுதி மக்களுக்கு வருத்தத்தை கொடுக்கும். அந்த வருத்தம் போகணும்னா, நீ வயநாட்ல நிக்கணும்’னு சொல்லியிருக்கிறார். அது மட்டுமில்லாம நாடாளுமன்றத்துக்கு நீ வந்தா அது எதிர்கட்சிகளுக்கு பெரிய ப்ளஸ்ஸா இருக்கும். பாஜகவுக்கு சவாலா இருக்கும்னு கன்வின்ஸ் பண்ணியிருக்கிறார்”

”சோனியா என்ன சொன்னாராம்?”

“பிரியங்கா நேரடி அரசியல்ல இறங்குறதுல சோனியாவுக்கு எப்பவுமே இஷ்டம் கிடையாது. ராஜீவ்க்குப் பிறகு அரசியலுக்கு பிரியங்கா கூட்டிட்டு வாங்கனு காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சொன்னபோது அதை அவர் ஏத்துக்கல. அவருக்கு குடும்பம் இருக்கு. அதை அவர் கவனிச்சுக்கணும்னு மறுத்திருக்கிறார். ஆனா இப்ப அவருக்கு வேற வழியில்லை. உத்தரப் பிரதேசத் தேர்தல்ல பிரியங்காவோட பிரச்சாரத்தைப் பாத்து சோனியாவுக்கே ஆனந்த அதிர்ச்சியா இருந்ததாம். கட்சிக் கூட்டத்துல பிரியங்காவை ரொம்பவே பாராட்டியிருக்கிறார்”

“பிரியங்காவுக்கு வயநாடு தொகுதியை கொடுக்கறதை பாஜக கிண்டல் செஞ்சுருக்கே?”

 “வெளிய கிண்டல் பண்ணினாலும் உள்ளூற பாஜகவுக்கு பயம் இருக்கு. சோனியா காந்தி, ராகுல் காந்தியைப் போல பிரியங்கா காந்தி இல்லை.  அவரோட செயல்பாடுகள் ரொம்ப தீவிரமா இருக்கும். உத்தர பிரதேசத்துல பல போராட்டங்களை பிரியங்கா அப்படி நடத்தி இருக்கார். அதே வேகத்தை நாடாளுமன்றத்துல அவங்க காட்டினா எப்படி சமாளிக்கறதுன்னு இப்பவே அவங்க மண்டையை பிச்சுக்கறாங்க.”

 “விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிச்சு இருக்கே?”

“அதிமுகவுக்கு பாஜக மேலிடத்துல இருந்து வந்த பிரஷர்தான் இதுக்கு காரணம்னு சொல்றாங்க.  இது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காதுக்கும் போயிருக்கு. உடனே இதைப்பத்தி  அவர் கடுமையா தன்னோட சமூக வலைதள பக்கத்துல எழுதியிருக்கார். பொதுவா அவர் அதிமுக வம்புக்கு போறதில்லை. ஆனா இந்த முறை பாஜகவோட அதிமுக மறைமுகமா சேருதுன்னு தெரிஞ்சதும் கடுமையா அதிமுகவை விமர்சிச்சு இருக்கார். இந்த விஷயத்தைப் பத்தி முதல்வர்கிட்டயும் அவர் பேசி இருக்காராம்.”

“அவங்கதான் பாஜகவோட கூட்டு இல்லையே அப்புறம் ஏன் பாஜக சொல்றதை கேக்கணும்?”

“கரெக்ட். ஆனா சசிகலா, தினகரன், ஓபிஎஸ்ஸை வச்சு பாஜக கேம் ஆட திட்டமிட்டிருப்பதா எடப்பாடிக்கு தகவல்கள் போயிருக்கு. இந்தத் தேர்தல்ல பாஜகவை எதிர்த்தா அது அவங்களுக்கு சாதகமா போய்டும்னு எடப்பாடி கணக்குப் போடுறார். எதிர்க்காம அப்படியே மையமா இருந்தா நாளைக்கு கூட்டணிக்கு கூட சம்மதம் சொல்ல முடியும்கிறது அவர் கணக்கு”

“போட்டி போடலனா அதிமுக பயந்திருச்சுன்ற இமேஜ் வருதே..அதை எப்படி சமாளிக்கப் போறார். அதுல அவர் கணக்கு என்ன?”

“இதை கட்சி நிர்வாகிகள் அவர்கிட்ட சொல்லியிருக்காங்க. போட்டியிட்டாலும் ஜெயிக்கப் போறதில்லை. பணம்தான் செலவு. தோத்துட்டா எடப்பாடி எந்தத் தேர்தல்லயும் ஜெயிச்சதில்லனு எதிர்க் கட்சிகள் சொல்றாங்களோ இல்லையோ சசிகலா, தினகரன் குரூப் சொல்லி உசுப்பேத்திவிடுவாங்க. அது நமக்கு நல்லதில்லைனு எடப்பாடி நினைக்கிறாராம்”

“சசிகலாவுக்கு இன்னும் பயப்படுறாரா?”

“தனி சசிகலாவுக்கு அவர் பயப்படல. பதுங்குகிறார். பாஜக பின்னணில இருந்தா அவரை சமாளிக்கிறது கஷ்டம்னு நெருக்கமானவங்ககிட்ட சொல்லியிருக்கிறார். பணம், சாதினு அவங்க பலவிதங்கள்ல ப்ளே பண்ணுவாங்கனு சொன்னாராம்”

“ஆமா, சசிகலா பேட்டிலயும் அது தெரிஞ்சது. பாஜக பத்தி அவங்க எந்த விமர்சனமும் வைக்கல. எடப்பாடி சாதி அரசியல் பண்றார்னு பேசுனாங்க…ஒஹோ கதை அப்படி போகுதா?”

”ஆமாம். அதுனால கொஞ்ச நாள் எடப்பாடி அடக்கிதான் வாசிப்பார்”

 “சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா சர்ச்சைக்குப் பிறகு தமிழிசையை அண்ணாமலை சந்திச்சிருக்காரே?”

“சந்திரபாபு நாயுடு  பதவியேற்பு விழாவில் நடந்த சர்ச்சைக்கு கமலாலயத்துல ரெண்டு விதமா சொல்றாங்க. ஒண்ணு, அண்ணாமலை கூட மோதுனதுனால தமிழிசையை கண்டித்தார்னு ஒரு சிலர் சொல்றாங்க. ஆனா இன்னொரு விஷயமும் இருக்குனு சொல்றாங்க.  தேர்தலில் போட்டியிடாத நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் பதவி தரும்போது எனக்கு ஏன் தரக்கூடாதுன்னு தமிழிசை சொன்னதா நிர்மலா சீதாராமன்கிட்ட தமிழக பாஜக பிரமுகர் வத்தி வச்சிருக்கார்.”

“அவருக்கென்ன தமிழிசை மேல கடுப்பு?”

“அவர்தான் தென் சென்னைல போட்டியிடுறதா இருந்தது. அந்த வாய்ப்பை தமிழிசை தட்டிப் பறிச்சிட்டாங்க. அந்தக் கோபம் இருக்கலாம்”

“தோக்கத்தானே போறாங்க. இதுக்கு எதுக்கு அவர் கோபப்படணும்?”

“கரெக்ட். ஆனா அவருக்கு கோபம் வந்திருக்கு. அவர் வத்தி வச்சதும் கட்சி மேலிடத்துல தமிழிசை பத்தி நிர்மலா சீதாராமன் புகார் செஞ்சிருக்காங்க. இந்த விஷயத்துக்குதான் தமிழிசையை அமித் ஷா கண்டிச்சார்னு இன்னொரு கமலாலய குரூப் சொல்லுது.”

“ஆமா தமிழிசை வீட்டுக்கு நேர்ல போய் அண்ணாமலை சந்திச்சிருக்கிறாரே?”

“ஆமாம் அதுவும் மேலிட உத்தரவு. அமித்ஷா மேடைல தமிழிசைகிட்ட கடுமையா பேசுனது கேமிராவுல சிக்கும், வைரலாகும்னு அமித்ஷாவே எதிர்பார்க்கல. அது மட்டுமில்லாம, தமிழிசை – அமித்ஷா சர்ச்சையால் நாடார் இன மக்கள் கடுப்பாகிவிட்டார்கள் என்ற தகவல் அமித்ஷாவுக்கு கிடைத்திருக்கிறது. தமிழ்ப் பெண்ணை அவமதிச்சிட்டார்னும் சோஷியல் மீடியாவுல பிரச்சினை பெரிதாக அண்ணாமலையை அனுப்பி சமாதானம் பேச வைத்திருக்கிறார் அமித் ஷா. இன்னும் கொஞ்ச நாளைக்கு அண்ணாமலைகிட்டருந்து பரபரப்பு பேட்டிகள் இருக்காது. கொஞ்சம் அடக்கமாதான் இருக்கப் போகிறார்”

 “சமூக வலைதளத்துல பேருக்கு பின்னாடி ‘மோடியின் குடும்பம்’னு போட வேணாம்னு பிரதமர் சொல்லி இருக்காரே?”

 “இதுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புதான் காரணம்னு சொல்றாங்க. பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு ஆர்எஸ்எஸ் தொடர்ந்து பாஜக  தலையில் குட்டிக்கிட்டே வருது.  ‘பாஜக என்ன மோடி குடும்பமா? குடும்ப அரசியல் பற்றி பேசிட்டே நீங்களும் அதைத்தானே செய்யறீங்க’ன்னு பாஜக  மூத்த தலைவரை கூப்டு ஆர்எஸ்எஸ் தலைமை டோஸ் விட்டிருக்கு.  அதுக்குப் பிறகுதான்  ‘மோடியின் குடும்பம்’னு போடறதை நிறுத்தச் சொல்லியிருக்கிறார் மோடி.  சமீபத்தில் மோகன் பகவத் உண்மையான சேவகர்களுக்கு அகங்காரம் இருக்கக் கூடாது .அத்துடன் மற்றவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று மறைமுகமாக மோடியை தாக்கி பேசினதும் இப்ப பரபரப்பாகி இருக்கு.”

 “லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், நேருவின் முகநூல் பக்கத்தில் போட்ட ஒரு பின்னூட்டம் பெரிய அளவுல பரபரப்பை கிளப்பி இருக்கே?”

 “தான் சொல்ற எதையும் அமைச்சசர் நேரு செஞ்சு கொடுக்கறதில்லைன்னு  சௌந்தரபாண்டியனுக்கு கோபம். தொகுதியில இருக்கற அரசு அதிகாரிகளும் அவர் சொல்றதை கேட்கிறதில்லையாம். நேருவைக் கேட்டுதான் எதையும் செய்யறாங்களாம். அதனால கோபத்தின் உச்சிக்கு போன அவர், நேருவின் முகநூல் பக்கத்தில்  ‘லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் இயற்கை எய்தி விட்டதால் அந்த தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டது’ன்னு பதிவு போட்டிருக்கார். இது திமுக வட்டாரத்துல பெரிய அளவுல பரபரப்பை ஏற்படுத்தி இருக்கு.  இந்த விஷயம் முதல்வர் காதுக்கும் போயிருக்கு.  முதல்வரும் நாம நேருவுக்கு அதிக முக்கியத்துவம் தந்துட்டோமோன்னு யோசிக்க ஆரம்பிச்சிருக்காராம்.  ஏற்கனவே அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு பக்கம் உதயநிதி மூலமா நேருவுக்கு எதிரா புகார் பட்டியல் வாசிக்கறார். அதனால இப்ப நேருவுக்கு நேரம் சரியில்லைன்னு அறிவாலயத்துல பேசிக்கறாங்க.”

“நேருவுக்கு இறக்கம் இருக்குமா?”

“இருக்காது. ஏன்னா முதல்வருக்கு இரக்கம் ஜாஸ்தி” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...