ஆபீசுக்கு வந்ததும் சூடாக ஒரு வாய் டீ குடிப்பது ரகசியாவின் வழக்கம். ஆனால், இன்று கொடுத்த டீயை வேண்டாம் என்று கூறிவிட்டார்.
”என்னம்மா திமுக கூட்டணி ஆளுநர் கொடுத்த டீ பார்ட்டியை புறக்கணிச்ச மாதிரி நீயும் புறக்கணிக்கிறியா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல சார். அடிக்கிற வெயில்ல டீயைக் குடிச்சா இன்னும் வேர்க்கும். அதான் டீ வேணாம்னு சொல்லிட்டேன். அதுக்குப் பதிலா நானே வீட்ல இருந்து மோர் கொண்டு வந்திருக்கேன்” என்றவாறு பாட்டிலில் இருந்த மோரை எடுத்து பருகத் தொடங்கினார் ரகசியா.
“ஆளுநர் கொடுத்த தேநீர் விருந்தை ஆளுங்கட்சி கூட்டணியினர் புறக்கணித்திருக்கிறார்களே?”
“அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் கூட கலந்துக்கல… அதை யாரும் கவனிக்கலையா… ஆளுநர் மேல திமுக கடும் அதிருப்தில இருக்கு. நீட் மட்டுமில்லை, துணை வேந்தர் நியமனத்துலயும் ஆளுநர் அரசுக்கு எதிரா இருக்கார். எங்கேயாவது கடுமையான எதிர்ப்பை காட்டுனாதான் ஆளுநருக்கு புரியும் மத்திய அரசுக்கும் தெரியும் என்று ஆளும் கட்சி நம்புது. போகப் போக இன்னும் கடுமையான விளைவுகள் இருக்கும்னு பேசிக்கிறாங்க.”
”ஆளுநரை வேற என்ன செய்ய முடியும்? அவருக்குதான் அரசியல் சாசன அடிப்படையில் அதிகாரங்கள் இருக்கே.”
“ஆளுநர் இருக்கிற ராஜ் பவன் கிட்டத்தட்ட 150 ஏக்கர் பரப்பளவுல இருக்கு. கவர்னருக்கு இவ்வளவு பெரிய இடம் தேவையா என்ற கேள்வியை எழுப்பி ராஜ்பவனை சுருக்கலாம்கிற திட்டமும் அரசு கிட்ட இருக்கிறதாம். அதே போல் ராஜ்பவன் செலவுகளையும் குறைக்க சொல்லப் போவதாக செய்திகள் வருகின்றன.”
“தமிழ் நாடு அரசு இத்தனை தீவிரமா நடவடிக்கைகள் எடுக்குமா?”
”கவர்னர் தீவிரமா இருக்கும்போது அரசும் தீவிரமாகதானே இருக்கும். தெலங்கானாவில் மாநில ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜனை முற்றிலுமாக புறக்கணிக்கிறார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ். சட்டசபையை ஆளுநர் உரையோடு தொடங்கும் மரபைக்கூட அவர் உடைத்து எறிந்திருக்கிறார். அம்மாநில முதல்வரோ அமைச்சர்களோ ஆளுநரை சந்திப்பதே இல்லை. அதுபோல் தமிழகத்திலும் ஆளுநரை முற்றிலுமாக புறக்கணிக்கலாம் என்ற யோசனையும் முதல்வருக்கு இருக்கிறதாம்.”
”மேற்கு வங்கத்துல மம்தா பானர்ஜிக்கும் இதே சிக்கல்தான். ஆளுநரை வைத்து அரசியல் செய்வது தமிழ்நாட்டுல பாஜக பலம் பெற உதவுமா?”
“தமிழ் நாட்டு அரசியல் பத்தி தெரியாம பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார்னு பாஜகவிலேயே பேச்சு இருக்கிறது. அதற்கு உதாரணமாய் அயோத்தியா மண்டபம் விவகாரத்தை சொல்றாங்க.”
“அங்க பாஜகவினர் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துனாங்களே?”
“ஆமாம். அயோத்தியா மண்டபத்துக்கு தமிழ் நாடு அரசு வந்ததுக்கு காரணமே கோர்ட்டு தீர்ப்பு. அது மட்டுமில்லாம அயோத்தியா மண்டபம் குறித்து வழக்கு போட்டது அந்த சமூகத்தை சார்ந்த ஒருவர்தான். அதில அரசியல் எதுவுமில்லை. ஜெயலலிதா காலத்துல இருந்து இந்த வழக்கு இருக்கு. திமுக அரசுக்கும் இந்தப் பிரச்சினைக்கும் சம்பந்தமில்லை என்பதை அங்கிருக்கவங்க எல்லோருக்கும் தெரியும். ஆனால், இதெல்லாம் தெரிந்தே அரசியல் செய்ய நினைச்சது பாஜகவுக்கே மைனசாக முடிந்திருக்கிறது என்கிறார்கள்.”
“ஏன்? பரபரப்பாக ஆர்ப்பாட்டம் நடந்ததே?”
“வெளில தெரிஞ்சதை வச்சு நீங்க சொல்றிங்க. ஆனா அண்ணாமலை போட்ட கணக்கு வேற. அயோத்திய மண்டபம் ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.வி. சேகர், ஒய்.ஜி. மகேந்திரன் போன்றவர்களை பாஜக அழைத்திருந்ததாம். அவர்கள் மூலம் இன்னும் அதிக கவனம் பெறலாம் என்று திட்டமிட்டாராம் அண்ணாமலை. ஆனால், அவர்களிருவரும் அதில் கலந்துகொள்ள விரும்பவில்லை என்று கூறி விட்டார்களாம். சட்டப் பேரவையிலேயே அமைச்சர் சேகர் பாபு தெளிவா விளக்கம் கொடுத்திருக்காரு, அங்க என்ன பிரச்சினைன்றது எல்லோருக்கும் தெரியும். இதுல அரசைக் குறை கூறுவது நல்லதில்லைனு ஒதுங்கிட்டாங்களாம். இது அண்ணாமலைக்கு அதிர்ச்சி.
அயோத்தியா மண்டபம் ஆர்ப்பாட்டமும் தமிழ் நாட்டு அரசியல்ல பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்து அமைப்புகளை தமிழக அரசு உடைக்கிறது என்ற கருத்தை மக்கள்கிட்ட கொண்ட செல்ல வேண்டுமென்பதுதான் பாஜகவின் வியூகம். அதற்காக அகில இந்திய அளவு சேனல்களில் இது குறித்த விவாதங்களை நடத்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கு. ஆனால், இதில் தமிழக அரசுக்கு உள்நோக்கம் இல்லை என்பதால் அந்த அரசியல் எடுபடவில்லை. அண்ணாமலை தப்பாக அரசியல் கணக்குகளை போடுகிறார் என்று கட்சிக்குள்ளேயே கருத்துக்கள் வந்திருக்கின்றன.”
”பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெறுவதற்கு பாஜக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதான எதிர்க்கட்சி மவுனம் சாதிக்கிறதே..?”
“அதிமுகவில் தீவிரமாக மோதல் நடந்துகொண்டு இருக்கிறது. உள்கட்சித் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் மாவட்ட செயலாளராக வெற்றி பெற வேண்டும் என்பதில் ஓபிஸ் தரப்பும் இபிஎஸ் தரப்பும் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போதைக்கு இபிஎஸ்ஸின் கரம் ஓங்கியுள்ள நிலையில், தனது ஆதராவாளர்களுக்கு 40 சதவீத இடங்களையாவது ஒதுக்கித் தர வேண்டும் என்று போர்க்குரல் எழுப்பியுள்ளாராம் ஓபிஎஸ். அப்படி நடக்காவிட்டால் பொதுக்குழுவில் பெரிய அளவில் பிரச்சினை எழுப்ப அவர் தயாராகி வருகிறார்.”
“சசிலகலா விஷயம் என்ன ஆயிற்று”
”சில தினங்களுக்கு முன் இளவரசி வீட்டில் சசிகலாவுடன் பேசியிருக்கிறார் தினகரன். அதிமுகவை கைப்பற்றும் முயற்சியை கைவிட்டுவிட்டு சொந்தக் கட்சியை பலப்படுத்தலாம் நீங்கள் அமமுகவுக்கு வாருங்கள் என்று சசிகலாவிடம் கூறியிருக்கிறார். அதிமுக தலைமையிடம் கையேந்தி நிற்பது நமக்கு பலன் தராது. நாம் இதுதான் உண்மையான அதிமுக என்று முன் நிறுத்துவோம். அதில் வெற்றி கிடைக்கும் என்றாராம் தினகரன். நமது கட்சி பலம் பெற்றால் அதிமுகவினர் அதில் வந்து சேருவார்கள் என்று கூறினாராம்.”
“சசிகலா என்ன சொன்னாராம்.”
“அமமுகவில் சேருவதை சசிகலா விரும்பவில்லையாம். தினகரன் கட்சியில் இணைந்தால் அதிமுகவை கைப்பற்ற இயலாது என்று கூறினாராம். நான் ஜெயலலிதா இல்லை, ஜெயலலிதாவின் தோழிதான். எனக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு கிடையாது அதிமுக செல்வாக்கைதான் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெளிவாக பதிலளித்தாராம். இதில் தினகரன் அப்செட்.”
”அமமுக வேண்டாம், புரட்சித் தலைவி அதிமுக என்று நீங்களே தொடங்குகள் என்று கேட்டுப் பார்த்தாராம். அதற்கும் சசிகலா மறுப்பு தெரிவித்திருக்கிறார். நம்முடைய பலம் அதிமுகதான். அதை மீட்டெடுப்பதுதான் என்று கூறியிருக்கிறார்.”
”கடைசியில் டெல்லி என்ன சொல்கிறதோ அதை செய்யப் போகிறார்கள். எதற்கு இந்த ஆலோசனை எல்லாம்?”
“அதுவும் சரிதான். டெல்லினதும் இன்னொரு செய்தி நினைவுக்கு வருது. ஜி.கே. வாசனை பாஜகவில் சேர சொல்லி அழுத்தங்கள் அதிகரித்திருக்கிறது.”
“போன வாரமே சொன்னியே, காங்கிரசும் கூப்பிடுதுனு சொன்ன.”
”ஆமாம் காங்கிரஸ் கதவுகளை வாசன் மூடிட்டார். பாஜகவில் சேரலாம் என்பதுதான் அவரது இன்றைய மனநிலை. ஆனால், தமாகாவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். உங்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும். ஆனால், கட்சியிலிருக்கும் மற்றவர்களுக்கு மதிப்பு இருக்காது என்று கூறியிருக்கிறார்கள். அதனால் வாசன் யோசனையில் இருக்கிறாராம்.”
“திமுக செய்திகள் ஏதாவது இருக்கிறதா?”
”அதிமுகவில் இருந்து வந்த தலைவர்களுக்கு முதல்வர் முக்கியத்துவம் கொடுப்பதாக மூத்த திமுக தலைவர்களுக்கு ஒரு கோபம் இருக்கிறது. அதை சரிகட்டும் வகையில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்கிறார்கள். அப்படி அமைச்சரவை மாறும்போது சின்னவருக்கும் பதவி கிடைக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது” என்று கூறிய ரகசியா கிளம்பினார்.
அவர் கொடுத்த கடைசி செய்தி:
அந்த நாளில் கொடிகட்டிப் பறந்த, சிவாஜிக்கு நிகராக படங்களில் தோன்றிய நடிகரின் வாரிசு, இப்போது சதா தண்ணியும் கையுமாக இருப்பது கலையுலகை சார்ந்த பலருக்கே வேதனையைக் கொடுத்திருக்கிறது. கட்டுப்பாடான நடிகர் என்று பெயர்பெற்ற நடிகரின் மகன் இப்படி ஆகிவிட்டாரே …0h god, அடக் கடவுளே என்று புலம்புகிறார்கள்.