No menu items!

தெலுங்கில் கால் பதிக்க விரும்பும் விஜய்!

தெலுங்கில் கால் பதிக்க விரும்பும் விஜய்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் தமிழில் தங்களது மார்க்கெட்டை விரிவுப்படுத்த மும்முரமாக திட்டமிட்டு வருகிறார்கள். ஒடிடி-யின் வருகைக்குப் பிறகு அவர்களது மார்க்கெட் மொழிகள் கடந்து செல்ல ஆரம்பித்திருப்பதால், தற்போது தங்களது படங்களை தமிழிலும் வெளியிட ஏற்ற வகையில் எடுக்க தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களை வற்புறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் தனது மார்க்கெட்டை விரிவுபடுத்த விஜய் விரும்புகிறாராம். இதற்காகவே தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூவின் படத்தில் கமிட்டாகி இருக்கிறார் என்கிறார்கள்.

விஜய் சமீபத்தில் நடித்த ‘பீஸ்ட்’ படம் தெலங்கானா மற்றும் ஆந்திராவில் 7.3 கோடி வசூல் செய்ததாக பேச்சு அடிபடிகிறது. இப்படத்தின் உரிமைகள் 9 கோடிக்கு வாங்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதனால் எதிர்பார்த்த வசூல் இல்லாவிட்டாலும், விஜய் என்ற பெயர் அங்கு உச்சரிக்கப்பட ஆரம்பித்திருக்கிறது.

ரஜினிக்கு அடுத்து சூர்யா, கார்த்தி, விஜய் ஆண்டனி நடித்த படங்கள் கொஞ்சம் வரவேற்பை பெற்ற நிலையில், விஜய் தீவிரமாக களமிறங்கி இருக்கிறார். அதற்கு மகேஷ் பாபுவை வைத்து மகர்ஷி படத்தை இயக்கிய வம்சி படிபள்ளி இயக்கும் தளபதி66 கைகொடுக்கும் என விஜய் அதிகம் நம்புகிறாராம்.

மகாராஷ்ட்ரா முதலமைச்சருடன் மோதும் கருணாஸின் கதாநாயகி

நவ்நீத் கெளர் ராணா, தற்போது மகாராஷ்ட்ரா பத்திரிகைகளில் அதிகம் இடம்பெறும் பெயராகி இருக்கிறது.

மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்ரேயின் இல்லமான ‘மதோஸ்ரீ’ முன்பு, ஹனுமன் சலீசாவை உச்சரிக்கப் போவதாக கடந்த சனிக்கிழமை நவ்நீத் கெளர் ராணா சொன்னதில் இருந்து, மீடியாவுக்கு தீனிபோடும் பரபரப்பு பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். நவ்நீத்தின் வெளிப்படையான பேச்சினால் கோபமடைந்த சிவசேனா தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மறுபக்கம் நவ்நீத் மற்றும் அவரது கணவரும், சுயேச்சை எம்.எல்.ஏவுமான ரவி ராணா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருவரும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிரையில் அடைத்தனர்.

நவ்நீத்தை பைகுலா பெண்கள் சிறையிலும், ரவி ராணாவை அர்துர் ரோடு ஜெயிலிலும் அடைத்தது போலீஸ். இதற்கு பிறகு நடந்த பரபரப்பான காட்சிகளின் தொடர்ச்சியாக லீலாவதி மருத்துவமனையில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டிஸ்சார்ஜ் ஆகியிருக்கிறார் நவ்நீத்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நவ்நீத், ‘’உத்தவ் தாக்க்ரேவுக்கு நான் சவால் விடுகிறேன். மகாராஷ்ட்ராவில் அவர் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடட்டும். அவருக்கு எதிராக நான் போட்டியிடுவேன். பெண்களின் சக்தி என்னவென்பதை அவருக்கு காட்டுவேன். நான் என்ன தப்பு செய்தேன். உத்தவ் அரசு என்னை இப்படி தண்டித்திருக்கிறது. ஹனுமன் சலீசாவை உச்சரிக்க வேண்டுமென்று நான் கேட்டது ஒரு குற்றம் என்றால், அதற்காக நான் சிறைக்கு செல்லவும் தயார். 14 நாட்கள் அல்ல 14 ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை’’ என்று புயலாக மாறி சுழற்றி அடித்திருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கருணாஸ் கதாநாயகனாக நடித்த ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தில் கதாநாயகியாக நடித்த அதே நவ்நீத் கெளர் தான் இந்த நவ்நீத் கெளர் ராணா.

36 வயதாகும் நவ்நீத், பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு மியூசிக் வீடியோவில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு மாடலிங்கில் நுழைந்தார். சினிமா மீது ஆர்வம் ஏற்பட, ’தர்ஷன்’ என்ற கன்னடப் படம் மூலம் சினிமாவில் எண்ட்ரீ ஆனார். அடுத்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மம்முட்டி, ஜூனியர் என்.டி.ஆர்., நந்தமூரி பாலகிருஷ்ணா என பிரபல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

மகாராஷ்ட்ராவில் சுயேச்சை எம்.எல்.ஏவான ரவி ரானாவை திருமணம் செய்ததால் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு, அரசியலை கையிலெடுத்தார்.

2014- சரத் பவாரின் என்.சி.பி. கட்சியின் சார்பில் அமராவதில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனாலும் கணவர் ரவி ரானாவின் பின்னணியினால், 2019-ல் அதே அமராவதி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். நவ்நீத்தின் வெற்றி, சிவசேனாவின் ஆதிக்கம் நிறைந்த கோட்டைக்குள் நுழைந்து பெற்ற மிகப்பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

தற்போது, அமித்ஷாவை சந்தித்து அடுத்தகட்டத்திற்கு செல்ல நவ்நீத் முயற்சிப்பதாகவும், இன்னும் அரசியலில் சூட்டைக் கிளப்புவார் எனவும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

பார்த்திபனின் 3 மாத கால தவம்!

தமிழ் சினிமாவில் சூரியனுக்கே டார்ச் லைட் அடிக்கும் வகையில் புதுமையான நகாசுகளை செய்வதில் பார்த்திபன் ராதாகிருஷ்ணின் பாணி ஒரு தனி ரகம்.

முன்பு ஒரே கதாபாத்திரத்தை வைத்து படமெடுத்தவர், தற்போது ஒரே ஷாட்டில் ஒட்டுமொத்த திரைப்படத்தையும் எடுத்து முடித்திருக்கிறார். படத்தின் பெயர் ’இரவின் நிழல்’.

ஒரே ஷாட்டில் ஒரு முழுப்படமா? அது எப்படி சாத்தியமாயிற்று என்று கோடம்பாக்க வட்டாரத்தில் விசாரித்தோம்.

வழக்கம் போல் தனது கதை, திரைக்கதையை முழுமையாக எழுதிய பின்பு, இம்முறை ஒவ்வொரு காட்சிக்கும் இடையில் அவசியமான கண்டினியுட்டி மற்றும் லொகேஷனை மிகவும் கவனமாக பார்த்து பார்த்து முடிவு செய்திருக்கிறாராம்.

அடுத்து, இப்படத்தில் இரண்டு பேர் மூன்று பேர் மட்டுமிருந்தால், அது ஒரு சாதனையாக அமையாது என்பதால், முடிந்தவரை அதிக கதாபாத்திரங்களை பயன்படுத்துவது என்றும் முடிவு செய்திருக்கிறார்கள்.

இதனால் 500-க்கும் அதிகமான ஜூனியர் ஆர்டிஸ்ட்களை இப்படத்திற்காக கமிட் செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் இடைவிடாமல் மூன்று மாத காலம் ஒத்திகை நடந்திருக்கிறது. அதாவது படம் ஆரம்பிப்பதில் இருந்து, முடியும் வரையிலான காட்சிகள் அனைத்தும் இவர்களுக்கு விளக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொருத்தரின் காட்சி முடிந்ததும் அடுத்தவர்கள் என்ன செய்யவேண்டும், எந்த நேரத்தில் எப்படி உடல் மொழி இருக்கவேண்டுமென என அனைத்தும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பிறகு ஒட்டுமொத்த படமும் ஒரே ஷாட்டில் எடுப்பதற்கு ஏற்றவகையில் ஒத்திகை பார்க்கப்பட்டிருக்கிறது.

மூன்று மாத கால ரிகர்சலுக்கு பிறகே படத்தை ஒரே ஷாட்டில் ஷூட் செய்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...