No menu items!

நியூஸ் அப்டேட்: பிரதமருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

நியூஸ் அப்டேட்: பிரதமருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். இந்நிலையில் இன்று மதியம் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசினார். அப்போது டெல்லியில் நடைபெறவுள்ள திமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு மத்திய அமைச்சகம் அனுமதி வழங்கக் கூடாது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உட்பட 14 கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோரையும் முதல்வர் சந்தித்தார்.

முன்னதாக, டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

கரோனா கட்டுப்பாடுகள் இன்றுடன் நீங்கியது

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளன.

கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2020-ம் ஆண்டு நாடுமுழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் கல்வி கற்பிக்கப்பட்டது. அலுவலகங்களும் ஆன்லைன் முறையில் இயங்கின. திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட அளவு மக்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கைகளால் கரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதைத்தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகள் இனியும் வேண்டாம் என்கிற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கொரோனா பரவல் விகிதமும் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மாநில அரசுகள் விலக்கி கொள்ளலாம். புதிதாக எந்த கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு இனி விதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டுள்ள போதிலும் பொதுமக்கள் 3 மாதமாவது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் ஜூலை 27-ல் தொடக்கம்

செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27-ம் தேதி தொடங்குகிறது.
இது தொடர்பாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 2,500 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இப்போட்டியில் 200 நாடுகளில் இருந்து 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.949 கோடி ஒதுக்கீடு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் 100 நாள் வேலை திட்டத்திற்காக ரூ. 949 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஊரக வளர்ச்சி துறை செயலாளர் அமுதா வெளியிட்டிருக்கும் அரசாணையில் கூறியிருப்பதாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், 100 நாள் வேலை திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் கோரிக்கை வைத்திருந்தார்.அந்த கோரிக்கையின் அடிப்படையில் ரூ. 949 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...