No menu items!

நியூஸ் அப்டேட்: ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக

நியூஸ் அப்டேட்: ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெறக்கோரி மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு, கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளார். இதேபோன்ற நோட்டீஸ் மாநிலங்களவையில் திருச்சி சிவாவால் அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் ஆளுநர் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பிறகு அவைக்கு திரும்பிய திமுக உறுப்பினர்கள் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.

முன்னதாக திமுக எம்.பி. வில்சன் மாநிலங்களவையில் இதுதொடர்பாக தனிநபர் மசோதாவை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதில், ”தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 சட்டங்களை ஆளுநர் ஆர்.என். ரவி, குடியரசு தலைவர் ஆகியோர் ஏற்காத காரணத்தால் அவை முடங்கியுள்ளன” என்று தெரிவித்திருந்தார்.

இலங்கை அமைச்சரவை மொத்தமாக ராஜினாமா!

கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினருடன் மக்களும் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். இந்நிலையில், அதிபர் கோத்தய ராஜபக்சே, அவரது சகோதரரும் பிரதமருமான மகிந்த ராஜபக்சே இருவரைத் தவிர ஒட்டு மொத்தமாக 26 அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் சமர்ப்பித்தனர். அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களுடன் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பிரதமர் மகிந்த ராஜபக்சே சந்தித்தார். 26 அமைச்சர்களின் ராஜினாமாவையும் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்றுக்கொண்டு உள்ளார். பதவி விலகியுள்ள அமைச்சர்களில் ராஜபக்சேவின் சகோதரர்கள் நிதியமைச்சர் பசில், விவசாயத்துறை அமைச்சர் சமல் மற்றும் ராஜபக்சே மகனும் விளையாட்டுத்துறை அமைச்சருமான நமல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பிரதமரும் அதிபரும் பதவி விலக வேண்டும் என்று போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது.

இலங்கை: அனைத்து கட்சிகளுக்கும் அதிபர் அவசர அழைப்பு

இலங்கையில் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்துள்ள நிலையில், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட்டும் இன்று பதவி விலகினார். இந்நிலையில், இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். அமைச்சர் பதவிகளை ஏற்று பொருளாதார நெருக்கடியை தீர்க்க உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இளையராஜா வழக்கு: இசை நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவு

இளையராஜா இசையமைத்து, 1978 -80களில் வெளியான 20 தமிழ் படங்கள், 5 தெலுங்கு, 3 கன்னட, 2 மலையாளம் என மொத்தம் 30 படங்களின் இசை பணிகளை இன்ரிகோ ரெக்கார்டிங், அகி மியூசிக், யுனிசிஸ் ஆகிய மூன்று இசை நிறுவனங்கள் பயன்படுத்த தனி நீதிபதி கொண்ட அமர்வு முன்னதாக அனுமதி அளித்திருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ரிகோ ரெக்கார்டிங், அகி மியூசிக், யுனிசிஸ் இன்போ ஆகியவை நான்கு வாரங்களில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மலையாள நடிகர் கைனகரி தங்கராஜ் காலமானார்

மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘லூசிபர்’, மற்றும் ‘இஷ்க்’, ‘ஹோம்’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் கைனகரி தங்கராஜ். கடைசியாக மம்முட்டியின் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்திலும் நடித்தார். நாடகங்களில் நடித்து சினிமாவுக்கு வந்த கைனகரி தங்கராஜ் முதலில் பிரேம் நசீர் நடித்த ‘அனாப்பச்சன்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். 35-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். 77 வயதான கைனகரி தங்கராஜுக்கு கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று மரணம் அடைந்தார். கைனகரி தங்கராஜ் மறைவுக்கு மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

போதை விருந்து: திரை பிரபலங்கள் உள்பட 148 பேர் சுற்றி வளைப்பு

ஹைதராபாத்திலுள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்த போதை விருந்து பற்றி தகவல் அறிந்த போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இதில் திரைப் பிரபலங்கள் உள்பட 148 பேரை சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆந்திரா மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகள் நிகாரிகா, திரைப்பட பாடகர் ராகுல், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ரேணுகா சவுத்ரி மகள், ஆந்திரா முன்னாள் டி.ஜி.பி மகள் மற்றும் முன்னாள் எம்.பியின் மகன் என விஐபியின் பிள்ளைகள் கலந்துகொண்டதும் இவர்களுக்கு அந்த ஓட்டலில் பிரவுன் சுகர், கொகைன் உள்ளிட்ட போதைப் பொருள் சப்ளை செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது. ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வதற்காக 5 பாக்கெட்டுகளில் வைத்திருந்த 12 கிராம் எடையுள்ள கொகைனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...