தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அமைச்சர் துரைமுருகனை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கொரோனா பாதிப்பு ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும்: ஆய்வில் தகவல்
கொரோனாவை உண்டாக்கும் சார்ஸ் வைரசும் அதன் பாதிப்புக்கு உடல் காட்டும் எதிர்வினையும் சுவாச உறுப்புகளை மட்டுமல்லாமல் இதர திசுக்களையும் சேதப்படுத்துவது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
மும்பை ஐ.ஐ.டி., மும்பை ஜஸ்லோக் ஆஸ்பத்திரி ஆகியவற்றை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, கொரோனா வைரஸ், ஆண்களின் குழந்தை பேறு திறனில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை அறிய ஆய்வு நடத்தினர். இதற்காக குழந்தை பேறு பிரச்சினை இல்லாத 20 முதல் 45 வயது வரையிலான 27 ஆண்களை ஆய்வுக்கு பயன்படுத்தினர்.
இந்த 27 ஆண்களின் விந்தணுவில், இனப்பெருக்க நிகழ்வுடன் தொடர்புடைய புரோட்டீன்களை ஆய்வு செய்து ஒப்பிட்டு பார்த்ததில் கொரோனா தாக்காத ஆண்களின் புரோட்டீன்களை விட கொரோனா தாக்கி குணமடைந்த ஆண்களின் புரோட்டீன்கள் பாதிக்கும் குறைவாக இருந்தன. மேலும், கொரோனா தாக்கி குணமடைந்த ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையும் கணிசமாக குறைந்திருந்தது. அதன் நகரும் தன்மை, சரியான வடிவிலான விந்தணு எண்ணிக்கை ஆகியவையும் குறைவாக காணப்பட்டன.
இதன்மூலம், லேசான, மிதமான கொரோனா பாதிப்பு கூட ஆண்களின் குழந்தை பேறு திறன் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்பு ஏற்படுத்தி, மலட்டுத்தன்மைக்குக் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை அயோத்தியா மண்டபம் விவகாரம்: பாஜகவினர் மீது வழக்குப் பதிவு
சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதைக் கண்டித்து போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, அயோத்தியா மண்டபம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், மண்டபம் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமானது எனவும், வேறு எந்த தனிப்பட்ட அமைப்புகளும் அதில் தலையிட முடியாது எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் மண்டபத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்காக மண்டபத்திற்கு வந்தனர். அப்போது பாஜகவினர் அங்குத் திரண்டு வந்து மண்டபத்தின் கதவுகளைப் பூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஏராளமான போலீசார் அங்குக் குவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன், மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்பட 75 பேர் மீது, தடையை மீறி செயல்படுதல் மற்றும் சட்ட விரோதமாகத் தடுத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை அசோக் நகர் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியது!
சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது பரவல் குறைந்திருந்தாலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து பல்வேறு நாடுகளில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 62,05,928 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பட்டியலில் 8,21,03,067 பாதிப்பு, 10,12,461 உயிரிழப்புடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 4,30,36,573, பாதிப்பு, 5,21,723, உயிரிழப்புடன் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
நேட்டோவில் சேர விருப்பம் தெரிவித்த பின்லாந்து: ரஷ்யா எச்சரிக்கை
நேட்டோவில் சேர முயன்றதாகக் கூறி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைன் மீது 48வது நாளாகத் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, துறைமுக நகரான மரியுப்போலை முற்றுகையிட்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைனை தொடர்ந்து பின்லாந்தும் நேட்டோவில் இணைய ஆர்வம் தெரிவித்துள்ளது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஐரோப்பாவில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவராது எனவும் நேட்டோ மோதலை நோக்கிய ஒரு கருவியாகவே உள்ளது எனவும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
தொடர்ந்து ஏறும் தங்கம் விலை: ஒரே வாரத்தில் ரூ. 1000 உயர்வு!
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் சவரனுக்கு ரூ. 1000 உயர்ந்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கிய பின்னர் தங்கத்தின் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது. இந்நிலையில், நேற்று மாலை சவரனுக்கு ரூ. 168 அதிகரித்து விற்பனையான தங்கத்தின் விலை இன்று காலை மேலும் சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.
தற்போது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ. 4,956-க்கு விற்பனைக்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 39,648 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளி 72.90 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 72,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.