முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். திமுக அலுவலகமான ‘அண்ணா கலைஞர் அறிவாலயம்’ கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
நாளை மதியம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசவுள்ளார். அப்போது தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு அவர் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுங்கச்சாவடி கட்டணம் ஏப்ரல் 1 முதல் உயர்வு
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன. கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக வாகனங்கள் ஒரு முறை செல்ல இதுவரை ரூ.30 கட்டணம் இருந்தது. அது குறைந்தபட்சமாக ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.35 ஆகிறது. திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.45-ல் இருந்து ரூ.55 ஆக அதிகரிக்கிறது.
இலகுரக வணிக வாகனங்கள் மற்றும் மினி பஸ் ஆகியவை ஒரு முறை செல்ல ரூ.45 ஆக இருந்த கட்டணம் ரூ.55 ஆக உயர்த்தப்பட உள்ளது. திரும்பி வருவதற்கு ரூ.70 ஆக இருந்த கட்டணம் ரூ.90 ஆக உயர்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 75 காசுகள் விலை உயர்ந்து 106 ரூபாய் 69 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 76 காசுகள் அதிகரித்து 96 ரூபாய் 76 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 9 நாட்களில் 8 முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே இஸ்தான்புல் நகரில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அலெக்சாண்டர் போமின், “ பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. கீவ் அருகே செர்னிவ் பகுதியில் படைகளை குறைக்க உள்ளளோம்” என்றார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் வேறு நாடுகளுடன் சேர்ந்து ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற ரஷ்யாவின் நிபந்தனயை உக்ரைன் ஏற்றுக்கொண்டது.