பட்ஜெட் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்காக சட்டசபை கூட்டம் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்குகிறது. இது தொடர்பாக சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் ஏப்ரல் 6 முதல் மே மாதம் 10-ம் தேதி வரை நடத்தப்படும். அலுவல் ஆய்வுக் குழுவில் இந்த முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கூட்டம் நடைபெறும்” என்றார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏற்கனவே 31 சதவீதம் பெறும் நிலையில், இனிமேல் 34 சதவீத அகவிலைப்படி பெறுவார்கள். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு கூடுதலாக 9544.5 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். 47.68 லட்சம் ஊழியர்களும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் – பான் கார்டுகளை இணைக்க நாளை கடைசி நாள்
பான் கார்டு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கெடு நாளையுடன் (மார்ச் 31) முடிகிறது. நாளைக்குள் இணைக்காவிட்டால் அதன்பிறகு பான் கார்டு செயலிழந்துவிடும். மேலும், கால அவகாசத்துக்குள் பான் – ஆதார் அட்டைகளை இணைக்காவிட்டால் வருமானவரித் துறையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் செயலிழந்த பான் கார்டை பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
220 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்தப்பட்ட 220 கிலோ கஞ்சா திண்டுக்கல் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லாரியில் கஞ்சா கடத்திய அருண்குமார் என்பவரையும் கிருஷ்ணன் என்பவரையும் திண்டுக்கல் போதை தடுப்பு போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.