நயன் – விக்னேஷ் சிவன் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மணமக்கள் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.
ஆனால் இந்தத் திருமணம் பல சர்ச்சைகளையும் உண்டு பண்ணியிருக்கிறது.
ஜூன் 8 ஆம் தேதி விக்னேஷ் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கேள்வி கேட்க முயன்ற புதிய தலைமுறை செய்தியாளர் தடுக்கப்பட்டார், வார்த்தை தாக்குதல்களுக்கு ஆளானார். காவல் துறைக்கு புகார் சென்றது. பிறகு இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினை சுமூகமாக முடிந்தததாக அறிவிக்கப்பட்டது.
அடுத்து ஜூன் 9ஆம் தேதி நடந்த திருமணத்தின்போது ஊடகத்தினர் ஓட்டல் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கேயும் செய்தியாளர்களுக்கு திருமண ஜோடியின் பாதுகாவலர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
அடுத்து திருமணம் முடிந்ததும் சாமி கும்பிட திருப்பதி சென்ற நயன் ஜோடி, காலில் செருப்பணிந்து வலம் வந்தது கடுமையான கண்டனங்களை எழுப்பியது. விக்னேஷ் சிவன் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
இன்று நயனும் விக்னேஷ் சிவனும் செய்தியாளர்களை சந்திப்பதாக தாஜ் க்ளப் ஹவுஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 12 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நயன் ஜோடி வந்தது 2 மணிக்கு. இரண்டு மணி நேரம் செய்தியாளர்கள் காத்திருந்தார்கள்.
ஏதற்கு இத்தனை குழப்பங்கள்? எதற்கு இத்தனை சர்ச்சைகள்? மகிழ்ச்சியான நிகழ்வை மன கசப்புகளை உண்டாக்கும் நிகழ்வாக மாற்றியது ஏன்?
திரையுலகத்தை சார்ந்த சிலரைக் கேட்டோம். பெயர் குறிப்பிட விரும்பாத அவர்கள் கூறிய சில கருத்துக்கள்.
‘நயன் பெரிய நட்சத்திரம். லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்த்தில் இருப்பவர். செய்தியாளர்களை அவர் சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. காரணம் அவர்கள் சங்கடமான கேள்விகளை கேட்பார்கள், அதற்கு வெளிப்படையாக பதில் சொன்னால் மேலும் சங்கடங்கள் வரும் என்பதால் பேட்டிகளைத் தவிர்க்கிறார். அது மட்டுமில்லாமல் தான் நடித்த பட விழாக்களுக்கே வருவதில்லை. திருமண விழாவுக்கு செய்தியாளர்களை அழைத்ததே பெரிய விஷயம்” என்றார் ஒருவர்.
”திரையுலகில் பத்திரிகையாளர்களுக்கு பெரிய மரியாதை இல்லை. அந்தக் காலத்தில் ஊடகங்களை பார்த்து பயப்படுவார்கள். அவர்களை பகைத்துக் கொண்டால் நம்மைப் பற்றிய செய்திகளை தவிர்த்துவிடுவார்கள், நமக்கு விளம்பரம் கிடைக்காது என்ற அச்சம் இருந்தது.
அது மட்டுமில்லாமல் நெகடிவ்வாக எழுதிவிடுவார்கள் என்ற பயமும் இருந்தது. ஆனால் இப்போது சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட நிலையில் நட்சத்திரங்களுக்கு மக்களை சென்றடைய அவர்களது சமூக ஊடகங்களை போதுமானதாக இருக்கிறது. முன்பு ஒரு செய்தியாளர் சந்திப்பு 20லிருந்து 30 செய்தியாளர்கள் வருவார்கள். ஆனால் இன்று 300 பேர் வருகிறார்கள். தினசரிகள், வார இதழ்கள், ஆங்கிலம், தமிழ், வெப்சைட்டுகள், யூடியூப் சேனல்கள் என்று எல்லோரும் வந்து நிற்கிறார்கள். இத்தனை பேரை கவனிப்பது எப்படி? கவனிப்பு என்பது உங்களுக்குப் புரியும். இப்படி கவனிக்கப்படும்போது அவர்கள் மீது சினிமாக்காரர்களுக்கு எப்படி மரியாதை வரும்.” என்று பொரிந்து தள்ளினார்.
“செய்தியாளர்களுக்கு அதிருப்தி இருந்தால் எதற்கு நயன் – விக்னேஷ் ஜோடி பின்பு ஓடி வருகிறார்கள்? நாட்டில் வேறு செய்தியே இல்லையா?” என்ற கேள்வியை எழுப்பினார் மற்றொரு சினிமாக்காரர்.
இந்தக் கேள்விகளுடன் ஒரு மூத்தப் பத்திரிகையாளரை சந்தித்தோம்.
“நயன் திருமணத்துக்குப் பின்னால் ஏன் ஓடி வருகிறீர்கள் என்ற கேள்வியில் அர்த்தமே இல்லை.
நயன்தாரா தமிழ்நாட்டின் மிகப் பெரிய பிரபலம். அவருக்கு திருமணம் என்பது நிச்சயம் செய்திதான்.
பல மக்கள் ஆவலுடன் விரும்பும் செய்தி. மக்கள் விரும்புவதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு செய்தியாளர்களுக்கு இருக்கிறது.
கேள்வி கேட்கும் செய்தியாளரை அடாவடியாக பேசுவது எந்த விதத்தில் நியாயம். பதில் சொல்ல விரும்பவில்லை என்று கடந்து செல்ல வேண்டியதுதானே? இவர்களைவிட மிகப் பெரிய தலைவர்கள் எல்லோரும் எளிய பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்கள், விளக்கம் அளிக்கிறார்கள்.
மக்கள் வெளிச்சத்தில் இருப்பவர்கள், பொது வாழ்க்கையில் இருப்பவர்களிடம் கேள்விகள் கேட்கப்படும். அதை மிரட்டி தடுப்பது தவறு.
இந்த ஜோடி யாரையும் மதிக்கவில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. 12 மணி செய்தியாளர் சந்திப்புக்கு 2 மணிக்கு வருவது என்பது அநியாயம். ஏன் காத்திருக்கிறீர்கள்? வீட்டுக்குப் போக வேண்டியதுதானே என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
செய்தியை கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் செய்தியாளர்கள் இந்த அவமானங்களை பொறுத்துக் கொண்டுதான் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள்.
அவர்கள் காத்திருப்பதை அலட்சியமாக கருதக்கூடாது. நேரத்துக்கு செல்ல வேண்டும் என்ற பொறுப்புணர்வு கூட இல்லையென்றால் அவர்களை என்ன சொல்வது?
செய்தியாளர்கள் ‘கவனிக்க’ப்படுவதால்தான் அவர்களை திரையுலகத்தினர் அலட்சியப்படுத்துகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள் என்ற வாதம் வைக்கப்படுகிறது. கவனிக்கப்படுவதை பொதுப்படுத்தி அவர்கள் செய்யும் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க முயலுவது தவறு. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் யார்? ஆஸ்கார் விருது வாங்கியவர்களா அல்லது நடிப்புக்காகவும் இயக்கத்துக்காகவும் தேசிய விருது வாங்கியவர்களா?
நயன்தாராவின் கவர்ச்சிகரமான நடிப்பு மக்களை ஈர்த்திருக்கிறது, அவரின் காதலனாக இருப்பதால் விக்னேஷ் சிவனுக்கு கவனிப்பு கிடைக்கிறது. அவ்வளவுதான்.
ஊடகவியலாளர்களும் தாங்கள் அவமானப்படுத்தப்படுவதாக கருதினால் அது குறித்து கடுமையான கண்டனங்களை எழுப்ப வேண்டும். இல்லையென்றால் வரும் காலத்தில் மேலும் பல அதிகபட்ச அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று முடித்துக் கொண்டார் அந்த பத்திரிகையாளர்.
நட்சத்திரங்கள் உணர வேண்டும். ஊடகவியலாளர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும்.