தமிழக சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை விடுதியில் இன்று காலை பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. காளிகாம்பாள் காளிதாஸ் தலைமையில் 20 சிவாச்சாரியார்கள் திருமண சடங்குகளை செய்தனர்.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் ஹைலைட் முதியோர், ஆதரவற்றோருக்கு அவர் அளித்த உணவு. தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களில் வாழும் சுமார் 1 லட்சம் பேருக்கு உணவு வழங்க நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி ஏற்பாடு செய்திருந்தது. வெளியில் ஒரு லட்சம் பேருக்கு உணவு அளித்தாலும் திருமணத்துக்கு அழைக்கப்பட்டவர்கள் மிகக் குறைவு. ரஜினிகாந்த், ஷாரூக்கான், அஜித்குமார், சரத்குமார், கார்த்தி, விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், மோகன்ராஜா, அட்லி, ஏ.எல்.விஜய், டிடி வரை அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் மிகப் பிரபலங்கள்.
சாப்பாடு மெனு
திருமணத்துக்கு வந்த வந்த உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கும் பிரம்மாண்டமான முறையில் விருந்தளித்துள்ளனர். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தீவிர அசைவ விரும்பிகள் என்றாலும், இந்து முறைப்படி நடைபெறும் திருமணம் என்பதால் சுத்த சைவ உணவுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
பன்னிர் பட்டானி கறி, பருப்புக் கறி, அவியல், மோர் குழம்பு, மிக்கன் செட்டிநாட்டு கறி, உருளை கார மசாலா, வாழைக்காய் வருவல், சென்னா கிழங்கு வருவல், சேப்பக்கிழங்கு புளிக்குழம்பு, கேரட் பொரியல், பீன்ஸ் பொரியல், வடகம், ஏலக்காய் பால், பாதாம் அல்வா, இளநீர் பாயாசம், கேரட் ஐஸ் கிரீம் உள்ளிட்ட 27 பதார்த்தங்கள் உணவுடன் வழங்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமானது பலாப்பழ பிரியாணி.
பலத்த பாதுகாப்பு
திருமணம் நடைபெற்ற மாமல்லபுரம் கடற்கரை விடுதியின் முன்புறம், கடற்கரைப் பகுதி என அனைத்து இடத்திலும் 80-க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். அழைப்பிதழ் இருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனால் செய்தியாளர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் சிறிது மோதல் ஏற்பட்டது.
நெட்ஃப்ளிக்ஸ் வெளியீடு
நயன் – விக்கி திருமணத்தை ஆவணப் படமாக எடுக்கிறார் கவுதம் மேனன். நெட்ஃப்ளிக்ஸில் வெளியிடப்படும். இதற்காக கோடிகளில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.