No menu items!

’லியோ’ சர்ச்சைக்குள்ளாவது ஏன்??

’லியோ’ சர்ச்சைக்குள்ளாவது ஏன்??

’தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் வசூலைக் குவிக்கும் கமர்ஷியல் ஹீரோ’

’தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார்’

இப்படி பலவிதமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய்யின் பிம்பம் சல்லி சல்லியாக உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது.

காரணம், ’லியோ’ பட வியாபாரம் தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி மற்றும் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள்.

பொதுவாகவே, விஜய் நடித்தப் படங்கள் வெளியாகும்  போதெல்லாம் ஏதாவது ஒரு பஞ்சாயத்து கிளம்பும். பின்னர் அது தானாகவே அடங்கிவிடும். ஆனால் ’லியோ’ படம் அப்படியொரு புஸ்வானமாக இல்லை. கண்ணி வெடிகளைப் போல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வெடித்து கொண்டிருக்கிறது.

என்னதான் பிரச்சினை?

’மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி, ‘விக்ரம்’ என்ற கமலின் மிகப்பெரிய வெற்றிப்படத்திற்குப் பிறகு லோகேஷ் இயக்கும் படம். ரசிகர்களால் அதிகம் முணுமுணுக்கப்பட்ட ‘லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸ்’. மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளம். இப்படி பல எதிர்பார்புகளுக்கு இடையே ‘லியோ’ வெளியீட்டுக்கு தயாரானது.

திரையரங்கு உரிமையாளர்களும் லியோவை தங்களது திரையரங்குகளில் வெளியிட ஆர்வமாய் இருந்தார்கள். பட வியாபார பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.

தமிழ் சினிமாவில் பெரும் நட்சத்திரங்களின் படங்கள் பெரும்பாலும் ‘மினிமம் கியாரண்டி’ என்ற முறையில்தான் வியாபாரம் செய்யப்பட்டு வந்தன. அதாவது, ஒரு குறிப்பிட்ட தொகைக்குப் பிறகு வரும் வசூலில் தயாரிப்பாளரும், திரையரங்கு உரிமையாளர்களும் பங்கிட்டு கொள்வார்கள்.

ஆனால் லியோ படத்தை ‘டிஸ்ட்ரிபியுஷன்’ முறையில் வெளியிட விரும்புவதாக தயாரிப்பு நிறுவனமான ’7 ஸ்கிரீன் ஸ்டூடியோ’ சார்பில் கூறப்பட்டது. இதில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம். ஆனால், எங்களுக்கு 80 சதவீதம் வேண்டுமென தயாரிப்பு நிறுவனம் ஒரு நிபந்தனை விதித்தது. இதைக்கேட்டு பதறிப் போனது திரையரங்கு உரிமையாளர்கள் வட்டாரம்.

வசூலில் 80 சதவீதத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்துவிட்டால், மீதருக்கும் 20 சதவீதத்தில் தங்களுடைய திரையரங்கு செலவுகள், மின்சார செலவு, வரி போக மீதம் சொற்ப தொகை மட்டுமே மிஞ்சும். அதற்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படவேண்டுமென தயாரிப்பாளர்களிடையே ஒரு தயக்கம் உண்டானது.

ஆனால் வேறு பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் அடுத்த சில நாட்களில் வெளியாகாத சூழலில், திரையரங்கு உரிமையாளர்கள் லியோ படத்தயாரிப்பாளரின் நிபந்தனைக்கு உட்பட்டே ஆகவேண்டிய கட்டாயம் உருவானது.

படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட அக்டோபர் 19-ம் தேதிக்கு முந்தைய மாலை வரை வியாபாரம் முடியவில்லை. நாளை ரிலீஸ் என்றாலும், தயாரிப்பாளர் கொஞ்சம் கூட இறங்கி வரவில்லை.

வேறு வழியின்றி திரையரங்கு உரிமையாளர்கள் லியோவை தயாரிப்பாளர் போட்ட நிபந்தனையுடன் வெளியிட ஆயத்தமானார்கள். இங்கே திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் மோதல் உருவானது.

படம் வெளியானது. சமூக ஊடகங்களில் லியோவைப் பற்றி கலவையான விமர்சனங்கள் வெளிவர ஆரம்பித்தன. இதனால் லியோவின் வசூல் பெரியளவில் பாதிக்கப்படும் என்ற பேச்சு எழுந்தது.

ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான, ரஜினி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் வெளியான முதல்வாரம் 375.40 கோடி வசூல் செய்ததாக ஜெயிலரை தயாரித்த சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அடுத்து ஆகஸ்ட் 25-ம் தேதி, ஜெயிலர் சுமார் 525 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. தற்போது 50 நாட்களை கடந்திருக்கும் ஜெயிலர் இதுவரையில் சுமார் 650 கோடி வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்து தகவல்களை வெளியிடும் Sacnilk.com தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் வெளியான அனைத்து மொழிகளையும் சேர்த்து இப்படத்தின் வசூல் சுமார் 343 கோடி என கூறப்படுகிறது.

ஜெயிலரின் வசூல் இதற்கு முன்பு தமிழ்ப்படங்கள் பெற்ற பல வசூல் சாதனைகளை முறியடித்துவிட்டது.

இதனால் ரஜினியின் ஜெயிலரின் வசூலை விஜயின் லியோ முறியடிக்குமா என்று யாரோ கொளுத்திப் போட, பிரச்சினை அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தது.

லியோவின் வசூல் விவரத்தை தொடர்ந்து வெளியிடப்போவதாக சொன்ன தயாரிப்பாளர் முதல் நாள் மட்டும் வசூல் நிலவரத்தை வெளியிட்டார். ஜெயிலர் படத்தின் முதல் 7 நாட்கள் வசூலை சன் பிக்சர்ஸ் வெளியிட்டதைப் போல, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோவும் வெளியிடும் என எதிர்பார்த்த நிலையில், அப்படி நடக்கவில்லை. இதனால் சமூக ஊடகங்களில் லியோ வசூல் பற்றிய சர்ச்சைகள் கிளம்பின.

லியோவின் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை. அதனால்தான் அதிகாரப்பூர்வமாக வசூல் பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை என கூறப்பட்டது.

ஒரு பக்கம் இன்ப்ளூயன்ஸர்கள் தங்கள் பதிவுகளில் லியோ இவ்வளவு வசூலானது ஒரு பக்கம் லியோவுக்கு ஆதரவாக குறிப்பிட, மறுபக்கம் இந்த வசூல் பொய்யானது. வசூல் இவ்வளவுதான் என்று மற்றொரு பிரிவினர் ஒரு கணக்கைப் பதிவிட்டனர்.

இதனால் விஜய் ரசிகர்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையே சமூக ஊடகங்களில் பெரிய கமெண்ட் கலாட்டா அரங்கேறியது.

இறுதியில் லியோவின் முதல் வார வசூல் 461 கோடிக்கு மேல் என தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது.

ஆனாலும் பிரச்சினை ஓயவில்லை. லியோ தயாரிப்பு தரப்பு யாரையோ திருப்தி செய்வதற்காக பொய்யான எண்ணிக்கையை வெளியிடுகிறது என்றும் புதிதாக கிளப்பிவிடப்பட்டது.

எப்படியாவது ‘ஜெயிலர்’ படத்தின் வசூலை விட ‘லியோ’வின் வசூல் அதிகம்  என்று இருந்தே ஆகவேண்டுமென தயாரிப்பாளர் லலித் குமார் விடாப்பிடியாக இருப்பதாக கூறுகிறார்கள். இதனால்தான் வசூலை அதிகரித்து கூறப்படுவதாக சிலர் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, விஜய்க்கு நெருக்கமாக இருக்க வேண்டும். அடுத்தடுத்து அவரை வைத்து படங்கள் எடுக்கவேண்டும். விஜய் அரசியலுக்குள் நுழைந்தால், அவருக்கு அருகே இருக்க வேண்டுமென லலித் விரும்புவதாகவும் சொல்கிறார்கள்.

இதுதான் லியோ வியாபாரத்திலும், வசூலிலும் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கிவிட்டது.  இதன் தொடர்ச்சியாகதான் இப்போது #LeoScam என்று புதிய ஹேஷ்டேக் ட்ரெண்ட்டிங் ஆக ஆரம்பித்திருக்கிறது. வெளிநாடுகளில் 5 கோடிக்கும் மேல் செலவு செய்யப்பட்டு ப்ராக்ஸி புக்கிங் செய்யப்பட்டு, ரசிகர்கள் லியோவை திரையரங்குகளில் பார்த்தது போல் காட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்திருக்கிறார்கள்.

இப்படி திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சினைகள். லியோவை போல் இதுவரை எந்தப்படமும் இப்படி விதவிதமான பிரச்சினைகளை சந்தித்து இருக்க வாய்ப்புகள் இல்லை.

உண்மையான வசூலை தயாரிப்பாளர் வெளியிடுவார். அதுவரை காத்திருக்கலாம். ஆனால் அதற்காக ரசிகர்கள் மோதிக்கொள்வது சரியானது அல்ல என்பதே நடுநிலையாளர்களின் கருத்து.

தொடர்ந்து தனது ரசிகர்களுக்காக படம் கொடுக்கவேண்டும். முடிந்தவரை நல்லப் படங்களாக நடிக்க வேண்டும். ரசிகர்கள் அதைக் கொண்டாட வேண்டும். இந்த மூன்று விஷயங்களில்தான் விஜய் கவனம் செலுத்துவது வழக்கம்.

அதன்படி, லியோ படத்தை பொறுத்தவரை விஜய்க்கு எந்த நெருக்கடியும் இல்லை.  லியோ வெளியானதும், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்க கிளம்பிவிட்டார்.

திரைப்படங்களைப் பார்க்கும் ரசிகர்கள், அப்படம் நன்றாக இருந்தால் கொண்டாடலாம். நன்றாக இல்லையென்றால் அமைதியாக கடந்துவிடலாம். அதைவிட்டுவிட்டு மாறி மாறி வார்த்தைப் போர்களில் சமூக ஊடகங்களை அலற விடும் பழக்கத்தை கைவிட்டு, சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்த்து ரசித்து மகிழ்ந்தால் நன்றாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...