கமலின் மகள் என்ற பெரும் அடையாளத்தோடு தமிழில் நடிகையாக களமிறங்கிய ஷ்ருதி ஹாஸனுக்கு அப்பா பெயரை வைத்து பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் தமிழில் இருந்து தெலுங்கு பக்கம் போனார். அங்கேயும் அடுத்தடுத்து வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக ஆடினார், பாடினார்.
இப்போது நானியும், மிருணாள் தாகூரும் நடித்திருக்கும் ‘ஹாய் நானா’ படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடினார்.
இவர் பெரிதும் நம்பியிருக்கும் படம், பிரபாஸ் நடித்திருக்கும் ‘சலார்’ படம் மட்டுமே. இதில் பிரபாஸூக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்தப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் ஒரு நேர்க்காணலில் ஷ்ருதி ஹாஸன் தனது வாழ்க்கையின் முக்கிய தருணங்கள் பற்றி மனம்விட்டு பேசியிருக்கிறார். அதில் முன்பெல்லாம் அடிக்கடி பார்ட்டிக்கு போவது பற்றியும், மது அருந்தியது பற்றியும் கூறியிருக்கிறார்.
நான் சில வருடங்களுக்கு முன்பு பார்ட்டிக்கு போறது பழக்கம். ஆனால் இப்போ 8 வருஷமா அந்தப் பக்கமே போறது இல்ல. இப்ப நாம பார்ட்டிக்கு போய் மது அருந்தாமல் இருக்கும் போது, மற்றவர்கள் குடித்துவிட்டு பண்ணுவதை நம்மால் தாங்க முடியாது.
இப்ப எனக்கு எந்த வருத்தமும் இல்ல. இதுவரை ஹேங் ஓவர் ஆனதும் இல்ல. இப்படி இருக்குறது எனக்கு பிடிச்சிருக்கு. நான் குடிப்பதை நிறுத்தினால, குடிக்கிறவங்க இப்படிதான்னு நான் யாரையும் சொல்றது இல்ல. குடிச்சது ஒரு காலக்கட்டம் அவ்வளவுதான்.
மது குடிச்சாலும், இதுவரைக்கும் ட்ரக் எதுவும் நான் பயன்படுத்தியது இல்ல. என் வாழ்க்கையில் இது ஒரு நல்ல விஷயம்.
இப்ப குடிக்கிற, சிகரெட் பிடிக்கிற நண்பர்களிடம் இருந்து தள்ளி இருக்க முயற்சி செய்யுறேன்.’ என்று மனம் விட்டு தனது வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்து இருக்கிறார் ஷ்ருதி ஹாஸன்.
’பாஸ்’ விஜய் பட டைட்டிலா?
வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஸ் தயாரிக்கும் ‘தளபதி 68’ படத்தின் ஷூட்டிங் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு அட்டகாசமான செட் போடப்பட்டது. இங்கு இப்போது திட்டமிட்ட ஷெட்யூல் முடிவடைந்து இருக்கிறது.
இந்நிலையில் விஜய் படத்தின் பெயர் இதுதான் என்று இணையத்தில் ஒரு பெயர் சுற்றிக்கொண்டிருக்கிறது. அந்தப் பெயர் ‘பாஸ்’.
சமீபகாலமாக, விஜய் படங்களுக்கு ஆங்கிலத்தில்தான் பெயர்கள் வைக்கப்பட்டன. ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’, ’லியோ’ என ஆங்கிலத்தில் வைக்கப்பட்டதால். அதே சென்டிமெண்ட்டில் இப்போதும் ஆங்கிலத்தில் பெயர் வைக்க திட்டமிட்டு இருப்பதாக இணையத்தில் யூகம் கிளம்பியது.
அதற்கேற்ற மாதிரி வெங்கட் பிரபுவும் தன்னுடைய முந்தையப் படத்திற்கு ‘கஸ்டடி’ என்று ஆங்கிலத்தில்தான் பெயர் வைத்திருந்தார். இந்தப் படத்தில் விஜய்க்கு இப்போது ஜோடியாக ஒப்பந்தமாகி இருக்கும் மீனாட்சி செளத்ரிதான் ஹீரோயின்.