No menu items!

கமல் மாறியது ஏன்? – மிஸ் ரகசியா

கமல் மாறியது ஏன்? – மிஸ் ரகசியா

‘பனிக்காலம் முடிஞ்சு வெயில்காலம் ஆரம்பிக்கறது நல்லாவே தெரியுது” என்று வியர்வையை துடைத்துக்கொண்டே சோர்வாக ஆபீசுக்குள் நுழைந்த ரகசியாவுக்கு லெமன் ஜூஸ் கொடுத்தோம்.

“உங்க லெமன் ஜூஸ்ல உப்பு இருக்கா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

”உப்பு, காரம், மசாலாலாம் நீ கொடுக்கிற நியூஸ்லதான் இருக்கணும். சரி, திடீர்னு கவர்னர் கொடுத்த டீ பார்ட்டில முதல்வரும் அமைச்சர்களும் கலந்துக்கிட்டாங்களே. இந்த மனமாற்றத்துக்கு என்ன காரணம்?’

“பொங்கல் விருந்தைப் போலவே ஆளுநரோட குடியரசு தின தேநீர் விருந்தையும் புறக்கணிக்க திமுகவோட கூட்டணி கட்சிகள் முடிவு எடுத்திருந்தது. இதுபத்தி கேள்விப்பட்ட ஆளுநர், மத்த கட்சிகள் இந்த விருந்தைப் புறக்கணிச்சாலும், ஆளும் கட்சியான திமுக இந்த விருந்துல கலந்துக்கணும்னு உறுதியா இருந்திருக்காரு. அதனாலேயே தன்னோட செயலாளரை கூப்பிட்டு, அவரே அதுக்கான அழைப்பிதழை முதல்வர்கிட்ட கொடுக்கணும்னு சொல்லி அனுப்பி இருக்காரு. ஆளுநரும் விருந்துக்கு வரச்சொல்லி முதல்வரை போன்ல கூப்டிருக்காரு”

“கவர்னர் என்ன திடீர்னு வெள்ளைக் கொடி காட்டிட்டாரு?”

”தமிழ்நாடு பிரச்சினைல டெல்லி சப்போர்ட் ஆளுநருக்கு இல்லை. சுமூகமாக போகச் சொல்லியிருக்காங்க. அதே மாதிரி டெல்லியில இருந்து ஆளுநர்கிட்ட சமாதானமா போகச் சொல்லி முதல்வருக்கும் வேண்டுகோள் வந்திருக்கு. அதனால பிரச்சினைய நீட்டிக்க வேண்டாம்னு முதல்வரும் கவர்னர் மாளிகைக்கு போனாரு”

“திமுகவுக்காக விருந்தைப் புறக்கணிச்ச கூட்டணிக் கட்சிகள் கடுப்பாயிருப்பாங்களே!”

“ஆமாம். மனசுக்குள்ள குமுறிக்கிட்டுதான் இருக்காங்க. காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இது கொஞ்சம்கூட பிடிக்கலை. இருந்தாலும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தலை மனசுல வச்சு அமைதியா இருக்காங்க. டி.ஆர்.பாலுகிட்ட தொல்.திருமாவளவன் தன்னோட வருத்தத்தை தெரிவிச்சிருக்கார். அதுக்கு டி.ஆர்.பாலு, ‘மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் மட்டுமில்ல. தமிழ்நாட்டு முதல்வரும்கூட. மாநிலத்தின் நலன்கருதி மத்திய அரசை அனுசரிச்சு போகவேண்டி இருக்கு’ ன்னு சொல்லி சமாதனப்படுத்தினாருனு அறிவாலயத்துல சொல்றாங்க.”

”கவர்னரை மாத்தப் போறாங்கனும் நியூஸ் வருதே”

“ஆமாம் முன்னாள் டிஜிபி விஜயக்குமாரை தமிழ்நாட்டு கவர்னரா நியமிக்கலாம்னு டெல்லில பேசுறாங்க. ஆனா அவருக்கு கவர்னர் ஆகிறதுல விருப்பம் இல்ல..குறிப்பா தமிழ்நாட்டுல கவர்னர் ஆகிறதுல அவருக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லைனு சொல்லிட்டாராம்”

“ஈரோடு கிழக்கு தொகுதியில காங்கிரஸ் கட்சிக்கு கமல் ஆதரவு தெரிவிச்சிருக்காரே… இதுக்கு ஏதாவது பின்னணி இருக்கா?”

“அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்ல கமல்ஹாசனுக்கு ஒரு சீட் தர்றதா திமுக தரப்புல சொல்லி இருக்காங்க. அதனாலதான் அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிச்சதா சொல்றாங்க.”

“இது பத்தி பிரஸ் மீட்லயே கேட்டிருக்காங்களே?”

“ஆமாம். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுக்கிறது பத்தி சொல்ல கமல் நடத்துன பிரஸ் மீட்ல ஒரு செய்தியாளர், ‘என்ன எம்.பி.சீட் உறுதி ஆயிடுச்சா’ன்னு கேட்டிருக்கார். அதுக்கு கமல், ‘நான் முதல்வர் வேட்பாளர்னு சொன்னப்ப கிணடலடிக்காத நீங்க, இப்ப அடுத்து எம்.பி.பதவியான்னு கேட்டு கிண்டல் அடிக்கறீங்க. ஏன் நான் எம்.பி ஆகக் கூடாதா’ன்னு கேட்டார். அவருக்கு கொஞ்சம் தர்மசங்கடமான நிலைமைதான். யாருக்கும் ஆதரவு இல்லைனு சொல்லலாம்னு மய்யத்து ஆளுங்க சொல்லியிருக்காங்க. ஆனா சினிமா சூழலையும் கமல் யோசிக்க வேண்டியிருக்கு. இப்போ உதயநிதி கூட நெருக்கமா இருக்கிறார். இது மய்யத்துக்காரங்களுக்குத் தெரியும். அதனால கமலைக் காப்பத்துறதுக்காக காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கிறதுதான் சரினு குரல் கொடுத்து கமலுக்கு வசதி பண்ணி கொடுத்திருக்காங்க. காங்கிரசுக்கு ஆதரவு கிடைச்சது இப்படிதான்”

“ஓஹோ…கதை அப்படியா.. சரி..ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருக்கறதா அடிக்கடி சொல்ற அதிமுக தலைவர்கள் இப்ப ஈரோடு கிழக்கு தேர்தலுக்காக சின்னச் சின்ன கட்சி தலைவர்களைக்கூட சந்திக்கறாங்களே?”

“இதைப்பத்தி சில மூத்த தலைவர்களும் எடப்பாடி கிட்ட கேட்டிருக்காங்க. அதுக்கு எடப்பாடி சிரிச்சுட்டே, ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்’ன்னு சொல்லி இருக்காரு. ’முன்ன தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனாரை ஜெயலலிதா போய் சந்திக்கலையா? பாமக நிறுவனத் தலைவர் ராமதாசை சந்திக்க அதிமுக தலைவர்களை அவர் அனுப்பலையா… அவரே டெலிபோன்ல ஆதரவு கேட்கலையா… அதுபோல இதையும் சாதாரணமா எடுத்துக்கோங்க. திமுகவுக்கு மாற்று நாமதான்னு நிரூபிக்கறதுதான் நம்மளோட இப்போதைய லட்சியம். அதுக்கு எல்லாரையும் அனுசரிச்சுத்தான் போகணும்’ன்னு தலைவர்கள்கிட்ட சொல்லியிருக்காரு எடப்பாடி.”

“பாஜக இன்னும் தன்னோட நிலையை அறிவிக்கலையே?’’

“அண்ணாமலையைப் பொறுத்தவரைக்கும் ஈரோடு கிழக்குல பாஜக நிக்கணும்னுதான் இன்னமும் நினைக்கிறாரு. குறிப்பா அங்க ஏ.பி.முருகானந்தத்தை போட்டியிட வைக்க விரும்பறார். அதுக்காக கட்சி மேலிடத்துல தொடர்ந்து பேசிட்டு வர்றார். பாஜக அங்க போட்டியிட்டா ஓபிஎஸ் கிட்ட ஆதரவு வாங்கிடலாம்னும் நினைக்கறாரு. ஒபிஎஸ்ஸை வச்சு எடப்பாடியை மிரட்டுறதே அண்ணாமலைதான்னு ஒரு பேச்சு இருக்கு”

“அப்ப ஓபிஎஸ் அணி போட்டியிடாதா?”

“நாங்க போட்டியிடறோம்னு ஓபிஎஸ் சொன்னாலும், இன்னும் வேட்பாளரை அறிவிக்கலை. எடப்பாடி வலிமையா இருக்கற கொங்கு மண்டலத்துல அவர்கிட்ட மோதி தோக்கணுமான்னு யோசிக்கறார். இதைத் தவிர்க்க பாஜக போட்டியிட்டா அவருக்கு ஆதரவு கொடுக்கலாம்னு பன்ருட்டியார் ஓபிஎஸ் கிட்ட ஆலோசனை சொல்லி இருக்காரு. சமீப காலத்துல பன்ருட்டியார் யோசனைகள் எதையும் ஓபிஎஸ் தட்டினதில்லை. அதேமாதிரி இந்த யோசனையையும் அவர் தட்ட மாட்டார்னு சொல்றாங்க.”

“எதிர்கட்சிகள் குழம்பிட்டு இருக்கறதால திமுகவுக்கு வெற்றி நிச்சயம்னு சொல்லு”

“நாம அப்படி நினைக்கறோம். ஆனா எதிர்கட்சிகள் இன்னும் வேட்பாளரை நிறுத்தாததால ஈரோடு மாவட்ட திமுக செயலாளர் முத்துசாமி குழம்பிட்டு இருக்காராம். ‘எதிர நிக்கற வேட்பாளர் யார்னு தெரிஞ்சாதானே நம்ம சுறுசுறுப்பா வேலை செய்ய முடியும். இப்ப என்னடான்னா அவங்களும் குழம்பி நம்மலையும் குழப்பறாங்களே’ன்னு தன் ஆதரவாளர்கள்கிட்ட அவர் சொல்லி இருக்காரு.”
”ஆக ஈரோடு எலெக்‌ஷன் எல்லோரையும் குழப்பத்துல வச்சுருக்குனு சொல்ற”

“ஆமாம்…அரசியல்னாலே குழப்பம்தானே” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...