நாடாளுமன்ற தேர்தலில் தனி மெஜாரிட்டி கிடைக்காததை விட அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில் தோற்றுப் போனதுதான் பாஜகவை அதிகமாக அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இத்தொகுதியில் சம்ஜ்வாதி கட்சி வேட்பாளரான அவதேஷ் பிரசாத், 54,500 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரான லல்லு சிங்கை தோற்கடித்தார். ஃபைசாபாத் தொகுதி மட்டுமல்ல, அயோத்தியைச் சுற்றி அமைந்துள்ள மற்ற நாடாளுமன்ற தொகுதிகளான பஸ்தி, அம்பேத்கர் நகர், பராபாங்கி ஆகிய தொகுதிகளிலும் பாஜக தோற்றுள்ளது.
ராமர் கோயில் கட்டியதை வைத்து இந்தியா முழுவதும் வாக்குகளை அள்ளலாம் என்று நம்பியிருந்த பாஜக, அந்த கோயில் கட்டப்பட்ட ஊரிலேயே தோற்றுப் போனதுதான் மிகப்பெரிய சோகம். அயோத்தியில் பாஜக தோற்க என்ன காரணம் என்பதைப் பற்றி பல வடநாட்டு பத்திரிகைகளும் ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி வருகின்றன.
பாஜகவின் தோல்விக்கான முதல் காரணமாக அப்பத்திரிகைகள் சுட்டிக் காட்டும் விஷயம் ஃபைசாபாத் தொகுதியில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் சிறுபான்மை இன வாக்காளர்கள். இந்த தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று பிரச்சாரத்தின் ஆரம்பம் முதலே சொல்லி வந்தது பாஜக. அதே நேரத்தில் பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வென்றால் அரசியல் சாசனத்தை மாற்றி விடுவார்கள் என்றும், இட ஒதுக்கீட்டை நீக்கி விடுவார்கள் என்றும் சமஜ்வாதி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் பிரச்சாரம் செய்துள்ளது..
ஃபைசாபாத் அதிகளவில் உள்ள பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இன மக்கள், பாஜக முழு பலத்தோடு வந்தால் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்ற எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தால் பயந்து போயிருக்கிறார்கள். அதே நேரத்தில் உயர் ஜாதி வாக்குகளை கவர பாஜகவினரும் சில இடங்களில் இட ஒதுக்கீடு ரத்து பற்றி பேசி இருக்கிறார்கள். குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாது என்று பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். பாஜக வேட்பாளரான லல்லு சிங்கே, பாஜக முழு பலத்துடன் வந்தால் அரசியல் சாசனம் மாற்றப்படும் என்று பிரச்சாரத்தில் பேசி இருக்கிறார். இதனால் பாஜக ஆட்சிக்கு வந்தால் தங்களுக்கான சலுகைகள் பறிக்கப்படுமோ என்று அவர்கள் அச்சம் கொண்டிருக்கிறார்கள். அந்த அச்சம் பாஜகவுக்கு எதிரான வாக்குகளாக திரும்பி உள்ளது. அயோத்தி கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில் பாஜக தோற்றதற்கான முதல் காரணம் இது.
அயோத்தியில் கைகப்படுத்தப்பட்ட இடங்கள்:
ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு, சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக அயோத்தியில் பல மாற்றங்களை அம்மாநில பாஜக அரசு செய்துள்ளது. பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், ஹோட்டல்கள் அதிக அளவில் கட்டப்பட்டுள்ளன. இதற்காக பலருக்கு சொந்தமான இடங்களை மாநில அரசு கையகப்படுத்தி உள்ளது. ஆனால் கையகப்படுத்த இடத்துக்கு ஏற்ற மதிப்பில் நிவாரணம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதனால் அயோத்திக்குள்ளேயே மாநில அரசு மீது அதிருப்தி உள்ளது. பாஜகவின் தோல்விக்கு அந்த அதிருப்தி இரண்டாவது காரணமாக கூறப்படுகிறது.
அகிலேஷ் யாதவின் ஜாதிக் கணக்கு
ஃபைசாபாத் தொகுதியில் பிற்படுத்தப்பட்ட மக்கள் 22 சதவீதமும், பட்டியலின மக்கள் 21 சதவீதமும் இருக்கிறார்கள். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் 18 சதவீதம் இருக்கிறார்கள். இதில் இஸ்லாமியர்களின் வாக்குகள் சமஜ்வாதி வேட்பாளருக்கு முதலிலேயே உறுதியானது. அதேநேரத்தில் தங்கள் கட்சி வேட்பாளராக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அவதேஷ் பிரசாத்தை அகிலேஷ் யாதவ் நிறுத்தினார். அவரது கட்சிக்கு ஏற்கெனவே பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் ஆதரவும் இருப்பதால், 3 சமுதாய வாக்குகளும் சேர்ந்து வலுவான வாக்கு வங்கியை உருவாக்கி இருக்கிறது. பாஜகவின் தோல்விக்கு இது 3-வது காரணமாகி உள்ளது.
உள்ளூர் மக்களின் குமுறல்:
அயோத்தியில் கோயில் கட்டப்பட்ட பிறகு, அந்நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் அதன் பயன் அயோத்தி மக்களை சென்றடையவில்லை. உள்ளூர் மக்களுக்கு பதிலாக மற்ற பகுதிகளில் இருந்து அங்கு வந்த வியாபரிகளுக்கே ஓட்டல்கள், கடைகளை அமைக்க சலுகை வழங்கப்பட்டது. இது உள்ளூர் மக்களின் மனநிலையை பாதித்தது. அயோத்தி கோயிலால் தங்களைவிட புதிதாக ஊருக்கு வந்தவர்கள்தான் அதிகம் பயனடைந்தனர் என்பது அவர்களின் குமுறலாக இருந்த்து. இதுவும் இப்போது வாக்குகளாக வெளிப்பட்டுள்ளது.