ஒரே வீட்டில் ஒரு கமர்ஷியல் ஹீரோ, கமர்ஷியல் டைரக்டர் இருந்தால் எப்படி இருக்கும்?
அப்படியொரு குடும்பம் என்றால் எடிட்டர் மோகன் குடும்பத்தை சொல்லாம்.
ஜெயம் ரவி மற்றும் ஜெயம் ராஜா, இவர்கள் இருவரும் எடிட்டர் மோகனின் வாரிசுகள்.
எடிட்டர் மோகன் என்ற பெயர் இந்திய சினிமா உலகில் அவ்வளவு பரிச்சயம். இவரது பெயருக்கென்று ஒரு தனி மரியாதை உண்டு. காரணம் ஐம்பத்தியாறு வருட சினிமா அனுபவம்.
ஒரு கதையாசிரியராக, இயக்குநராக வேண்டுமென்று சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர், இன்று சக்ஸஸ் ஃபுல்லான நட்சத்திர அப்பா. சினிமாவின் முக்கிய துறைகளான தயாரிப்பு, இயக்கம், எடிட்டிங், நடிப்பு என ஒவ்வொன்றிலும் தனது வாரிசுகள் ’ஜெயம்
’ ராஜா, ‘ஜெயம்’ ரவி மூலம் வெற்றிகளை ருசித்துக்கொண்டிருக்கிறார்.
தனது கூட்டுக் குடும்பம் பற்றியும், அதன் வெற்றி ஃபார்மூலா பற்றியும் நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார்.
யார் இந்த எடிட்டர் மோகன்?
தென் தமிழகத்தில் இருந்து பிழைப்பிற்காக, தனது பதிமூன்றாவது வயதில் சென்னை வந்தவர் இவர். கிராமத்து சூழலில் இருந்தவருக்கு சென்னை ஒரு வகையில் அந்நியப்பட்டு இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல், குழப்பத்தில் இருந்தவரை நடிகர் தங்கவேலு தனது மகனாக சுவீகாரம் எடுத்துக் கொண்டார்.
நாட்கள் செல்ல செல்ல தங்கவேலுவின் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னாளில் ஆச்சி மனோரமாவின் கணவருடன் நாடகங்களில் நடித்தார். எவ்வளவு நாட்கள்தான் நடிப்பது என்று மனதிற்குள் ஒரு அயற்சிஸ். சினிமாவில் ஏதாவது செய்ய வேண்டுமென்ற வெறி.
இந்த வெறி இவரை 1959-ல் நெப்டியூன் ஸ்டியோஸில் எடிட்டிங் அஸிஸ்டெண்ட்டாக வேலைக்குச் சேர வைத்தது. எல்லீஸ் ஆர் டங்கனின் அஸிஸ்டெண்ட்டான கோவிந்த சாமியிடம் வேலைப் பார்க்க ஆரம்பித்ததில் தொடங்கியது இவரது சினிமா பயணம்.
’அரசிளம் குமரி’, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’, ‘அமுத வள்ளி’ போன்ற படங்களில் எடிட்டிங் அஸிஸ்டெண்ட்டாக தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. 1960ல் விட்டலாசார்யாவின் தெலுங்குப் படமான ‘குருவின மிஞ்சின சிஷ்யடு’ இங்கே தமிழில் ‘வீரத் திலகம்’ என்றப் பெயரில் வெளிவந்தது. இந்தப்படம் மூலம் மாயஜால வித்தகர் விட்டலாச்சார்யாவுடன் இணைந்து பணியாற்றினார்.
இப்படத்திற்குப் பிறகு 1962-ம் ஆண்டிலிருந்து எடிட்டராக பணியாற்ற ஆரம்பித்தார் மோகன். . எஸ். பாலசந்தரின் ’அந்த நாள்’ படத்தைத் தவிர ஏறக்குறைய முக்கால்வாசி படங்களுக்கு எடிட்டராக பணிபுரியும் அளவிற்கு மோகனின் திறமை பளிச்சிட்டது.
தமிழில் மட்டுமில்லாமல் ஹிந்தி, மற்ற எல்லா தென்னிந்திய மொழிகளிலும் எடிட்டராக பல படங்களுக்கு பணியாற்றி இருக்கிறார்.
1979-ல் எடிட்டர் மோகனாக வலம் வந்தவர் தயாரிப்பாளர் மோகன் ஆகவும் தன்னை உயர்த்திக்கொண்டார்.
எடிட்டரின் மோகனின் சாதனை
சினிமாவில் எடிட்டர் மோகனைப் பார்த்து நான் தான் இவரை எடிட்டராக்கினேன், தயாரிப்பாளர் ஆக்கினேன் என்று யாரும் சொல்ல முடியாது.
சினிமாவில் தனக்கான பாதையை தனக்கு தானே உருவாக்கி கொண்டவர் எடிட்டர் மோகன். யாருடைய உதவியும் இல்லாமல் தனக்குத்தானே ஒவ்வொரு கட்டமாக உயர்த்திக் கொண்டதை சொல்லிக்கொள்வதில் எடிட்டர் மோகனுக்கு அலாதியான சந்தோஷம் இருக்கும்.
பொதுவாகவே படத்தை எடுத்தப்பிறகு, என்னடா படம் இது… எப்படி இதை சுவாரஸ்யமாக்குவது என்ற குழப்பம் ஏற்பட்டால், பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் மனதில் தோன்றும் முகம் எடிட்டர் மோகனின் முகம்தான். மற்ற யாராலும் செய்ய முடியாத பட்சத்தில் அதை சவாலாக ஏற்றுக் கொண்டு சந்தோஷமாக செய்வது இவரது பழக்கம்.
இப்படிதான் ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்த போது அதை எடுத்த விதம் வேறு, ஆனால் கொடுத்தவிதம் வேறு என்று எடிட்டர் மோகனுக்குப் புரிந்தது. உடனே அந்தப் படத்தின் உரிமையை வாங்கிவிட்டார். அப்பொழுதெல்லாம் ஆங்கிலப் படத்தின் ப்ரிண்டை மட்டுமே அனுப்புவார்கள். அதன் நெகட்டிவையும் நானே எடுப்பேன் என்று ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்கினார் எடிட்டர் மோகன். அந்தப் படத்தின் நெகட்டிவை புதிதாகப் போட்டு தன்னுடைய பாணியில் எடிட்டிங் செய்தார்.
ஏறக்குறைய ஆறு மாத காலம். அந்தப்படத்தை தன்னுடைய பாணியில் எடிட் செய்ய செலவிட்டார். இந்தப்படம்தான் 1980-ல் ‘அற்புத மிருகங்களும் ’அதிசய பறவைகளும்’ என்ற பெயரில் வெளியானது.
இந்தப் படம் முதன்முதலில் வெளியான போது மூன்று நாட்கள் கூட ஓடவில்லை. ஆனால் எடிட்டர் மோகன் தன்னுடைய பாணியில் எடிட் செய்து வெளியிட்ட பின் அதே படம் நூறு நாட்கள் ஓடியது.
ஒரு பக்கம் மாபெரும் வெற்றி. ஆனால் ஆறு மாத காலம் ஓய்வில்லாமல் எடிட்டிங்கில் மூழ்கியதால், அவரது உடல் நலம் முற்றிலுமாக முடங்கியது. படுக்கையை விட்டு எழுந்திரிக்க முடியாத அளவுக்குப் பாதிக்கப்பட்டார் எடிட்டர் மோகன். இந்த மாபெரும் முயற்சிக்குப் பின் தொடர்ந்து படங்கள் தயாரிக்க ஆரம்பித்தார். எடிட்டர் மோகன் தயாரிப்பாளர் மோகனாகவும் புதிய அவதாரம் எடுத்தார்.
திருமணம்
1972-ல் திருமணம். இவ்வளவு சீரியஸான ஆளாக இருந்தாலும், இவரது இதயத்திற்குள் காதலும் இதமாய் நுழைந்தது. வரலஷ்மியைப் பார்த்ததும் எடிட்டர் மோகனுக்குள் டபுள் பாசிட்டிவ் உணர்வு உண்டானது. இன்றைக்கும் தன்னுடைய வாழ்க்கையின் அடித்தளமே தன் மனைவி வரலஷ்மிதான் என்று சொல்வது வழக்கம். எந்தவிதமான கவலைகளும் இல்லாமல் எடிட்டர் மோகன் உழைக்க காரணம் வரலஷ்மி.
வரலஷ்மி, புத்திசாலி மட்டுமில்லாமல் படிப்பாளியும் கூட. இவர்கள் திருமணம் செய்துக் கொண்ட போதே வரலஷ்மி பி.ஏ. படித்து முடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகும் படிப்பேன் என்றார் வரலஷ்மி.
மனைவியின் கனவுக்கான பாதையை கைநீட்டிக் காட்டினார் மோகன். இதனால் அடுத்தடுத்து இரண்டு எம்.ஏ. பட்டங்களை வாங்கியவர், இன்றும் தனது வாசிப்பை நிறுத்தியது இல்லை.
வரலஷ்மி எங்கேயாவது வெளியே சென்றால், அங்கிருப்பவர்கள் உங்களுக்கு இந்த ஃபார்ம் நிரப்பத் தெரியுமா என்று அவரிடம் கேட்டிருக்கிறார்கள். பக்கத்தில் இருந்தபடியே இதைக் கேட்டு எடிட்டர் மோகன் சிரித்த தருணங்களும் உண்டு.
காதலுக்கு மரியாதை
எடிட்டர் மோகன் வீட்டில் எல்லா திருமணங்களுமே காதல் திருமணங்கள்தான். இரண்டு மகன்களும், மகளும், காதல்வயப்பட்டு எங்களுக்கு காதல் திருமணம்தான் என்று ஒருவர் பின் ஒருவராக எடிட்டர் மோகன் முன்வந்து நின்றார்கள், இவர்களுக்கு முன்பே அந்தக் காலத்திலேயே காதல் திருமணம் செய்துக் கொண்ட எடிட்டர் மோகனுக்கு காதல் இன்னும் அதிக பரீட்ச்சயம் என்பதால், புன்னகைத்தப்படியே அவர்களின் மனதை நான் புரிந்துக் கொண்டார்.
மூத்த மகன் ராஜா தனது காதலைப் பற்றி பல வருடங்களாக வீட்டில் யாரிடமும் சொல்லவே இல்லை. அப்பாவுக்கு மனவருத்தத்தைக் கொடுக்கக் கூடாது என்று ராஜா காதலை மறைத்துவிட்டார்.
ஆனால் எடிட்டர் மோகன் கில்லாடி. ஒரு நாள் பட்டென்று ராஜாவிடம், ’நீ சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கீயா?’ என்று கேட்டார். கொஞ்சம் அதிர்ச்சிதான் என்றாலும் காதலை விடமுடியாத காரணத்தினால் ’ஆமாம்பா’ என்று ராஜா தைரியத்தை வரவழைத்து கொண்டு சொன்னார்.
’சந்தோஷ் சுப்ரமணியம்’ படம் பார்த்தவர்களுக்கு இப்போது புரியும். அந்த மாதிரியான கதையை ஏன் ராஜா தேர்ந்தேடுத்தார் என்பது.
அப்பா வருத்தப்படக்கூடாது என்று ராஜா நினைக்க, மகன் சந்தோஷமாக இருக்கவேண்டுமென எடிட்டர் மோகன் நினைக்க, அசல் சந்தோஷ் சுப்ரமணியம் உருவானது அங்கேதான்.
அந்த புரிதல்தான் எடிட்டர் மோகன் குடும்பத்தின் பலம்.
கூட்டுக் குடும்பம்
“புரிதல் இருந்தால் உங்களது குடும்பமும் ஒரு சொர்க்கம்தான்.
குழந்தைகளை நாம் புரிந்துக் கொள்வது. அவர்கள் நம்மைப் புரிந்து கொள்வது. இது சரியாக இருந்தாலே போதுமானது. நம்முடைய குழந்தைகள் மீது நமக்கு நம்பிக்கை வேண்டும். அவர்களும் அப்பா அம்மா நமக்காக விட்டுக்கொடுத்து போகிறார்கள். நம்முடைய நன்மைகளுக்காகதான் சில கசப்பான விஷயங்களையும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.
நாம் போட்டுக் கொடுக்கிற பாதை நன்றாக இருந்தால் அதில் அவர்கள் சந்தோஷமாக பயணப்படுவார்கள். இல்லையென்றால் அதை தூங்கி எறிந்து விட்டு வேறு பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள். இதைப் புரிந்து கொள்வது அவசியம்.
என் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களோடு என்னுடைய கஷ்ட நஷ்டங்களையும் சேர்த்தே கற்றுக் கொடுத்து பழக்கியிருக்கிறேன். எனக்கு கடன் இருந்தால் இவ்வளவு கடன் இருக்குதுப்பா என்று குழந்தைகளிடம் பகிர்ந்துக் கொண்டிருக்கிறேன்.
நல்ல விஷயங்களை மட்டுமே கற்றுக் கொடுத்தால் பின்னாளில் அவர்கள் தவறான வழிகளிலும் போக வாய்ப்புகள் இருக்கலாம். வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வரவேண்டுமென்றால் இப்படிபட்ட விஷயங்களையும் குழந்தைகளோடு பகிர்ந்துக் கொள்வது அவசியம்.” என்பார் எடிட்டர் மோகன்.
வாரிசுகளுக்கு கற்றுக் கொடுத்தது
எந்த சூழ்நிலையிலும் மனுஷனாக இருங்கள் என்பதுதான் எடிட்டர் மோகன் தனது மகன்களுக்கு கற்றுக் கொடுத்த விஷயம்.
’’சினிமா என்பது ஒரு தொழில். அதை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். சினிமாவில் தனியொரு மனிதனாக வெற்றி பெற முடியாது. கூட்டு முயற்சியால் மட்டுமே அது சாத்தியம். நீ எல்லோரையும் மதித்தால் அவர்கள் எல்லோரும் உன்னை மதிப்பார்கள்.
ஒரு நடிகன், இயக்குநர், தயாரிப்பாளர் என்றால் அவர்கள் தனியாக கிரீடம் எதுவும் தனியாக வைத்துக் கொண்டா பிறக்கிறார்கள்? ஷூட்டிங்கின் போது ஒரு நடிகனாகவோ, இயக்குநராகவோ இருப்பது உன் தொழில். ஷூட்டிங் முடிந்ததுமே நீயும் ஒரு சாதாரண மனிதன் தான். அதை முதலில் புரிந்துக் கொள். நடிகன் என்ற உணர்விலேயே இருக்காதே. மனிதர்களோடு ஒன்றாக கலந்து விடு என்று தனது மகன்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.
ஒரு நல்ல கண்ணாடி என்றால் அதை மீண்டும் மீண்டும் பார்க்கலாம். ஒரு கெட்ட கண்ணாடி என்றால் அதை ஒரு முறைக்கு மேல் நீங்கள் பார்க்க விரும்ப மாட்டீர்கள். அதைப் போல்தான் நம்முடைய பழக்க வழக்கங்கள் என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறேன்” என்று அடிக்கடி எடிட்டர் மோகன் சொல்வது வழக்கம்.
மருமகள்கள்
”எடிட்டர் மோகன் மற்றும் வரலஷ்மிக்கு இரண்டு மருமகள்கள். அவர்கல் இரண்டு பேருமே எடிட்டர் மோகனை மாமா என்று அழைத்தது இல்லை. அப்பா.. அப்பா.. என்றுதான் உரிமையோடு அழைக்கிறார்கள்.
எடிட்டர் மோகன் வீட்டிற்கு சென்றால் யார் மருமகள், யார் மகள் என்று கண்டுபிடிப்பது பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்கைவிட ரொம்பவே கடினமானது.
தனது மருமகள்கள் பற்றி எடிட்டர் மோகன் சொல்லும் போதே உற்சாகம் உருவாவதைப் பார்க்கமுடியும். ‘குடும்பத்தின் தலைவர் எப்படியோ அப்படிதான் குடும்பம். இதில் ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். இதையெல்லாம் நான் அனுபவித்ததால் சொல்கிறேன். மூத்த மருமகள் பிருந்தா. ராஜாவுடன் டி.எஃப்.டி படித்த பெண். கேமரா மீது ஆர்வமுள்ள பெண். இப்போது பிருந்தா எங்கள் வீட்டிற்கு வந்த பிறகு ராஜாவையும், குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.
இரண்டாவது மருமகள் ஆர்த்தி. ஸ்விஸ்ஸில் படித்த பெண். இருந்தாலும் இன்னும் எளிமையாகவே இருக்கிறாள். எல்லாவிதமான விஷயங்களிலும் அறிவு உள்ள புத்திசாலிப் பெண். அவள் படித்த படிப்பிற்கு இப்படி குழந்தையை அக்கறையாகப் பார்த்துக் கொள்ள முடிகிறதா என்று ஆச்சர்யப்பட்டு பார்ப்பது உண்டு.” என்று தனது [மரு]மகள்களைப் பற்றி மோகன் சிலாகித்து சொல்வார்.
உறவுகள்
எடிட்டர் மோகன் வீட்டில், லிங்குசாமியின் ’ஆனந்தம்’ படத்தின் காட்சியகளை லைவ்வாக பார்க்க முடியும். ஒரே காரணம் எடிட்டர் மோகன் சொல்லும் இந்த அனுபவ வார்த்தைகள்தான். ”மனித உறவுகள் புனிதமானவை. அவற்றின் ஆசாபாசங்கள் எல்லை மீறி போகும்போதுதான் முறை கெட்டு போகின்றன. உதாரணத்திற்கு மதுவை ஒரளவு குடித்தால் நல்லது என்கிறார்கள். அதுவே அளவுமீறும் போது என்னவாகிறது. இதைப் போலதான் உறவுகளும். ஆனந்தத்தின் எல்லையே துக்கம். அதனால் அதன் அளவை மீறிப்போகும் தான் விபத்து நடக்கிறது.”
மகன்களின் ப்ளஸ்
தன்னுடைய மகன்களை அவர்கள் ஆசைப்பட்டார்கள் என்று உடனடியாக சினிமாவிற்குள் இறக்கிவிடவில்லை. அவர்களுக்கு அதற்கான தகுதிகள் இருக்கிறதா என்று தெரிந்து கொண்டே பிறகே களத்தில் இறக்கினார் எடிட்டர் மோகன். இங்கு அவர் அப்பாவாகவும், சினிமா வாத்தியாராகவும் இருந்ததை இப்பொது சொல்லும் போது பலமாக சிரிப்பார்.
”2001-ல் வெளியான ‘தென்காசிப் பட்டினம்’ படத்தை தெலுங்கில் ‘அனுமான் ஜங்ஷன்’ என்றப் பெயரில் தெலுங்கில் எடுத்தேன். என் மகன் ராஜா அப்படத்தை இயக்கினான். ராஜா தொழில்ரீதியாக எல்லோரிடமும் அணுகும் முறை பிரமாதமாக இருக்கும். அதில் டாம்பீகம், அதிகாரம் எதுவுமிருக்காது. ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் நினைத்ததை பொறுமையோடு கேட்டு வாங்கிவிடுவான். ஒரு இயக்குநருக்கான திறமை அவனிடம் இருப்பதை இதன்மூலம் உணர்ந்தேன்.
ரவி நல்ல நடிகனாக வருவான் என்று தோன்றியது. இயற்கையிலேயே அவனிடம் அந்த திறமைகள் இருந்தன. அதனால் அவனது பன்னிரெண்டாவது வயது வரை பரத நாட்டியம் படிக்க வைத்தேன். ’பவர்’ பாண்டியன், கனல் கண்ணன், பீட்டர் ஹெய்ன் இவர்களிடம் சண்டைப் பயிற்சி எடுத்துக் கொண்டான். விஷூவல் கம்யூனிகேஷன் முடித்த பிறகு மும்பைக்குச் சென்று நமீத் கபூரின் ஆக்டிங் இன்ஸ்டிடியூட்டில் நடிப்புப் பயிற்சி பெற்றிருக்கிறான்.
ரவி ஒரு இயக்குநரின் நடிகனாக இருக்கிறான். இயக்குநருக்கு என்ன தேவையோ அதை முழுமையாக கொடுப்பதில்தான் அவன் கவனம் முழுவதும் இருக்கும். படைப்பு.என்பது ஒரு இயக்குநரின் கற்பனை. அதற்கான முக்கியத்துவத்தை கொடுப்பதுதான் அவனது பலம்.” என்று ஜெயம் ரவியும், மோகன் ராஜாவும் சினிமாவிற்குள் நுழைவதற்கான காரணத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார் எடிட்டர் மோகன்.
தீராத ஆசை
”ஓயாத அலையாகவே கடைசி வரை இருக்க விரும்புகிறேன். ஐம்பத்தியாறு வருடங்கள் இதே சினிமாவில் இரவுப் பகல் என பாராமல் உழைத்த உழைப்பிற்கு எனக்கு அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. இந்திய அளவில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டியவன் நான். அது எனக்கு இன்று கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் அது எல்லாமும் என் மகன்கள் மூலமாக கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. நான் ஆசைப்பட்ட விஷயங்கள் என்னால் முடியாமல் போன போது என் குழந்தைகள் அதைவிட அதிகம் சாதிக்கக் கூடிய திறமையுடன் இருப்பதை உணர்கிறேன். ஒரு அப்பாவாக என் குழந்தைகளை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்..” என்கிற எடிட்டர் மோகனின் இரண்டு கண்களிலும் ஆனந்த கண்ணீர்.