ஏறக்குறைய 730 நாட்களுக்குப் பிறகு, இறுதியாக 69-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
28 இந்திய மொழிகளில் இருந்து சுமார் 280 படங்கள், 2021-ல் தேசிய விருதிற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ப்யூச்சர் ஃப்லிம் வகையில் மொத்தம் 31 பிரிவுகள். நான் – ப்யூச்சர் ஃப்லிம் வகையில் 24 பிரிவுகள். ஸ்க்ரிப்ட் ரைட்டிங்கில் மொத்தம் 3 பிரிவுகள்.
இப்படி ஏகப்பட்ட போட்டி. இந்த மாபெரும் போட்டியில் பலர் எதிர்பார்த்த திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை. எதிர்பார்க்காத கமர்ஷியல் படங்களுக்கு விருதுகள் கிடைத்திருக்கின்றன. எதிர்பார்த்த கமர்ஷியல் படங்களுக்கு மிக அதிகமாகவே விருதுகள் குவிந்திருக்கின்றன.
தமிழில் வெளியான ‘ஜெய்பீம்’ படத்திற்கு விருதுகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கும் விருதுகள் கிடைக்கும் என ஆவலோடு இருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறந்த நடிகருக்கான விருதை ‘புஷ்பா – த ரைஸ்’ படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜூன் தட்டிச் சென்றிருக்கிறார்.
ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாவே இப்போது அல்லு அர்ஜூனை தூக்கி வைத்து கொண்டாடுகிறது. இதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது. 68 வருட தேசிய விருதுகள் வரலாற்றில், முதல் முறையாக தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நட்சத்திரம் என்ற பெருமையை அல்லு அர்ஜூன் தன் வசமாக்கி இருக்கிறார்.
‘Pushpa: The Rise – Part 01’ படத்தில், ஆந்திராவின் சித்தூரில் இருக்கும் சேஷாசலம் மலைப்பகுதிதான் கதையின் களம். ஒரு சாதாரண கூலி புஷ்பராஜ் எப்படி சந்தனக்கட்டை கடத்தல் சிண்டிகேட் ஆக விஸ்வரூபம் எடுக்கிறார் என்பதே கதை.
தனது உடல் மொழியால் மிரட்டிய அல்லு அர்ஜூன் இன்று தேசிய விருதை வென்று புஷ்பா வெறும் ஃப்ளவர் இல்ல. ஃபயர் என்று நிரூபித்திருக்கிறார்.
யார் இந்த அல்லு அர்ஜூன்??
தெலுங்கு சினிமா வட்டாரத்தில் அல்லு அர்ஜூனின் செல்லப்பெயர் ‘Bunny’. தெலுங்கு சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர் அல்லு ராமலிங்கையா. இவரது மகன் அல்லு அரவிந்த். இன்று அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்.
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாராக கொண்டாடப்படும் சிரஞ்சீவியின் மனைவி சுரேகா, அல்லு அர்ஜூன் அப்பாவுடன் கூட பிறந்த சகோதரி.
இப்படி அல்லு அர்ஜூனின் குடும்பமே ஒரு பக்காவான சினிமா குடும்பம். இதனால் 1985-ல் குழந்தையாக இருக்கும் போதே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் அல்லு அர்ஜூன்.
2003-ல் கங்கோத்ரி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான அல்லு அர்ஜூன் ‘புஷ்பா’ படம் மூலம் இன்று இந்திய முழுவதும் பரிச்சயமான முகமாக, பான் – இந்திய நட்சத்திரமாக அபார வளர்ச்சி கண்டிருக்கிறார்.
என்.டி. ராமாராவ், நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா, சிரஞ்சீவி, மகேஷ் பாபு என பெருந்தலைகளே தேசிய விருதை இதுவரை பெற்றது இல்லை. இதனால் அல்லு அர்ஜூனை ஏகோபித்த அன்போடு ஆரத்தழுவியிருக்கிறது தெலுங்கு சினிமா.
அல்லு அர்ஜூன் தேசிய விருதை கைப்பற்றி இருக்கையில், இப்போது ஒரு ஜோதிடர் சொன்னது வைரல் ஆகி வருகிறது.
ஆந்திராவின் பிரபல ஜோதிடர் வேணு ஸ்வாமி. இவர் அல்லு அர்ஜூனின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, ’புஷ்பா – த ரூல்’ அதாவது புஷ்பாவின் இரண்டாம் பாகம் மெகா ஹிட் ஆகும். அல்லு அர்ஜுனின் ஜாதகம் அமோகமாக இருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் தெலுங்கில் உண்மையான பான் – இந்தியா நட்சத்திரம் என்றால் அது அல்லு அர்ஜூன்தான். அவரை மேல் ஒரு கட்டினால் உங்களுக்கு பத்து ரூபாய் நிச்சயம். அடுத்த 10 வருடத்திற்கு அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை.’’ என்று தேசிய விருது வாங்குவதற்கு முன்பாகவே கூறியிருந்தார்.