கொரோனா என்றாலே பஞ்சாயத்துதான் போல.
சமீபத்தில் கொரோனாவினால் கோவிஷீல்ட் சர்ச்சைக்குள்ளானது. இப்போது கொரோனா குமாரால் சிம்பு சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார்.
சிம்புக்கு என்ன சிக்கல்?
சிம்பு கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் தேசிங்கு இயக்கத்தில் ஒரு படம் நடிப்பதாக முடிவானது. ஆனால் எதிர்பார்த்தது போல் ராஜ் கமல் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனலுடன் இணைந்து படம் தயாரிக்க வேறெந்த கார்பொரேட் நிறுவனங்களும் முன்வராத காரணத்தால், கமல் படம் தயாரிக்கும் திட்டத்தையே கிடப்பில் போட்டுவிட்டார்.
இந்நிலையில்தான், கமலும் மணிரத்னமும் மீண்டும் இணையவிருக்கும் படமான ‘தக் லைஃப்’ படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகியதால், அவருக்குப் பதிலாக சிம்பு நடிப்பார் என்று முடிவானது.
இதைப் பார்த்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ‘கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ’தக் லைஃப்’ படத்தில் சிம்பு நடிக்க கூடாது. சிம்பு ஒப்புக்கொண்டபடி ‘கொரோனா குமார்’ படத்தை சிம்பு நடித்து முடித்து கொடுக்கவில்லை. இதனால் கொரோனா குமாரை முடித்து கொடுக்காத சிம்பு மேல் ரெட் கார்ட் போடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் எங்கள் தரப்பிற்கு நியாயம் வேண்டுமென தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்புதான் இதே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், திருப்பதி ப்ரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக, கமலின் ஒத்துழையாமையைக் குறித்து ஒரு புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
’உத்தமவில்லன்’ படத்தின் நஷ்டத்தைச் சரிகட்டும் வகையில், 30 கோடி பட்ஜெட்டில் கமல் திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் எடுத்து தருவதாக கூறி 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றுவரை கமல் அதற்கான் ஆர்வத்தை காட்டவில்லை. அதனால் கமல் படம் எடுத்து தர வைக்க உதவ வேண்டுமென திருப்பதி ப்ரதர்ஸ் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, கமல் 9 வருடங்களாக சொன்ன வாக்கை காப்பாற்றாமல் இருப்பதால், நஷ்டமடைந்த திருப்பதி ப்ரதர்ஸூக்கு படம் எடுத்து கொடுக்காமல் இழுத்தடிப்பதால் கமலுக்கு ரெட்கார்ட் கொடுக்கவேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு குழுவினர் குரல் எழுப்பி வருகிறார்கள்.
இப்படி கமலுக்கும், சிம்புவுக்கும் எதிராக இப்போது குரல்கள் வலுக்க ஆரம்பித்திருக்கின்றன.
’உத்தமவில்லன்’ பின்னணி பற்றி சமீபத்தில் ‘வாவ் தமிழா’வில் எழுதியிருந்தோம்.. அதனால் இப்போது ‘கொரோனா குமார்’ பின்னணி என்னவென்று பார்க்கலாம்.
சொல்லிக் கொள்கிற மாதிரியான ஹிட் படங்கள் அமையாததால், கோலிவுட் பக்கம் அதிகம் தென்படாமல் இருந்த சிம்புவுக்கு ‘மாநாடு’ படம் வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து அவருக்கு ‘வெந்து தணிந்தது காடு’ பட வாய்ப்பு வந்தது. இதை ஐசரி கணேஷ் தயாரித்து இருந்தார்.
இந்தப்படம் நிகழும் போது ஐசரி கணேஷூக்கும், சிம்புவுக்கு நல்ல உறவு ஏற்பட்டது. இதனால் சிம்புவுக்கு ஒரு கோடி ரூபாயை முன்பணமாக கொடுத்து, அடுத்தப்படமும் நம்முடைய தயாரிப்பிலேயே இருக்கட்டும் என்று ஐசரி கணேஷ் சிம்புவுடன் கைக்குலுக்கினார். அதேவேகத்தில் சிம்புவின் அடுத்த இரண்டுப் படங்களையும் ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃப்லிம் இண்டர்நேஷனல் தயாரிப்பதாக முடிவானது.
இதை கொண்டாடும்வகையில்தான் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சிம்புவுக்கு பல லட்சம் மதிப்புள்ள காரை ஐசரி கணேஷ் பரிசளித்தார்.
இதையடுத்து ‘வெந்து தணிந்தது காடு’ இரண்டாம் பாகம் எடுக்கப்படலாம் என்ற சூழல் உருவானது. இரண்டாம் பாகத்திற்கான கதையை நகர்த்துவதில் கொஞ்சம் காலம் எடுத்தது. அதனால் ‘கொரோனா குமார்’ என்ற புதிய படமெடுக்கலாம் என்று முடிவானது. சிம்புவும் நடிக்க ஒப்புக்கொண்டார்.
’இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற பட த்தை இயக்கிய கோகுல், கொரோனா குமாரை இயக்குவார் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் நாட்கள் இழுத்து கொண்டு போனதே தவிர கொரோனா குமார் ஷூட்டிங் தொடரவில்லை.
சிம்பு அந்தப் படத்திலிருந்து விலகுவதாக கூறிவிட்டார். இதற்கு காரணம் அப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவையும் நடிக்க வைக்கலாம் என்று சிம்பு சொன்னதாகவும், ஆனால் இயக்குநர் கோகுல் மறுத்ததாகவும், இதனால் கோபமடைந்து சிம்பு வெளியேறியதாகவும் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது.
ஆனால் உண்மையில் சம்பள பிரச்சினைதான் சிம்பு வெளியேறியதற்கு காரணம் என்கிறார்கள்.
சிம்பு ‘கொரோனா குமார்’ படத்திலிருந்து வெளியேறியதால் வேல்ஸ் ஃப்லிம்ஸ் அப்போதே நீதிமன்றத்தை நாடியது. சிம்பு வேறெந்த படத்திலும் நடிக்க கூடாது. 2021-ல் அவருக்கு வேல்ஸ் ப்லிம் இண்டர்நேஷனல் பேசிய 9.5 கோடி சம்பளத்தில் 4.5 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
ஆனால் ஜூலை 16, 2021 அன்று நீதிமன்றம் சிம்புவுக்கும், வேல்ஸ் ப்லிம் இண்டர்நேஷனலுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தம் ஆவணத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு கோடி மட்டுமே கொடுக்கப்பட்டிருந்ததும், 4.5 கோடி கொடுத்ததாக கூறப்படுவது குறித்து எங்கேயும் குறிப்பிடவில்லை என தெரியவந்தது.
ஆனால் தயாரிப்பு நிறுவனமோ, சில வங்கி பரிவர்த்தனைகளையும் குறிப்பிட்டு, ரொக்கமாகவும் பணம் கொடுத்திருப்பதாக நீதிமன்றத்தில் கூறியது. நீதிபதியோ இந்த தொகையானது கொரோனா குமார் படத்திற்காக கொடுக்கப்பட்ட தா அல்லது வேறு காரணத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பினார்.
இப்படியாக இழுத்து கொண்டே போன கொரோனா குமார் பஞ்சாயத்து இப்போது கமலின் உத்தமவில்லன் பிரச்சினை பூதாகரமான நிலையில் கிளம்பியிருக்கிறது.
இந்த பிரச்சினைகளில் இவர்கள் இருவருக்கும் ரெட் கார்ட் விதிக்கப்பட்டால், முதலில் பாதிக்கப்படுவது ‘தக் லைஃப்’ படம்தான்.
தேர்தலின் போது கமல் ஒரு சார்பு நிலையை எடுத்ததால், அவருக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே இம்முயற்சி பெரிதாக்கப்படலாம் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். அதேநேரம் கமல் இன்றைய அரசியலின் வாரிசுத் தலைமைக்கு மிக நெருக்கமாக இருக்கிறார். அதனா, கமலுக்கு இருக்கும் நெருக்கடியை அவர் எளிதில் சமாளித்துவிடுவார் என்றும் கூறுகிறார்கள்.