தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் – குறிப்பாக ரஜினி ரசிகர்கள் மறக்க முடியாத நடிகர் சரத் பாபு.
முள்ளும் மலரும் படத்தில் துவங்கி நெற்றிக் கண், வேலைக்காரன் என தொடர்ந்து அண்ணாமலை, முத்து என்று ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர்.
ரஜினி படங்கள் மட்டுமல்ல தமிழின் பல திரைப்படங்களில் முக்கியமான கேரக்டர்களில் சரத்பாபு நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான பாபி சிம்ஹாவின் வசந்த முல்லை படத்தில் கூட சரத்பாபு நடித்திருக்கிறார். 200 திரைப்படங்களுக்கு மேலாக நடித்தது மட்டுமில்லாமல் பல டெலிவிஷன் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
முள்ளும் மலரும் படத்தில் ஜீப்பில் ஷோபாவை ஏற்றிக் கொண்டு மலைப் பாதையில் ‘செந்தாழம் பூவில்’ பாட்டைப் பாடிக் கொண்டே ஜீப் ஓட்டும் காட்சியை தமிழர்கள் யாரும் மறக்க முடியாது.
அதே போல் அண்ணாமலை படத்தில் ரஜினியின் உயிர் நண்பனாக வருவார். பிறகு எதிரியாக மாறுவார். ரஜினி அவரிடம் சவால் விடும் காட்சி இன்றும் நினைவில் நிற்கும் காட்சி.
அந்த சரத்பாபு இப்போது உயிருக்கு போராடிக் கொண்டு ஆஸ்பத்தியில் ஐசியுவில் படுத்திருக்கிறார்.
என்ன நடந்தது?
சரத்பாபுவுக்கு இப்போது 71 வயதாகிறது. சில நாட்களுக்கு முன் அவர் பெங்களூரு சென்ற போது அவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
அங்கு உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கொஞ்சம் தேறினார்.
ஏப்ரல் 20 ஆம் தேதி பெங்களூரிலிருந்து சரத்பாபுவை ஐதராபாத் ஏஐஜி மருத்துவமனையில் (AIG Hospitals) சேர்க்கப்பட்டார். அங்கு மீண்டும் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. இப்போது அவர் வெண்டிலேட்டர் சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கிறார்.
சரத்பாபு செப்சிஸ் (Sepsis) நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். செப்சிஸ் நோய் உயிரைப் பாதிக்கும் அபாயகரமான நோய். பாக்டீரியாக்களின் தாக்கத்தால் இந்த நோய் வருகிறது. செப்சிஸ் வந்தால் இம்யூன் சிஸ்டம் எனப்படும் உடலின் நோய் எதிர்ப்பு முறை வெகுவாய் பாதிக்கப்படுகிறது. இதனால் இரத்தம் அழுத்தம் குறையும், இதயம், கிட்னி, நுரையீரல் போன்ற முக்கிய உடல் பாகங்களை செயலிழக்க வைக்கும்.
ஆரம்பத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்த நோயின் பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்கு கொஞ்சம் வாய்ப்புகள் இருக்கிறது. அதற்கு வயதும் சாதகமாக இருக்க வேண்டும்.